Thursday, August 6, 2009

"அடி" இடதுசாரிகளுக்கு... "வலி" மக்களுக்கு...!!

(ஏடிஎம் வாசலில்)

என்ன.. சார் இன்னக்கி ஆபிசுக்கு சரி
யான நேரத்துக்கு போக முடியாது போலருக்கே... ஏடிஎம்மில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த பாலு, நண்பர் மணியிடம் கேட்டார்.

ஆமா... பாலு.. ரெண்டு நாளக்கி முன்னாடியே பணத்த எடுத்திருக்கலாம்.. வேலைநிறுத்தம் பண்ணப்போறோம்னு முதல்லயே அறிவிச்சுட்டாங்க...

ஆனா... இப்புடி இஷ்டத்துக்கு ஸ்டிரைக் பண்ணலாமா... முத அஞ்சு நாள் பணம் எடுக்காம விட்டுட்டேன்... இவங்க ரெண்டு நாள் ஸ்டிரைக் பண்ணிட்டாங்க... இன்னக்கி பாத்தா இவ்வளவு கூட்டம் இருக்கு...

என்ன சொல்றீங்க பாலு... இஷ்டத்துக்கா...

ஆமா மணி.. வேலை நிறுத்தம் பண்ணி என்ன சாதிக்கப்போறாங்க...

பாலு... எதுவும் சாதனை பண்ணறதுக்காக இல்ல. கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வைக் கேட்டுதான் போராடுறாங்க..

எதுக்கெடுத்தாலும் ஊதிய உயர்வு கேட்டா தந்துற முடியுமா..

மாதாமாதம் கேக்குற விஷயமில்ல பாலு இது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ ஊதிய ஒப்பந்தம் போடுவாங்க... 2007ல போட வேண்டிய ஒப்பந்தத்த இன்னும் போடாம இருக்காங்க...

அதுதான் பேச்சுவார்த்தை நடக்குதே...

அதுக்குப்பேரு பேச்சுவார்த்தையே கிடையாது...

என்ன சொல்றீங்க...

ஊழியர்கள் கேட்டது 20 சதவிகித உயர்வு... முதல்ல 17.5 சதவிகித உயர்வு தர்றதா சொன்ன நிர்வாகங்கள் அடுத்த பேச்சுவார்த்தைல 15 சதவிகிதமா குறைச்சாங்க... ரெண்டு நாளக்கி முன்னாடி நடத்துன பேச்சுவார்த்தை 13 சதவிகிதம்தான் தர முடியும்னு சொல்லிட்டாங்க... அதோட புது பென்சன் திட்டத்த ஒப்புக்கணும்னு நிபந்தன வேற...

என்னது... பேச்சுவார்த்தைக்குப் பேச்சுவார்த்தை குறைஞ்சுட்டே போகுதா... அப்புடி நான் கேள்விப்பட்டதே இல்லையே... புதுசா இருக்கு... தொழிற்சங்கம் அவ்வளவு பலவீனமா இருக்கா...

அப்படில்லாம் இல்ல... அதிகாரிகள், ஊழியர்கள்னு எல்லாருமே ஒண்ணு சேந்து நிக்குறாங்க... அத உடைக்கத்தான் இப்புடி வண்டிய ரிவர்ஸ் கியர்ல ஓட்டிப் பாக்குறாங்க...

சவால் விடுறமாதிரில்ல இருக்கு...

ஆமா பாலு... தொழிற்சங்க இயக்கத்துக்கு சவால்தான்... மேலும் கடிவாளம் போட இடதுசாரிகள் இல்லைங்குறதையும் பாக்கணும்...

அவங்க எதுக்கெடுத்தாலும் பிரச்சனை பண்ணுனவங்களாச்சே...

அவங்க பிரச்சனை பண்ணுனது தொழிலாளர்களுக்கோ... ஊழியர்களுக்கோ அல்ல... ஏழைங்களுக்கு 100 நாள் வேலையை உத்தரவாதம் பண்ணுனாங்க... சர்வதேச அளவுல வங்கிகள்லாம் சரிஞ்சப்ப இங்க மட்டும் பாருங்க நிமிர்ந்து நிக்குது... இதெல்லாம்தான் அவங்க பண்ணுன பிரச்சனை...

இப்பதான் ஞாபகம் வருது மணி... ரெண்டு நாளக்கி முன்னாடி பாலிசிக்கு பணம் கட்டப்போனேன்... பாத்தா அங்க ஊழியர்கள்லாம் ஸ்டிரைக் பண்ணிருந்தாங்க...

ரெண்டு மணிநேரம் வெளிநடப்புதான் பாலு.. ஸ்டிரைக் கிடையாது..அதுவும் உங்களுக்காகத்தான்..

எனக்காகவா...? புரியலையே...

பாலிசிக்கு போனஸ் தருவாங்கள்ல... அதக்குறைக்க அரசு திட்டமிட்டிருக்கு.. அதுக்கு எதிராத்தான் போராட்டம்..

பரவாயில்லையே... நான்கூட ஏதோ அவங்க சம்பளத்தக் கூட்டத்தான் ஸ்டிரைக்குனு நெனச்சுட்டேன்..

ஸ்டிரைக் இல்ல.. வெளிநடப்புதான்... உபரி வருமானத்துல 95 சதவிகிதத்த பாலிசிதாரருக்கு ஒதுக்கிருந்தாங்க... அத 90 சதவீதமா குறைக்குறாங்க...
அப்படின்னா போனஸ் குறையுமா...

நிச்சயமா... அது மட்டுமில்லாம வெளிநடப்பு செஞ்சதுக்கு வேற காரணங்களும் இருக்கு... தனியார் மயங்குற புதைகுழிய நோக்கி இழுத்துட்டுப் போறாங்க...

என்ன மணி... இதுக்கும் கடிவாளம் இல்லாததுதான் காரணம்னு சொல்வீங்களா...

ஆமா பாலு... பிட்டுக்கு மண் சுமந்த கதை ஞாபகம் இருக்கா... அடி மட்டும்தான் பரமசிவனுக்கு... வலி மக்களுக்குதான். இங்கயும் அப்புடித்தான்.

இடதுசாரிகளுக்கு அடி.. சரிவு... பின்னடைவுன்னு சில பேரு கொண்டாடுனாங்க... எனக்கு... உங்களுக்குனு பரவலா மக்களுக்குதான் வலிக்குது...

ஆஹா... நல்ல உதாரணம் சொன்னீங்க மணி..

உள்ள போங்க பாலு... அடுத்து நீங்கதான்...

1 comment:

  1. சரியான நேரத்தில் சரியான விதத்தில் பதிவு செய்துள்ளீர்கள்...அவசியமான பதிவு.

    ReplyDelete