Saturday, April 18, 2009

நாம புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க...

தொலைபேசி ஒலிக்கிறது
கையில் எடுக்கும் அத்வானி : ஹலோ..

மறுமுனையில் மன்மோகன்சிங் : என்ன அத்வானிஜி... பேப்பர் பாத்தீங்களா...

அத்வானி : ஆமா... நாம ரெண்டு பேரும் இறுக்கமா இருந்ததா செய்தி வந்திருக்கு,..

மன்மோகன்சிங் : நாம சந்தோஷமா சிரிச்சுப் பேசுற மாதிரியா நிலைமை இருக்கு...

அத்வானி : அதான... மூணாவது அணி கானல் நீர்னு சொல்லிப்பாத்தேன்... ஆனா எங்க ஆளுங்களே நம்ப மாட்டேங்குறாங்க....

மன்மோகன்சிங் : சொன்னது நீங்களாச்சே... அப்புறம் எப்புடி நம்புவாங்க....

அத்வானி : சில சமயம் என்னை விட தைரியமா நீங்க பேசுறீங்க...

மன்மோகன்சிங் : எதச் சொல்றீங்க... மாநிலக்கட்சிகளால பிரயோஜனம் இல்லைனு சொன்னதச் சொன்னீங்களா...

அத்வானி : ஆமா... நான் எப்புடி சொல்வேன்... நிதிஷ் குமார் கோவிச்சுக்குவார்... ஏன்... மோடியே கோவிச்சுக்கிட்டாலும் ஆச்சரியமில்லை...

மன்மோகன்சிங் : எங்க கூட இருந்த மாநிலக்கட்சிலாம் கழண்டுருச்சே... திமுக மட்டும்தான் இருக்கு... அவங்களுக்கு வேற வழியில்ல...

அத்வானி : எங்க கூட இருக்குற நிதிஷ்குமாரும் அப்படித்தான்....

மன்மோகன்சிங் : நீங்கமட்டும்னா தேர்தல்ல ஜெயிச்சுரலாம்னு நெனச்சுட்டுருந்தோம்...

அத்வானி : நாங்களும் அப்படித்தான் நெனச்சோம்... ஆனா போற போக்கப்பாத்தா நம்ம ரெண்டு பேருக்குமே கிடைக்காது போலருக்கே...

மன்மோகன்சிங் : ஆமாமாம்... ரொம்ப நாளைக்கப்புறம் நெறய இடங்கள்ல தனியா நிக்குறோம்...

அத்வானி : தனியா நிறுத்திட்டாங்கன்னு சொல்லுங்க...

மன்மோகன்சிங் : உங்களுக்குத் தான் நல்லா தெரியுமே... அதே நிலைமைலதான நீங்களும் இருக்கீங்க... காந்தி சொன்னது நடந்துரும்போல இருக்கு...

அத்வானி : எதச் சொல்றீங்க...

மன்மோகன்சிங் : சுதந்திரம்தான் கிடைச்சுருச்சே... காங்கிரசக் கலைச்சுறலாமேன்னாரு...

அத்வானி : வருண்காந்தி அப்படி எதுவும் சொல்லலியே...

மன்மோகன்சிங் : ஓ... அவருதான் உங்களுக்கு காந்தியா...?? அசல் அகிம்சைவாதியத்தான் புடிச்சுருக்கீங்க..

அத்வானி : டைட்லர், சஜ்ஜன்குமார்லாம் காந்தியோட வாரிசுகள்தானே...?

மன்மோகன்சிங் : ரெண்டு கட்சி முறை வேணும்னு சொல்றது எவ்வளவு வசதியா இருக்கு பாத்தீங்களா... நீங்க என்ன யோக்யம்னு கேட்டுட்டு மாத்தி, மாத்தி பேசிட்டே இருக்கலாம்...

அத்வானி : இந்த முறை அது செல்லுபடியாகாது போலருக்கே...

