Friday, December 31, 2010

கிரிமினல்கள் வீரர்களானால்...??


தங்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாக சக ராணுவத்தினர் மீது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் 3 ஆயிரத்து 230 புகார்களை அளித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்கப் பத்திரிகையாளரான தஹர் ஜமாயில் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்தப்பிரச்சனை ஒன்றும் புதிதல்ல என்று தனது ஆய்வறிக்கையிலேயே அவர் குறிப்பிடுகிறார். ஆனால், 2009 ஆம் ஆண்டில் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறிவிட் டது. பாலியல் கொடுமைகளை 2008 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2009 ஆம் ஆண்டில் 11 விழுக்காடு அதிகரித்தது என்கிறார் அவர்.

அவரது ஆய்வு பல அதிர்ச்சிகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகையில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானோம் என்று மூன்றில் ஒரு பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதில் கொடுமை எ னவென்றால், அமெரிக்க சிவில் சமூகத்தில் நடப்பதைவிட, இரண்டு மடங்கு அதிகமான அளவில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் கொடுமைகள் நடந்து வருகின்றன.

இந்தக்கொடுமைகள் பற்றி அமெரிக்க சமூக ஆர்வலர்கள் கடுமையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு போர் புரிவதற்காகச் செல்லும் பெண் ராணுவத்தினர், போரில் குண்டு துளைத்து கொல்லப்படுவதை விட, சக ஆண் ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வாய்ப்புகள்தான் அதிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன என்று அமெரிக்க ராணுவத்தலைமையகமான பென்டகன் நடத்திய ஆய்விலேயே தெரிய வந்துள்ளது.


அமெரிக்க ராணுவத்திற்குள் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த விபரங்களை வெளியிட ராணுவத் தலைமையகம் மறுத்து வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்க சிவில் உரிமைகள் கழகம் உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் வழக்குத் தொடுத்தன. பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லைகள் போன்றவை எந்த அளவுக்கு ராணுவத்திற்குள் நடக்கின்றன மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன ஆகிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரியுள்ளன. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை மறைப்பது சுதந்திரத் தகவல் சட்டத்திற்கு விரோதமானது என்று அந்த அமைப்புகள் குறை கூறியுள்ளன.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களால் அமெரிக்க ராணுவத்திற்கு கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டனர். இந்த ஆட்பற்றாக்குறையைப் பயன்படுத்தி குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள்கூட ராணுவத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பத்தாண்டுகளுக்கு முன்பு கிரிமினல்களாக இருந்தவர்கள் தற்போது அமெரிக்க ராணுவத்தினராகக் காட்சியளிக்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல்களையும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Thursday, December 30, 2010

தலித்தா... நாற்காலி கிடையாது, போ...!!

தலித் என்ற ஒரே காரணத்தால் அரசுப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நாற்காலி மறுக்கப்பட்ட அவலம் நேர்ந்துள்ளது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில்தான் இந்தக் கொடுமை.

2005 ஆம் ஆண்டில் பணியில் அமர்ந்த அவர், முதல்நாள் முதல் இன்று வரை தரையில் அமர்ந்துதான் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நாற்காலியில் அவர் அமர்வதை மற்ற ஆசிரியர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் அவர் கடந்த மாதத்தில் புகார் கொடுத்தார்.

அவர் புகாரை ஏற்றுக்கொண்டு தலைமையாசிரியர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். போனவர், திரும்பியும் வந்துவிட்டார். இருப்பினும் ஆதிக்க சாதி மனப்பான்மை கொடிகட்டிப் பறக்கிறது. நாற்காலி தர இன்னும் மறுத்தே வருகிறார்கள். ஆசிரியையின் உரிமைப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, December 28, 2010

மதம் மாறியும் ஒழியாத சாதிப்பீடை..!



சென்னையில் நல்ல வேலையில் இருப்பவர் ஜெயன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பல திருமணப்பதிவு மையங்களிலும் பதிவு செய்து இருந்தார்.

அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.

மதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.

சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.

பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.

நகரம் விரிவடைகையில் தலித்துகளை சிறைப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களின் சுவர்கள், சாதி வெறியர்களின் முன்பாக தலித்துகள் செல்போனில் பேசவியலாமை போன்ற நவீன தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலில் திருமணப் பதிவில் சாதி தடையில்லை என்று கூறிவிட்டு தலித்-பழங்குடி வேண்டாம் என்று சொல்லும் கொடுமையும் சேர்கிறது.

Monday, December 20, 2010

"பொறுக்கத்" துவங்கிய புரட்சிக்காரர்கள்!




என்.டி.சி(தேசிய பஞ்சாலை கழகம்) மில் தொழிற்சங்க அங்கீகாரத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் மூவாயிரம் வாக்காளர்கள்தான் என்றாலும் பரபரப்பாகவே இது நடந்தது. ஓட்டுப்பொறுக்கிகள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்துச் சொல்லி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாக்குகள் கேட்டது(பொறுக்கியது!!) பலரின் கண்களை விரிய வைத்தது. இதையும் அவர்கள் பெருமையாகவே சொல்லிக் கொண்டார்கள். "பார்த்தீர்களா... எங்களை மக்கள் கவனிக்கிறார்கள்" என்று.

முடிவுகளின்படி நான்கு தொழிற்சங்கங்கள் பத்து விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் வாங்கியுள்ளன. தொமுச(திமுக) 650 வாக்குகளும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சங்கம் 477 வாக்குகளும், சிஐடியு 381 வாக்குகளும், ஐ.என்.டி.யு.சி 200 வாக்குகளும் பெற்றன. இந்த சங்கங்கள்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும். 12 சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தல் முடிவு பற்றி புளகாங்கிதத்துடன் எழுதியுள்ள வினவு, ஒரே ஒரு மில்லில்தான் சங்கமே இருந்தது. தேர்தல் நடைபெற்றதால் மற்ற மில்களில் உள்ள தொழிலாளர்களும் எங்களுக்கு வாக்களித்தார்கள் என்று குறிப்பிடுகிறது. எவ்வளவு பெரிய உண்மை. தேர்தலில் நின்றதால் மற்ற மில்களில் உள்ளவர்களையும் இவர்களால் திரட்ட முடிந்திருக்கிறது. தொழிற்சங்கப் பேச்சுவார்த்தையில் ஒரு பிரதிநிதிக்கான உரிமையைப் பெற்றிருப்பதால் அதை தொழிலாளர்களின் பணி நிரந்தரத்திற்கான கால்கோள் என்று வர்ணித்திருக்கிறார்கள்.

477 வாக்குகள் வாங்கினாலே இவ்வளவு நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமானால், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நின்று லட்சக்கணக்கான வாக்குகளை வாங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கே கால்கோள் விழா நடத்தலாமே...? அதைவிட்டுவிட்டு அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களைத் திரட்டிக் கொண்டிருப்பவர்களை ஓட்டுப் பொறுக்கி என்று விமர்சித்துவிட்டு, "நாங்க 477 ஓட்டு வாங்கிட்டோம்ல" என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதுதான் "புதிய" ஜனநாயகமா?

Saturday, December 18, 2010

பொங்கலுக்கும் வராது காவலன்? ஏகபோகத்தின் பிடியில் தமிழ்த்திரையுலகம்!

ஏற்கெனவே மூன்று முறை தேதி அறிவிக்கப்பட்டு, கடைசியாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 17 அன்று வெளியிட திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலையில் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அப்படக்குழுவினரின் அந்த ஆசையிலும் மண் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் திரையுலகை ஆட்டிப்படைக்கின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் பெரும் அளவில் எழுந்துள்ளது. அப்படி யெல்லாம் இல்லை என்று கூறி இந்தப்படங்கள் எல்லாம் வெளிவரவில்லையா என்று சில படங்களின் பெயர்களைக்கூட அவர்கள் பட்டியலிட்டதுண்டு. வெளிவந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் படங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வர வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

இவர்கள் போடும் பட்டியலில் உள்ள படங்கள் வந்தது உண்மைதான். திரையரங்குகள் கிடைத்தால் போதும் என்று வெளியிட்டு விடுகிறார்கள். தா என்ற படம் வெளியானது. படம் நன்றாகயிருக்கிறது என்பதுதான் பார்த்தவர்களின் கருத்தாகும். ஆனால் ஒரு வாரத்திலேயே படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துவிட்டார்கள். இதுதான் மற்ற படங்கள் வெளியாகும் உண்மை.

டிசம்பர் 17 ஆம் தேதி காவலன் படம் வெளியாவதற்கும் கூட எந்தத்தடையும் இல்லாமல்தான் இருந்தது. நிபந்தனை என்னவென்றால், டிசம்பர் 23 அன்று மன்மதன் அம்பு படத்திற்கு திரையரங்குகள் மாறிவிட வேண்டும். அதாவது, காவலன் படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா, மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் கணக்கில் இல்லை. ஆறு நாட்கள்தான் படத்தை ஓட்ட வேண்டும். அதற்கு இடையூறு பண்ண மாட்டார்களாம்.

