Tuesday, August 16, 2011

"பப பாப்பா... பாப்ப பாப்பா..."


தெய்வத் திருமகள்

வரும்போதே மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஹிலாரி கிளிண்டன்தான் படத்தின் நாயகி என்பதால் முதலில் அமெரிக்கத் திருமகள் என்றுதான் பெயர் சூட்டியிருந்தார்கள். எப்போதெல்லாம் குண்டுகள் இந்தியாவில் வெடிக்கின்றனவோ, அப்போதெல்லாம் ஹிலாரிகள் வருகிறார்கள் என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலிருந்து இவரைப் போன்றவர்கள் வரும்போதெல்லாம், பெரும் வரவேற்பு தரப்படும் என்பதை மனதில் வைத்துதான் தெய்வத்திருமகள் என்று படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒருபுறம், ஆயுத விற்பனையை கன ஜோராக தெய்வத்திருமகள் ஹிலாரி செய்து கொண்டிருக்கிறார். மறுபுறத்தில், அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு "பப பாப்பா... பாப்ப பாப்பா..." என்று மன்மோகன்சிங் பாடி வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார். நாட்டின் பிரதமர் யார் என்ற கேள்விக்கு "எனக்குத் தெரியாது.." என்று அவர் சொல்வது கலகலப்பூட்டுகிறது. படத்திற்கு சோனியா காந்தி இசையமைத்துள்ளார். ஒபாமா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் திக்விஜய்சிங் குழுவினரின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அக்குழுவில் முகத்தை எப்போதும் சீரியசாக வைத்துக் கொள்பவராக வரும் ராகுல் காந்தி அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை.

*********

அவன் - இவன்

இப்படத்தில் வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இரு நாயகர்களுமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். நிதானத்தோடு வரும் ஸ்டாலின் உள்ளுக்குள் பதற்றமாக இருப்பதாகவும், எந்நேரமும் முறுக்கிக் கொண்டே இருந்தாலும் உதறலோடு வலம் வருபவராக அழகிரியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். காட்சிகள் தானாகவே நகரட்டும் என்று இயக்குநர் கருணாநிதி விட்டிருக்கிறார். முதல் பாதியில் கம்பீரமாக வளைய வந்த துணை நடிகர்கள் வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பொங்கலூர் பழனிச்சாமி போன்றவர்கள் இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலும் முகத்தை மூடியவாறே வருகிறார்கள். ஆர்க்காட்டார் வரும் கும்மிருட்டுக் காட்சிகளுக்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு.

************

காஞ்சனா முனி

இப்படத்தின் நாயகன் பாபா ராம்தேவ் வரும் துவக்கக்காட்சியே திகிலாகத்தான் உள்ளது. இரவு நேர யோகா நிகழ்ச்சி என்று அனுமதி வாங்கிக் கொண்டு "இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணிவரை" உண்ணாவிரதம் என்று அறிவித்து விடுகிறார். ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டு உண்ணாவிரதப் பந்தலுக்கு ராம்தேவ் வரும் காட்சியோடு படம் துவங்குகிறது. பத்தேகால் மணிக்கு பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வந்து எப்படியாவது அவரை "பீடா" சாப்பிட வைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு பீடா இருப்பதை கேமரா அற்புதமாகப் படமாக்கியிருக்கிறது.

அவர் மறுக்கவே ஒரு கடிதத்தைக் கையில் திணிக்கிறார்கள். 12 மணிக்கு தானே வந்து பீடாவைத் தரத்தயார் என்று மன்மோகன்சிங் அதில் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு, ம்...ஹூம்... என்று மறுக்கும் வகையில் தலையாட்டிய ராம்தேவ், "தூக்கம் வந்துவிடும். 11 மணிக்கெல்லாம் வந்தால்தான் ஆச்சு.." என்று ஆக்ரோஷமாக பதில் எழுதி ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார். பக்கத்தில் இருக்கும் தனது பி,.ஏ. பாலகிருஷ்ணாவிடம், அன்னாவுக்கு வந்ததவிட நமக்குக்கூட்டம் அதிகமா...? என்று அடிக்கடி கேட்டுக் கொள்கிறார். இப்படிப் பரபரப்பான காட்சிகளைக் கொண்ட படமாக இருந்தாலும், முடியும்போது ராம்தேவைக் காணவில்லை. நன்றி. வணக்கம் என்று போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

**************

ஆடுகளம்

திஹார் சிறையும், உச்சநீதிமன்றமும்தான் ஆடுகளங்களாக இருக்கின்றன. ராசா மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகிய இருவரும் நடிப்பில் பிச்சு உதறியுள்ளனர். சிறைக்குள் போய் மாதக்கணக்கில் ஆனாலும் கம்பீரமாக காட்சிகளில் தோன்றுகிறார்கள். சிறைக்குள்ளே இருவரும் டென்னிஸ் ஆடும் காட்சிகள் அபாரம். ஒரு முறை சர்வீஸ் போட்டுவிட்டு, "15-0" என்று நடுவர் தொழிலதிபர் பல்வா கூறும்போது, இல்லையில்லை... "70000-0" என்று போடுங்கள் என்கிறார் கல்மாடி. ஆமாம்... அடுத்த சர்வீசும் ஜெயிச்சா "176000-0னு" போடணும் என்கிறபோது அரங்கமே சிரிப்பொலியால் குலுங்குகிறது. உச்சநீதிமன்றத்தில் 2ஜி விவகாரத்துல பிரதமரையுமா உள்ளே போடணும் என்று கேள்விகேட்டுவிட்டு சிறைக்குத் திரும்பிய ராசா, யாத்தே... யாத்தே என்ற பாடலைப் பாடியவாறு ஆடும்போது பலத்த கைதட்டல்.

************
கற்பனை : கணேஷ்