மன்மோகன்சிங் : அந்த உதறல் இருந்துக்கிட்டே இருக்கு...

அத்வானி : இருந்தாலும் இப்படி நாம பேசுனதுனால இறுக்கம் குறைஞ்சுருச்சு பாத்தீங்களா... நாம புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கன்னு ஒரு ஆட்டமே போடலாம் போலருக்கு... ஆனா பிரதமர்தான் ஆகப்போறதில்லை... வேட்பாளர் பதவியும் பறிபோயிருமே...

மன்மோகன்சிங் : மக்கள் பிரச்சனயப் பத்தி பேசுனாதான் இறுக்கம் கூடிருது...

அத்வானி : கிழடு, பொம்மை, ராமர் கோவில்னு பேசிக் கழிப்போம்...
( இறுக்கம் குறைகிறது. தொலைபேசியை இருவரும் வைக்கிறார்கள்.)

Thursday, April 16, 2009

"ஒட்டுமொத்தமா காப்பாத்துங்களேன்..."

தேர்தல் தேதி நெருங்க, நெருங்க எத்தகைய பிரச்சார உத்திகளைக் கடைப்பிடிக்கலாம் என்பதை விவாதிக்க திமுக வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வேட்பாளர்களோடு அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆர்க்காடு வீராசாமி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மு.க.ஸ்டாலின்: என்ன நிலைமை மோசமாயிருக்கோ...?
டி.ஆர்.பாலு : ஆமா... டி.வி. கொடுத்தீங்க... கரண்ட் என்னாச்சுன்னு பிடி, பிடின்னு பிடிச்சுக்குறாங்க...
ஆர்க்காட்டார் : டி.வி. பாக்காத வரைக்கும் நல்லது... இல்லைனா டி.வி.யோட லட்சணம் தெரிஞ்சுருமே... நம்ம நலனுக்காகத்தான் கரண்ட் கட் பண்ணிருக்கோம்...
மு.க.அழகிரி : நான் கூட நம்ம பிரச்சாரத்துக்கு இவ்வளவு கூட்டம் வந்துருக்கே... ஜெயிச்சுருவமான்னு கேட்டேன்... அப்படில்லாம் இல்லை... கரண்ட் இல்லை... எல்லாரும் காத்து வாங்க வெளில நிக்குறாங்கன்னு சொன்னாங்க...
ரித்தீஷ் : என்னோட படத்த தொடர்ந்து போட்டா மக்கள் சந்தோஷமா இருப்பாங்க... எல்லா டி.வி.லயும் போடலாம்... செலவ நானே ஏத்துக்குறேன்... ஆனா கரண்ட் இருந்தாதானே பாப்பாங்க...
ஆர்க்காட்டார் : உங்க படத்த தொடர்ந்து மூணு நாள் போட்டா நீங்க நிச்சயமா ஜெயிச்சுருவீங்க...
ரித்தீஷ் : உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி...
ஆர்க்காட்டார் : எம்.பி.யாயிட்டா இப்புடி படத்துல நடிச்சு கொடுமைப்படுத்த மாட்டார்... அதனால ஓட்டுப்போட்டு டில்லிக்கு அனுப்பிருவோம்னு முடிவு பண்ணிருவாங்க... ஆனா மத்த தொகுதிலாம் போயிருமே...
மு.க.அழகிரி : நான் கலைஞர் மகன் வந்துருக்கேன்...
தயாநிதி(போட்டிக்கு) : நான் கலைஞர் பேரன் வந்துருக்கேன்...
மு.க.ஸ்டாலின் : என்ன செய்யலாம்னு கேட்டா பிரச்சாரத்துக்கு ஒத்திகை பாத்துட்டுருக்கீங்களே...
நெப்போலியன் : என்னோட சினிமா டயலாக்குலாம் தொகுத்து வெச்சுருக்கேன்... அத எடுத்து விடலாமே...
ஆர்க்காட்டார் : கரண்ட்ட ஞாபகப்படுத்துற மாதிரியில்லாம பாத்துக்குங்க...
நெப்போலியன் : இழவு விழுந்தா நான்தான் பொணமா இருக்கணும்...கல்யாண வீடுன்னா நான்தான் மாப்பிள்ளை...
தயாநிதி : பொணம் அது, இதுன்னு பேசாதீங்க... நாங்களே மதுரை ஆபீஸ் தாக்கப்பட்டத மறந்துட்டோம்...
ஆ.ராசா : புலிகள்....
மு.க.ஸ்டாலின்: புலிகள் பிரச்சனையெல்லாம் தலைவர் பாத்துக்குவாரு... நீங்க விட்டுடுங்க...
ஆ.ராசா : தளபதி... நான் அதச்சொல்லலை... புலிகள் காப்பகம் திட்டத்துனால பாதிப்பு இருக்குமாம்...
ஆர்க்காட்டார் : நாம காப்பாத்திருவோம்னா நம்புறாங்க... நம்மளத்தவிர யாரயும் காப்பாத்திருவோம்னு நம்பிக்கை வர்ற மாதிரி இதுவர நாம நடந்துக்கலையே...
ஜெகத்ரட்சகன் : என்னைக் காப்பாத்துவீங்கன்னு வேட்பாளர் பட்டியல் அறிவிச்ச பிறகுதான் தெரிஞ்சுது...மற்ற வேட்பாளர்கள் : ஒட்டுமொத்தமா எல்லாரையும் காப்பாத்த முடியாதா... அதுபத்தி பேசுறதுக்குதான இங்க கூடுனோம்...
ஆர்க்காட்டார் : வேணும்னா பேச மாட்டேங்குறோம்... சட்டில இருந்ததான அகப்பைல வரும்... திருமங்கலத்துல செஞ்ச மாதிரி....
('நம்ம "வெட்டு"த்துறை அமைச்சரு நம்ம சொத்தையே வெட்டி விடுற வேலைய ஆரம்பிச்சுட்டாரு...' என்று கூறியவாறு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் வேட்பாளர்கள் அனைவரும்.)

