Thursday, August 20, 2009

பீதியைப் பணமாக்கும் தனியார் மருத்துவமனைகள்!

பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை விட பீதியே அதிகமாகக் காணப்படும் நிலையில் பரிசோதனை செய்யப்போகிறோம் என்று கர்நாடக தனியார் மருத்துவமனைகளும் கிளம்பியுள்ளன.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்போகும் இந்த தனியார் மருத்துவமனைகள் இந்தக் கொள்ளைக்கு "சமூக சேவை" என்று பெயரிட்டுள்ளார்கள். உண்மையில் ஆகும் செலவை விட இது நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாகும். கட்டணத்தை விதிப்பதிலும் ஒவ்வொரு மருத்துவமனையும் தங்களது சந்தை மதிப்புக்கு ஏற்றாற்போல் வைத்துக் கொள்வார்களாம்.

அதிகபட்சமாக 500 ரூபாய்தான் இந்தப் பரிசோதனைக்கு செலவாகும் என்கிறார் ராஜீவ்காந்தி மார்பக நோய்கள் மையத்தைச் சேர்ந்த டாக்டர் பக்கி. இது மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் கருவிகள், ஆலோசனைக் கட்டணம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் பரிசோதனை செய்யப்போவதாக சில மருத்துவமனைகள் அறிவித்துள்ளன. அங்கு தங்குவதற்கான கட்டணங்களையும் வருபவர்களின் தலையில் கட்டவே இத்தகைய உத்தியைக் கையாளுகிறார்கள். பன்றிக்காய்ச்சல் பற்றிய பீதி அதிகமாகக் கிளம்பியுள்ளதால் இவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

முறையாக பரிசோதனைகளைச் செய்த அரசு மருத்துவமனைகளில் சோதனைக்கான வசதிகளை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்வதற்கான விதிமுறைகள் எதுவும் வழங்கப்படவில்லை. பணம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்கள் தலையில்தான் விழப்போகிறது என்று ஆளும் பாஜக மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment