Sunday, August 2, 2009

குண்டுகளுக்கு நடுவில் கேடயமாகக் குழந்தைகள்மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட உள்நாட்டு தீவிரவாதமே நாட்டின் முன்நிற்கும் மிகப்பெரிய சவாலாகும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார். அந்த அளவிற்கு மாவோயிஸ்டுகளின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. ஆந்திரா, ஒரிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் நிர்வாகம்தான் பல மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு எந்திரங்கள் முடங்கிய நிலையில்தான் உள்ளன. 2008 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 1,591 ஆகும். இதில் 620 சம்பவங்கள் சத்தீஸ்கரில்தான் நிகழ்ந்துள்ளன.


மேற்குவங்கம் லால்கரில் மாவோயிஸ்டுகளின் வெறியாட்டத்தை மக்கள் போராட்டமாகச் சித்தரிக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நிர்வாகமே அலங்கோலமாகக் இருப்பதைக் கண்டு கொள்வதில்லை. 2008ல் சத்தீஸ்கரில் நடந்த 620 சம்பவங்களில் 157 அப்பாவிப் பொதுமக்களும், பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 85 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 828 அப்பாவிகள் மாவோயிஸ்டுகளின் கொலைவெறித்தாக்குதல்களுக்குப் பலியாகியுள்ளனர். மாநிலக்காவல்துறையினரைத் தவிர 35 துணை ராணுவப் படையின் பட்டாலியன்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.


லால்கரில் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளை விரட்டியடிக்க சென்றுள்ள துணை ராணுவப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் இந்த 35 பட்டாலியன்கள் கிட்டத்தட்ட நிரந்தர முகாம்களை அமைத்துவிட்டார்கள் என்பதைக் கண்டுகொள்வதில்லை. அதோடு இந்த மாநிலத்தில் உள்ள தெற்கு பஸ்தர் பகுதி பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிர்வாகமோ அல்லது அரசியல் தலைவர்களோ அந்தப்பகுதிக்குள் நுழைய முடியாது. ஒப்பந்ததாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜககாரர்களிடமிருந்து பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.


இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ரத்தத்திற்கு ரத்தம் என்ற பாணியையே கடைப்பிடிக்கின்றன. சல்வா ஜுதும் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி மாவோயிஸ்டுகளை வேட்டையாட முற்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் சல்வா ஜுதும் மோதலுக்கு முதல் பலியே ஜனநாயகம்தான். மாவோயிஸ்டுகளோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த சமூக விரோதிகள் சல்வா ஜூதுமுக்கு மாறி விட்டார்கள். அவர்கள் அட்டகாசங்கள் அரசின் ஆதரவோடு நடக்கின்றன. இந்த லட்சணத்தில் மேற்கு வங்க அரசைக் குறை கூறிப் பேசிக்கொண்டிருக்கிறார் சத்தீஸ்கர் மாநில முதல்வரான ராமன்சிங்.


குழந்தைகளை தங்கள் வன்முறை வெறியாட்டங்களுக்கு மாவோயிஸ்டுகள் தயார்படுத்துகிறார்கள் என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டு. பாலர் சங்கங்கள் என்று உருவாக்கி புரட்சிக்கான போரை நடத்துவதற்காக அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கிறார்கள். போட்டிக்கு சல்வா ஜுதும் அமைப்பில் சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் அரசும் குழந்தைகளைச் சேர்க்கிறது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவ்வாறு சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இரு தரப்பினருமே சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மீறுகின்றனர். இருதரப்புமே இந்தக்குழந்தைகளைக் கேடயமாகவே பயன்படுத்துகின்றன.


சல்வா ஜூதும் அமைப்பு தனது மதவெறிக் கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை பரப்புகின்றன. கம்யூனிச எதிர்ப்பு உணர்வு கொண்ட பாஜக மாநில அரசு, சிபிஎம் மற்றும் சிபிஐ ஊழியர்களை மாவோயிஸ்டுகளோடு இணைத்துப் பேசி அவர்களைக் குறிவைக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமுமே மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள எந்தக் கொள்கையும் இல்லை. காவல்துறையை மட்டுமே நம்பியுள்ளார்கள். இதில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள என்று கேட்டு வாங்கும் நிதியில் ஏராளமான ஊழல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.


இருதரப்பிற்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான பழங்குடியினர் ஊரைக்காலி செய்து விட்டனர். இவ்வாறு கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை மாநில பாஜக அரசும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் இரும்பு எஃகு, தங்கம், யுரேனியம் மற்றும் பாக்சைட் ஆகிய இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் இவற்றை மனதில் கொண்டு வட்டமடிக்கின்றன. பாஜக அரசும் நிலங்களைத் தாரை வார்ப்பதற்கான காரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரசும் உடந்தைதான்.

No comments:

Post a Comment