பொங்கல் என்று சொல்லிவிட்டார்களே ஒழிய, திரையரங்குகளைக் கேட்டபோதுதான் அவையெல்லாம் கிடைக்காது என்று தெரிந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை, முதல்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இளைஞன், சன் குழுமத்தின் ஆடுகளம், தயாநிதி அழகிரியின் சிறுத்தை ஆகிய படங்கள் வருகின்றன என்பதுதான். இந்தப்படங்கள் வெளியாகாத திரையரங்குகள் வேண்டுமானால் காவலனுக்குக் கிடைக்கலாம். இதோடு மன்மதன் அம்பு படத்தையும் அவ்வளவு எளிதில் திரையரங்குகளிலிருந்து எடுக்க விட மாட்டார்கள். இப்படிப்பார்த்தால் காவலன் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைக்க வேண்டியதுதான்.

பத்திரிகைகளில் வந்துள்ள மற்றொரு செய்தி, திட்டமிட்டே காவலன் படத்தை வெளியிட தடை போடுகிறார்கள் என்று நம்ப வைக்கிறது. காவலன் படத்தை இந்த மூன்று நிறுவனங்களின் ஒன்று கேட்டதாகவும், தர மறுத்ததால்தான் இந்த நெருக்கடி என்பதாகவும் வெளியாகியுள்ள செய்திதான் அது.

Wednesday, December 15, 2010

விக்கிலீக்ஸ் : ஜனநாயக சமூகத்தின் தேவை



ஒரு புதிய வகை இதழியலை விக்கிலீக்ஸ் முன்வைத்துள்ளது. விஞ்ஞான இதழியல் என்பதுதான் அது. மற்ற ஊடக அமைப்புகளோடு இணைந்து செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நாங்கள் பணியாற்றுகிறோம். அதேவேளையில், அது உண்மையான செய்திதான் என்பதையும் நாங்கள் நிலை நிறுத்துகிறோம். செய்தியை நீங்கள் படிப்பதற்கு விஞ்ஞான இதழியல் அனுமதிப்பதோடு, இணையத்திலேயே "கிளிக்" செய்து அசல் ஆவணத்தையும் பார்த்துக் கொள்ள முடிகிறது. செய்தி உண்மையானதா ? பத்திரிகையாளர் துல்லியமாகச் செய்தியைத் தந்துள்ளாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளின் உண்மைத்தன்மையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஜனநாயக சமூகங்களுக்கு வலுவான ஊடகத்துறை தேவைப்படுகிறது. அத்தகையதுதான் விக்கிலீக்ஸ். நேர்மையாக அரசு இருப்பதற்கு விக்கிலீக்ஸ்உதவுகிறது. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் பற்றி சில ஜீரணிக்க முடியாத உண்மைகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பெருநிறுவனங்களின் ஊழல்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது. நான் போருக்கு எதிரானவன் என்று மக்கள் கூறியுள்ளார்கள். நான் அப்படியில்லை. சில சமயங்களில் நாடுகள் போரைத் தொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அவை வெறும் போர்கள் மட்டுமே. அந்தப் போர்களைப் பற்றி மக்களிடம் பொய்களைச் சொல்வது, அதன்பிறகு எந்த மக்களிடம் அதைச் சொல்கிறோமோ அவர்களின் உயிரையும் பொருளையும் அந்தப் பொய்களுக்காக அர்ப்பணிக்கச் சொல்வதையும் விட பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர்கள் பற்றிய விபரங்களையோ, அமெரிக்கத் தூதரங்களின் தகவல்களையோ அல்லது விக்கிலீக்ஸ் வெளியிட்ட வேறு எந்த செய்தியையோ நீங்கள் படித்தால், அனைத்து ஊடகங்களும் இத்தகைய செய்திகளை சுதந்திரமாக வெளியிட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். அமெரிக்க தூதரகத் தகவல்களை விக்கிலீக்ஸ் மட்டும் வெளியிடவில்லை. பிரிட்டனின் தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், ஸ்பெயினின் எல் பய்ஸ் மற்றும் ஜெர்மனியின் டெர் ஸ்பீஜெல் ஆகியவையும் இவற்றைப் பிரசுரித்துள்ளன.

ஊருக்கு இளைத்தவன்தான் குறி

ஆனால் இந்த செய்திகளை ஒருங்கிணைத்த விக்கிலீக்ஸ்தான் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேசத்துரோகம் செய்து விட்டதாக அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் குற்றம் சாட்டியுள்ளார்கள். இத்தனைக்கும் நான் அமெரிக்கக் குடிமகனல்ல, நான் ஒரு ஆஸ்திரேலியக் குடிமகன். அமெரிக்காவின் சிறப்புப் படைகளைக் கொண்டு என்னைப் பிடிக்க வேண்டும் என்று பல அமெரிக்கர்கள் கேட்டுள்ளனர். ஒசாமா பின் லாடனைப் போல் என்னையும் வேட்டையாட வேண்டும் என்கிறார் சாரா பாலின். பன்னாட்டு அபாயம் என்று என்னை அறிவிக்க வேண்டும் என்று குடியரசுக்கட்சி சார்பில் ஒரு மசோதா தயாராகி வருகிறது. கனடா பிரதமர் அலுவலக ஆலோசகர் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி என்னைக் கொலை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது 20 வயது மகனைக் கடத்தி, சித்தரவதைக்குள்ளாக்க வேண்டும் என்று அமெரிக்கர் ஒருவர் வலைத்தளத்தில் கோரியிருக்கிறார்.

