Thursday, August 13, 2009

சோனியா அனுமதிக்கலாம், ஆனால் மக்கள்...?இது தாராளயுகம். அரசுடைமைக்காலம் என்பது மலையேறி விட்டது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மக்களவையில் கூறியுள்ளார்(தினமணி, ஆக.7). கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கொட்டிக்கிடக்கும் நாட்டின் இயற்கை வளமான எரிவாயுவை யார் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சொத்தை பாதுகாக்க வேண்டாமா.. அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் அரசுடைமை ஆக்குங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரியதற்குத்தான் இப்படி பதிலளித்துள்ளார்.


கடந்த பத்து நாட்களாகவே இதுதான் நாடாளுமன்றத்தை உலுக்கி வரும் பிரச்சனையாகும். முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக அரசு விலையை நிர்ணயிக்கிறது. அனில் அம்பானிக்கு பாதிப்பு என்றவுடன் சமாஜ்வாதிக்கட்சி கொந்தளிக்கிறது. ஏதோ இந்த நாட்டின் வளம் இந்த இரு நபர்களுக்கு மட்டுமே சொந்தமானது போல இந்தக்கட்சிகள் லாவணி செய்தன. இந்த நிலையில் விவாதத்தை தேசத்தின் சொத்து பற்றியதாக இடதுசாரிக்கட்சிகள் மாற்றின. இவ்வளவு நாட்களும் நாற்காலியில் பசையைத் தேய்த்து அமர்ந்திருந்த முரளி தியோரா இது தனிப்பட்ட விஷயம் என்றவாறே எழுகிறார். அப்போதுதான் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை சொல்லவும் முற்படுகிறார்.


இது தாராளயுகம் என்கிறார். எந்தயுகத்தில், "இந்திய வங்கிகள் சரிந்து விழாததற்கு அரசுடைமைதான் காரணம். அதனால் இந்தப் பெருமை எனது மாமியாரையே சாரும்" என்று அவரது கட்சித்தலைவர் சோனியா காந்தி பெருமிதத்தோடு கூறினாரோ, அதைத்தான் தாராளயுகம் என்று தியோரா வர்ணிக்கிறார். காங்கிரசிலேயே இரண்டு ரகம் உண்டு. ஒன்று, சோசலிசம் என்று சொல்லிக்கொண்டு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள்.


இரண்டாவது, வெளிப்படையாகவே முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். இதில் முரளி தியோரா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். ஈரானுடன் குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் போடக்கூடாது என்று அமெரிக்கா கூறியது. அப்போது அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் கையெழுத்திடுவதில் உறுதியாக இருந்தார். இதனால் அவரைத் தூக்கி கடாசிவிட்டார்கள். அமெரிக்காவின் பேச்சைத் தட்டாமல் இருக்க முரளி தியோரா அந்த இடத்தில் அமர்த்தப்பட்டார். இதிலிருந்தே அவரது விசுவாசம் யாரிடம் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


எந்தயுகம் மலையேறியுள்ளது என்பதைக் கொஞ்சம் பூமிப்பந்தின் மேற்கு திசையில் தியோரா பார்ப்பது நல்லது. தாராளமாக இயங்கியதால் மேற்கு நாடுகளில் உள்ள மக்களின் சேமிப்பு பறிபோயுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மலையேறிய தாராளயுகம் அங்கேயிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இருக்கிறது. அதெல்லாம் வேண்டாம்... இதோ மக்கள் பணத்தை எடுத்து தாரை வார்க்க இன்னும் தயாராகவே இருக்கிறோம் என்று ஆசை காட்டி மலையிலிருந்து இறக்க அங்குள்ள ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.


முரளி தியோரா ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மக்களவையில் இருப்பது அமெரிக்காவின் அல்லது அம்பானியின் பிரதிநிதியாக அல்ல. மக்களின் பிரதிநிதியே. யுகங்கள் மக்களின் யுகங்களாகவே இருக்க வேண்டும். அதற்கு அவர்களின் நலன்களைக் காக்கும் கொள்கைகளே வர வேண்டும். தனது மாமியார் பற்றி சோனியா காந்தி பெருமைப்பட்டுக் கொண்டது நியாயமானதே. அந்த நியாயத்தைப் பலிகொடுத்துவிட வேண்டாம். மக்களின் யுகங்கள் மலையேறிவிடக்கூடாது. மாமியாரின் பெருமை பறிபோக சோனியா அனுமதிக்கலாம். ஆனால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

4 comments:

 1. Good article. Continue writing with the same spirit.

  வாள் முனையை விட பேனா முனை வலிமையானது என்று மீண்டும் நிரூபியுங்கள்.

  ReplyDelete
 2. But Ambani brothers only spent money and identified that it has Gas reserves.

  The Govt (previous Govt which was supported by CPI, CPIM ) did not spend money that time and not take steps to identify whether gas reserve is there or not.

  So Communists have no rights to talk on this issue.

  ReplyDelete
 3. 5-ஆண்டுகாலம் யாரும் அசைக்கமுடியாது என்ற தைரியம் தான்.

  ReplyDelete
 4. airborn mineral exploration corporation is a psu.even before that with the help of thenUSSR govt. we maped the spot were minerals and oil reserves were lying beneth the indiansoil.Ramji is totally wrong...kashyapan

  ReplyDelete