Friday, April 10, 2009

உடல் நலத்தையும் பாதிக்கும் சர்வதேச நெருக்கடி!

அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியில் துவங்கி சர்வதேச பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ள சிக்கலால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. அசோசம் என்ற முதலாளிகளின் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. வேலைப்பளுவால் ஏற்படும் அனைத்து நோய்களாலும் இவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நெருக்கடியால் ஆட்குறைப்பு ஒரு புறம், மறுபுறத்தில் ஊழியர்களின் வேலைப்பளு கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கணினித்துறை, ஊடகம், நிதித்துறை சேவை மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கணினித்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மன அழுத்தம், கடுமையான தலைவலி, உடல் பருமன், நீண்டகாலத்தலைவலி, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மையாலும் இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

ஊடகத்துறையில் பணிபுரிபவர்களில் 51 சதவீதம் பேர் பணிச்சுமையால் நோய்வாய்ப்பட்டதாகக் கூறுகின்றனர். அவர்களில் 36 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. ஆய்வுக்காக சந்தித்தவர்களில் 90 சதவீத ஊழியர்கள் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் கணினித்துறைதான் அதிகம் பாதிக்கப்பட்டது என்றாலும், நிதித்துறை சேவைப்பணிகளும் பின்தங்கவில்லை. இதில் 47 சதவீத ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.தொலைத்தொடர்ப்புத்துறையில் 18 சதவீதம் பேர் உடல் பருமன் தொல்லையாலும், 13 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி, ஜவுளித்துறை போன்ற துறைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அத்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப்பாதிப்புகளுக்கு பணியிடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே உள்ளன. கடந்த சில மாதங்களில் பணியிட நெருக்கடியால் உருவான நோய்களுடன் எங்களை அணுகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார் பிரபல மருத்துவர் சங்கீதா ஜெயின்.

