Sunday, August 23, 2009

பாஜகவின் தலித் விரோத பரிசோதனைக்கூடம்(குஜராத்)!

நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாகரீகமாக, மறைமுகமாக, வெளிப்படையாக மற்றும் கொடுரமாக என்று வெவ்வேறு வகையில் அன்றாடம் தீண்டாமையின் கொடிய வடிவத்தை தலித்துகள் சந்திக்கிறார்கள். இந்துத்துவ பரிசோதனைக்கூடம் என்று ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலால் வர்ணிக்கப்படும் குஜராத்தில் அனைத்து வகையான தீண்டாமை வடிவங்களும் காணப்படுகின்றன. வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தலித்து மாணவர்கள் மீதான கொடுமை தற்போது அம்பலமாகியுள்ளது. பாகுபாடுகளைப் போக்கும் கல்வியை அளிக்க வேண்டிய ஆசிரியப் பெருமக்களே பிரித்து வைக்கும் பணியைச் செய்கிறார்கள். வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

மோடி தலைமையிலான மாநில அரசில் சமூக நீதித்துறை அமைச்சகமும் உள்ளது. பெயருக்குத்தான் அது இருக்கிறது என்பதை அந்தத்துறை அமைச்சரின் அறிக்கைகள் காட்டுகின்றன. எனக்குத்தெரிய இத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அதுபற்றிக் கேள்விப்பட்டது கூட கிடையாது என்கிறார் அமைச்சர் ஃபகீர் வகேலா. மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமைகள் எதுவும் கிடையாது என்று பாஜகவினரும் அடித்துச் சொல்கின்றனர். ஆனால் கொடுமைகள் இருப்பதோடு, பள்ளிகளில் அது ஆசிரியர்களாலேயே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று ஆவேசத்தோடு கூறினார்கள் சபர்மதி காந்தி ஆசிரமத்தில் குழுமிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்.

தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டு வர நவ்சர்ஜன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்தான் அந்த மாணவர்களின் குமுறல்களை ஒரே இடத்திற்குக் கொண்டு வந்தது. தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து ஒரு மடக்கு தண்ணீர் குடிக்க முனைந்தபோது ஆசிரியர் கையில் இருந்த தடி எனது முதுகைப் பதம் பார்த்து விட்டது என்கிறார் சுரேந்திரநகரிலிருந்து வந்திருந்த 12 வயதாகும் விஷ்ணு சாவ்தா என்ற மாணவன். முதுகிலிருந்து காயத்தையும் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்டுகிறார். எவ்வளவு காலத்திற்குதான் இந்தப்பிஞ்சு முகம் இந்தக் கொடுரத்தை நினைவில் வைத்துக் கொள்ளப்போகிறதோ என்று கூடியிருந்த அனைவருமே கலங்கினர்.

பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யுங்கள் என்று மாணவர்களை ஆசிரியர்கள் பணிப்பார்கள். ஆனால் மற்ற அறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் மட்டும் கழிப்பறைகளுக்கு சென்று சுத்தம் செய்ய வேண்டும் என்கிறார் விஷ்ணு. இது சுரேந்திரநகர் பகுதியில் மட்டும் உள்ள பிரச்சனையாக அமையவில்லை. மாநிலம் முழுவதும் நிலவுகிறது. பவ்நகர் உம்ராலா பகுதியைச் சேர்ந்த 15 வயதாகும் கவுதம் டோடியா மற்றும் படான் மாவட்டம் ஹார்ஜி பகுதியைச் சேர்ந்த 13 வயதாகும் கவுதம் வால்மீகி ஆகியோரும் இத்தகைய கொடுமைகள் நடப்பதாகத் தெரிவித்தனர்.

இத்தகைய கொடுமைகள் நடப்பதாக இதுவரை எங்களிடம் யாருமே புகார் கூறவில்லை என்கிறார் அமைச்சர் ஃபகீர் வகேலா. ஆனால் இந்தப் பிரச்சனை மற்றும் மனித மலத்தை மனிதனே அள்ளிக்கொண்டிருக்கும் அவலம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாங்கள் தொடர்ந்து அரசிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் நவ்சர்ஜன் அமைப்பின் நிர்வாகிகள். பள்ளிக்கூடங்களிலேயே இத்தகைய கொடுமைகள் நடப்பதால் அதைத் தாங்க முடியாமல் பல மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இத்தகைய இழிவுகளைப் பொறுக்க முடியாமல் தலித் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்த நிகழ்வுகள் குஜராத்தில் ஏராளம்.

வகுப்பறையிலும் கடைசி வரிசையில் அமருமாறு நிர்ப்பந்தம். இருப்பதிலேயே மோசமான வேலைகள் அந்த மாணவர்கள் மீது திணிப்பு. இவ்வளவுக்கும் பிறகு பள்ளிக்குச்செல்ல எந்த தலித் மாணவராவது விரும்புவாரா? இதுதான் நவ்சர்ஜன் அமைப்பாளர்கள் மட்டுமில்லாமல் தலித்துகளும் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்வி. கிராமங்களில் பூனை மற்றும் நாய் போன்ற விலங்குகளில் ஏதாவது ஒன்று இறந்துவிட்டால் அவற்றை அகற்றும் வேலை தலித் சிறுவர்களின் மீது திணிக்கப்படுகிறது. வால்மீகி சமூகத்தில் பிறந்த அவர்களின் கடமை இது என்று அறிவுறுத்தப்படுகிறது. மனித மலத்தை அள்ளும் துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கையில் குஜராத் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 65 ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

1 comment:

  1. என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
    என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
    பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
    சொல்லி போடுங்க....!!!

    ReplyDelete