அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் காலனியல் பேங்க்குரூப் என்ற வங்கி திவாலாகியுள்ளது.
இந்த வங்கிக்கு சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. திவால் நிலையை எட்டிவிட்டதால் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள பிபி அண்டு டி என்ற வங்கிக்கு தனது சொத்துக்களை விற்க முன்வந்தது. இந்த விற்பனைக்கு மத்திய காப்பீட்டுக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
திவாலாகும் நிறுவனங்களை எடுத்துக் கொள்வது மற்றும் அதன் நடவடிக்கைகளைப் பராமரிப்பது ஆகிய பணிகளை இந்த மத்தியக் காப்பீட்டுக்கழகம்தான் கவனித்துக் கொள்கிறது. காலனியல் பேங்க்குரூப்பின் திவாலால் இந்தக் கழகத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் இந்தக்கழகம் மற்றும் பிபி அண்டு டி வங்கி ஆகியவற்றிற்கிடையில் கையெழுத்தானது.
இந்த வங்கி சரிந்ததோடு, நடப்பாண்டில் சரிவைச் சந்தித்துள்ள அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, இந்த சரிவுதான் நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள பெரிய சரிவு என்றும் நிதித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ரியல் எஸ்டேட் வர்த்தகத்திற்குதான் இந்த வங்கி கடன்களை வழங்கி வந்தது.
திவாலாகப்போகும் வங்கிகளின் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேற்பட்டவையாகும். கடந்த ஆண்டை விட தற்போது விரைவாக வங்கிகள் திவாலாகி வருகின்றன.
நன்றி : தீக்கதிர்
No comments:
Post a Comment