Tuesday, September 1, 2009

என்ன கொடுமை சார் இது...?

எல்லோருக்கும் வேணுமே இந்த மகிழ்ச்சி...தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்து சுமார் மூன்று மாதங்களாகிவிட்டன. கட்டண உயர்வுகள் நடுத்தர மக்களையே முழிபிதுங்கச் செய்துவிட்டன. தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் பயிலும் தங்கள் குழந்தைகளுக்காகக்கூட கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல இடங்களில் அநியாயக் கட்டண உயர்வை எதிர்த்து பெற்றோர்கள் போர்க்கொடி உயர்த்தினர். சில இடங்களில் அந்த எதிர்ப்பினால் பள்ளி நிர்வாகங்கள் கட்டணத்தைக் குறைத்தன. கிட்டத்தட்ட காலாண்டுத் தேர்வை எதிர்கொள்ளும் நிலைக்கு இங்குள்ள குழந்தைகள் வந்துவிட்டன.

வட இந்தியப் பள்ளிகள் பெரும்பாலும் ஜூலை மாதத்தில்தான் திறக்கப்படுகின்றன. சுமார் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் கட்டண உயர்வு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. போட்டி என்றால் அடுத்தவரின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருப்பதால் சாதாரண மக்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முயற்சிக்கின்றனர். கடன்பட்டாவது தனது குழந்தைகளையும் போட்டியில் பங்கேற்க முனைகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் அநியாயத்திற்கு உயர்த்தப்படும் கட்டணங்கள் அவர்களை நிலைகுலையச் செய்கின்றன. அவர்களின் குழந்தைகளோ வாழ்வில் மறக்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே வில்லன்களாகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது மகாராஜா பள்ளி. இதை ரமேஷ் சைன் என்பவர் நடத்திவருகிறார். இந்தப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி நடப்பாண்டிற்கான கல்விக்கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை. அது குறித்து விசாரிக்க தனது அறைக்கு வருமாறு அழைத்த ரமேஷ் சைன் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்தக்கொடுரம் அம்பலமானதால் ரமேஷ் சைன் தலைமறைவாகிவிட்டார். அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காவல்நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கைது செய்யாததால் பள்ளிக்கூடம் மீது கற்களை வீசியுள்ளனர். இவ்வளவு நடந்தும் ரமேஷ் சைன் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தனியார் பள்ளியின் கொடுரங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக ஃபரீதாபாத்தில் நடந்த சம்பவம் உள்ளது. அரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் உள்ள பள்ளியொன்றில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாணவிக்கு கல்வி கட்டணம் கட்டுவதிலிருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால் கட்டணத்தைக் கட்டியே ஆக வேண்டும் என்று பள்ளிநிர்வாகம் பிடிவாதம் பிடித்தது. அதோடு நிற்கவில்லை, வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் முன்பாக அந்தச் சிறுமியை நிறுத்திய இரு ஆசிரியைகள் மேலாடையை அவிழ்த்திருக்கிறார்கள். இதுதான் எல்லை என்று நினைப்பதற்குள் அடுத்த கொடுரத்தையும் அரங்கேற்றினார்கள்.

அந்த அரைகுறை ஆடையோடு ஒவ்வொரு வகுப்பறையாக அழைத்துச் சென்றார்கள். மற்ற வகுப்பறைகளில் இருந்த மாணவிகளை, வெட்கம், வெட்கம்(ஷேம், ஷேம்) என்று குரல் எழுப்பப் சொல்லியிருக்கிறார்கள். கண்ணீரோடு தனது இரு கைகளையும் மார்பின் குறுக்கே வைத்து மறைத்துக் கொண்டு சென்ற கொடுமை பல மாணவிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த கொடுமைக்கு உள்ளான சிறுமியின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவர்களது குடும்பம் மிகவும் குறைவான வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தது. கொடுரத்தை நிகழ்த்திய லலிதா மற்றும் நீது என்ற இரு ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அவமானத்தை சந்தித்துள்ள அந்தச்சிறுமியின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

தனியார் கல்வியின் குரூரவடிவங்கள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் இருக்கிற அரசுப்பள்ளிக்கூடக் கட்டிடங்களில் முதல் மாடி, இரண்டாம் மாடிகளை தனியாருக்கு விட்டு புரட்சி செய்ய மத்திய கல்வித்துறை அமைச்சர் கபில் சிபல் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதத்தை கல்வித்துறைக்கு அரசு செலவு செய்யும் என்று 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தபிறகும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் தற்போது இல்லாததால் உறுதிமொழியையே எடுத்து விட்டார்கள்.

1 comment:

  1. ganesh! Ive seen the report in T.V.Something is nagging in me.the cost of education is prohibitory.evenupper middle canot aford.the house wife,children,students ,and all are talking aboutthe atrocities hurld against these poor girls.nobody discusses about the cost of education.we talk about drinking water only in summer.we must do some sustained action......kashyapan.

    ReplyDelete