இதுபற்றியெல்லாம் எந்தக்கவலையுமில்லாமல் இருக்கும் ஜூலியா கில்லார்டு மற்றும் அவரது அரசு பற்றி ஆஸ்திரேலியர்கள் யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கைவசம் இருப்பது போல் தோன்றுகிறது. எனது பாஸ்போர்ட்டை ரத்து செய்தா அல்லது வேவு பார்ப்பதா அல்லது விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களை தொந்தரவுக்குள்ளாக்குவதா என்ற வழிகளை ஆஸ்திரேலிய அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் அரசு வழக்கறிஞரோ, தன்னால் முடிந்த அளவுக்கு அமெரிக்க விசாரணைக்கு உதவி ஆஸ்திரேலியர்களைக் கப்பலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
மற்ற ஊடகங்களைப் பற்றி பிரதமர் கில்லார்டு மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், கார்டியன், நியூயார்க் டைம்ஸ் மற்றும் டெர் ஸ்பீஜல் ஆகியவை பழமையானது என்பதோடு, பெரிய ஊடக நிறுவனங்களாகும். விக்கிலீக்ஸ் புதியது மற்றும் சிறிய அளவுள்ளதாகும். செய்தி கொண்டு வந்தவரைக் கொலை செய்து உண்மையை மறைக்க கில்லார்டு அரசு விரும்புகிறது. ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசியல் பேரங்கள் குறித்த தகவல்களையும் சேர்த்து மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள்.

கையாலாகாத ஆஸ்திரேலிய அரசு

இவ்வளவு மிரட்டல்கள் எனக்கு வந்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு என்ன செய்தது? தனது குடிமகன்களில் ஒருவரைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய பிரதமர் முயன்றிருப்பார் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை. பிரதமரும், அரசு வழக்கறிஞரும் பாரபட்சமில்லாமல் பணியைச் செய்ய வேண்டும் என்பது நியதி. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வேலையில் அவர்கள் இருப்பதால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு முறை உண்மையை வெளியிடும்போதும், "அய்யோ.. உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்", "தேசியப் பாதுகாப்பு போச்சு", "படைகளைச் சந்திக்க நேரிடும்" என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள். அதன்பிறகு, விக்கிலீக்ஸ் வெளியிடுவதில் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது எது?

இரண்டுமே கிடையாது. நான்கு ஆண்டுகளாக விக்கிலீக்ஸ் செய்திகளைப் பிரசுரித்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த அரசையே மாற்றியிருக்கிறோம். ஆனால் ஒரு தனிநபர்கூட இதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவின் உதவியுடன், கடந்த சில மாதங்களில் ஆயிரக்காணவர்களைக் கொன்று தீர்த்துள்ளது. ஆப்கானிஸ்தான் போர் பற்றிய விபரங்கள் வெளியானதால் அமெரிக்காவின் உளவு வேலைகளோ அல்லது உளவு உத்திகளோ பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அந்நாட்டு ராணுவத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார். நாம் விபரங்களை வெளிட்டதால் ஆஸ்திரேலியப் படைகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் நமது வெளியீடுகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன.

* ஈரானைத் தாக்குமாறு சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டார்.

* இராக் தொடர்பாக பிரிட்டனில் நடத்தப்பட்ட விசாரணை அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும்படி இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.

* நேட்டோ அமைப்பில் மறைமுக உறுப்பினராக ஸ்வீடன் உள்ளது.

* குவாண்டனாமோவில் இருக்கும் கைதிகளை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. ஒரு கைதியை ஸ்லோவேனியா ஏற்றுக் கொண்டால்தான் அந்நாட்டு ஜனாதிபதியை ஒபாமா சந்திக்க முடியும் என்று கூறப்பட்டது.

பெண்டகன் ஆவணங்கள் வழக்கில், "சுதந்திர மற்றும் கட்டுப்பாடுகளற்ற ஊடகத்துறையே அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும்" என்று அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான உரிமை அனைத்து வகையான ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற தேவையை விக்கிலீக்சைக் சுற்றி உருவாகியுள்ள நெருக்கடி உணர்த்துகிறது.

ஜூலியன் அசாங்கே

- தி ஆஸ்திரேலியன் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி.

தமிழில் : கணேஷ்
------------