Saturday, August 15, 2009

கோடிகளில் புரளும் கதராடைகள்!எளிமை என்றால் கக்கன் என்று அகராதியில்பதிவு செய்து கொள்ளுமளவுக்கு பெருமை பெற்றவர் அவர். அவரும் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார் என்று சொல்லி பெருமூச்சு விட்டுக்கொள்ளும் நிலையில்தான் இப்போதைய காங்கிரசின் நிலவரம் உள்ளது. அக்கட்சியினர் சர்வசாதாரணமாகக் கோடிகளில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையொன்றும் மூடி மறைத்து வைத்துக் கொள்ளவில்லை அவர்கள். கம்பம் இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது. அதில் பங்கேற்ற காங்கிரசுக்காரர்கள் தேர்தலுக்கு பணம் கொடுக்கலைன்னு புலம்பித் தள்ளியுள்ளார்கள்.


உடனே தலையிட்ட மாவட்ட காங்கிரஸ் ஓ.எஸ்.எம்.ராமச்சந்திரன், காசெல்லாம் கேட்டு வாங்கிக்கிங்க. மக்களவைத் தேர்தலப்ப நம்ம வேட்பாளருக்கு திமுகவுலருந்து அஞ்சு கோடி குடுத்தாங்க. அதுல மூணு கோடியை(மிச்சம் ரெண்டு கோடி என்னாச்சு...??)வாக்காளர்களுக்கு செலவு பண்ண நான்தான் பிரிச்சுக் குடுத்தேன் என்று அமைதிப்படுத்தியுள்ளார். கூட்டணிக்கட்சியே இவ்வளவு கொடுத்தால் சொந்தக் கட்சியில எவ்வளவு குடுத்திருப்பார்கள் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது. கேரளாவிலும் காங்கிரஸ்காரர்கள் கோடி, கோடியாக செலவழித்துள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது.


அங்கு போட்டியிட்ட ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளருக்கும் தில்லியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. தலா ஒன்றரைக்கோடியை அவர்களுக்குத் தந்துள்ளார்கள். இதை வாங்கிக்கொள்வதற்காக ஒவ்வொரு வேட்பாளர்கள் சார்பிலும் ஒருவர் தலைநகர் சென்றுள்ளார். முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சார்பில் சென்றவர் திரும்பி வருகையில் 25 லட்சம் ரூபாய் கொண்ட பெட்டியைத் தொலைத்து விட்டார். ஆனால் 25 லட்சத்தையும் அவர் லபக்கிவிட்டார் என்று கட்சி வட்டாரத்தில் புகாரைத் தட்டிவிட்டு விட்டார்கள் ஒரு கோஷ்டியினர். இதற்குப் பணத்தைத் தொலைத்தவர் விளக்கம் அளித்து எழுதிய கடிதத்தால் தேர்தல் செலவுக்கு காங்கிரஸ் மேலிடம் கோடிகளை அள்ளி வழங்கியது அம்பலமாகியுள்ளது.


இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது கரன்சி மழையால் எம்.பி.க்களை நனையச் செய்து பெரும்பான்மையை நிரூபித்த காங்கிரஸ், தேர்தல் வெற்றிக்கும் அதையே நம்பியிருந்துள்ளது. ஆக.18 அன்று நடக்கப்போகும் திருவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர் மற்றும் பர்கூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கூட்டணிக்கட்சியான(வெற்றி ஃபார்முலாவை உருவாக்குவதில் தாய்க்கட்சி..!!) திமுகவோடு இணைந்து வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக்கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பணம் கிடைக்காததால் காங்கிரஸ்காரர்கள் ஒதுங்குவது தெரிந்து மத்திய அமைச்சர் ராசா பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.


இவ்வாறு திமுகவினர் கொடுக்கும் வைட்டமின் "ப" பெரிய அளவில் வேலை செய்கிறது. தங்கபாலு, சிதம்பரம் மற்றும் வாசன் பங்கேற்கும் கூட்டங்களுக்கு போகிறார்களோ இல்லையோ, நம்ம தலைவர்கள் ஸ்டாலின், அழகிரி பேசும் கூட்டங்களுக்கு காங்கிரஸ்காரர்கள் தவறாமல் போய்விடுகிறார்கள் என்று திமுகவினர் வட்டாரத்தில் கிண்டலாகப் பேசிக்கொள்கிறார்கள். தென் மாவட்டங்களில் அண்மையில் வெளியிடப்பட்ட சில காங்கிரஸ் கட்சிப் போஸ்டர்களில் மன்மோகன்சிங், சோனியா, காமராஜர், ராகுல்காந்தி ஆகியோருக்குப்பிறகு மு.க.அழகிரியின் படத்தையும் போட்டு விசுவாசம் காட்டியுள்ளனர்.


ஆனால் தேவையான சமயத்தில் காங்கிரசைப் புரட்டி எடுக்க திமுக தயங்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது லால்கர், சிங்கூர் என்று காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எரிந்து விழுந்தார். ஆனால் முரசொலியில் கட்டம் கட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத மாநிலம் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராதான் என்பதைப் படம் பிடித்து காட்டினர். அதற்கு பாஜக தலைவரின் பேட்டியையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு காங்கிரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

No comments:

Post a Comment