Sunday, August 30, 2009

அமெரிக்க ஈயங்களும், இந்தியத் தங்கங்களும்!

பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி ஜூன் 2008ல் பெரும் நெருக்கடியாக உருவாக அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் அபாய கட்டத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவிற்கு அபாய கட்டத்தில் வங்கிகள் எண்ணிக்கை இருப்பது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு நிகழ்ந்துள்ளது. 1994 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) 434 வங்கிகள் அபாய கட்டத்தில் இருந்தன. அமெரிக்காவின் மத்திய காப்பீட்டுக்கழகம் இந்த நஷ்டத்தில் தத்தளிக்கும் வங்கிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நெருக்கடி தீர்ந்து விட்டது, இதோ... தீரப்போகிறது என்றெல்லாம் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டிருக்கும் வேளையில்தான் மரணப்படுக்கையில் படுக்கும் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் அபாய கட்டத்தில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கை 315 என்று கணக்கிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள், நெருக்கடி உச்சத்திற்குச் சென்று விட்டது என்றார்கள். ஆனால் மேலும் 111 வங்கிகள் அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பது சிக்கல் நீடிப்பதையே உணர்த்துகிறது. அதோடு, 2009ல் இழுத்து மூடப்பட்டு பெரிய, பெரிய பூட்டுகள் தொங்கும் வங்கிகளின் எண்ணிக்கையும் 81 ஆக உயர்ந்துள்ளது. அபாய கட்டத்தில் இருக்கும் வங்கிகளில் போடப்பட்டுள்ள பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மக்களின் தோள்களைத் தட்டிக் கொடுக்க முயற்சிக்கும் அமெரிக்க மத்தியக் காப்பீட்டுக்கழகம் வேலையிழந்துள்ள ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களை அலட்சியப்படுத்தியுள்ளது.


இவ்வளவு திவால் மற்றும் அபாய கட்டத்தில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இருந்தபோதும், இரண்டாவது காலாண்டில் வந்த அனைத்து செய்திகளும் மோசமானவை அல்ல என்று கூறிக்கொள்கிறார் காப்பீட்டுக்கழகத்தின் தலைவர் ஷீலா பேர். இரண்டாவது காலாண்டில் மட்டும் அமெரிக்க வங்கிகளின் இழப்பு 18 ஆயிரத்து 500 கோடியாக இருந்திருக்கிறது. முந்தைய இழப்புகளையெல்லாம் காப்பீட்டுக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்தான் இந்த இழப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. தனது கல்லாவில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் இருப்பதையே காப்பீட்டுக்கழகம் சுட்டிக்காட்டிக் கொள்கிறது. நெருக்கடி இப்படியே போனால் காப்பீட்டுக்கழகத்தின் நிலை என்ன ஆகும் என்று ஷீலா பேர் கூறவில்லை.


ஆனால் அரசு கஜானாவிலிருந்து காப்பீட்டுக்கழகம் கடன் வாங்கிக் கொள்ளும் என்கிறார். இந்தக்கழகம் தலையீடு செய்துள்ள நிதி நிறுவனங்களில் 28 சதவிகித நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் நஷ்டம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த சதவிகிதம் 18 சதவிகிதமாகவே இருந்தன. கடன் வழங்கி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க 3 லட்சத்து 34 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அமெரிக்க வங்கிகள் இரண்டாவது காலாண்டில் ஒதுக்கி வைத்திருந்தன. இதுவும் கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஒதுக்கி வைத்ததை விட அதிகமாகும். இதற்கிடையில் காப்பீட்டுக்கழகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நிதிநிறுவனங்களின் கணக்கு வைக்கும் முறையையும் அமெரிக்க நிதித்துறையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஜான் டுகான் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். சாதனை படைக்கும் அளவில் வீட்டுக்கடன் வழங்கி வரும் வேளையில் லாபத்தைச் சம்பாதித்தன அமெரிக்க வங்கிகள். நஷ்டம் ஏற்பட்டால் வைத்திருக்க வேண்டிய இருப்பு நிதியின் அளவும் அந்த நேரத்தில் அதிகரிக்காமல் குறைந்து கொண்டே போனது எப்படி என்று அவர் கேள்வி எழுப்புகிறார். நஷ்டம் ஏற்பட்டபோது அதைச் சமாளிக்க கைவசம் இருப்பு நிதி இல்லாமல் போனதும் அபாயப் பட்டியல் நீண்டுகொண்டு போவதற்கு ஒரு காரணம் என்பதை அவரது இந்த எச்சரிக்கை காட்டுகிறது. திடீரென்று நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான இருப்பு நிதியை வங்கிகள் அதிகரித்தபோது வருமானம் மட்டுமல்லாமல், முதலீட்டிலேயே கைவைக்க வேண்டியிருந்தது என்கிறார் டுகான்.

அமெரிக்க காப்பீட்டுக்கழகத்திடம் இருக்கும் அவசரகால நிதியில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை இரண்டாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ள வங்கிகளே விழுங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணத்தில் மேலும் நிதி தாருங்கள் என்று அமெரிக்க அரசிடம் காப்பீட்டுக்கழகம் கையேந்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஈயங்களுக்கும், ஐரோப்பிய பித்தளைகளுக்கும் நடுவில் இந்திய வங்கிகள் தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய வங்கிகள் பொதுத்துறையில் இருப்பதே நெருக்கடியிலிருந்து தப்பித்ததற்குக் காரணம் என்று அதை தனியார் மயமாக்கும் முயற்சியில் இருப்பவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். பொதுத்துறையில் வங்கிகள் நீடித்ததற்கு காரணமான இடதுசாரிக்கட்சிகளின் பேச்சைக் கேட்கிறார்களோ இல்லையோ, சொந்த வாக்குமூலத்தின்படி நின்றாலே வங்கித்துறை காப்பாற்றப்படும் என்பதுதான் பல பொருளாதார நிபுணர்களின் கருத்து.

No comments:

Post a Comment