வேலை நேரம் நிர்ணயிக்கப்படாமல் பணியாற்றுவது பலரைப் பாதித்துள்ளது. இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்கிறார் சங்கீதா.இந்தத்துறைகளில் நேரமெல்லாம் பார்க்கக்கூடாது என்று ஊழியர்களின் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்கள் காலத்தோடு ஒட்டிப்போகாதவர்கள் என்றெல்லாம் பட்டப்பெயருடன் அலைந்தனர்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கணினித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு என்று பிரத்யேக ஏற்பாடுகள் உள்ளன. தொடர்ந்து கணினித்திரையைப் பார்ப்பவர்களுக்கு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்படுவதை கணினித்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் வேலை நேரம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொள்வதன் மூலமே ஊழியர்களைப் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.இத்தகைய கருத்துகளை பொதுவாக தொழிற்சங்கமே முன்வைக்கும். கணினித்துறையில் தொழிற்சங்கத்தின் அவசியத்தை இத்தகைய சம்பவங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றன.

Sunday, April 5, 2009

"சிரிப்பு காங்கிரஸ் "



தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது.


சோனியா : நமஸ்கார்... நேரம் போய்ட்டே இருக்கு... எப்படி நம்ம பிரச்சாரத்தக் கொண்டு போலாம்னு சொல்லுங்க...

மன்மோகன்சிங் : நம்ம செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வி நல்ல காரியம் செஞ்சிருக்கார்... நம்ம ஆட்சினாலதான் எட்டு ஆஸ்கர் விருதுன்னு ஒரே போடா போட்டுருக்காரு...

ராகுல்காந்தி : இப்படிலாம் சொன்னா ஜனங்க நம்புவாங்களா...

மன்மோகன்சிங் : நம்புறதுக்கா சொல்றோம்... ஏதாவது சொல்லணும்ல...

திக்விஜய்சிங் : இப்படி ஏதாவது சொன்னாதான் நம்மள எதிர்த்து கேள்வி கேப்பாங்க... மத்த விஷயங்கள்லாம் பின்னால போயிரும்..

ராகுல் காந்தி : நம்ம பிரச்சாரக்குழுவுக்கு சிங்விய தலைவராப் போட்டுருவோம்...

சிங்வி : அப்ப எனக்கு தேர்தல்ல சீட் கிடையாதா...??

குலாம்நபி ஆசாத் : யாரத் தலைவராப் போடணும்குறத சீட் எல்லாம் குடுத்த பிறகு முடிவு பண்ணலாம்... சீட் இல்லாதவருக்கு இதக் கொடுத்து ஏமாத்திடலாம்...

மன்மோகன்சிங் : இந்த பொருளாதார...

(குறுக்கே புகுந்து) ப.சிதம்பரம் : அதுக்கான உரைய ரெடி பண்ணிட்டேன்... சீர்திருத்தங்கள்னு சொல்லி பாஜக தனியார் மயம், தாராளமயம், உலகமயம்னு மக்கள ஏமாத்தப் பாத்தாங்க... காங்கிரஸ் ஆட்சிக்கு வரலைன்னா எல்லாத்தையும் வித்திருப்பாங்க...

எஸ்.எம்.கிருஷ்ணா : இது நீங்க எழுதுன மாதிரி தெரியலையே...

தங்கபாலு : அவரு நாற்காலில பாருங்க... கருப்பு கோட்டு தொங்குது...இங்கருந்து கிளம்புற அவரு வண்டி கோர்ட்டு காம்பவுண்டுக்குள்ளதான் போய் நிக்கும்..வாதத்திறமைய இங்க பரிசோதனை பண்ணிப் பாக்குறாரு...

குலாம் நபி ஆசாத் : எனக்குதான் அதிக வேலை(அலுத்துக் கொள்கிறார்)சோனியா காந்தி : என்ன சொல்றீங்க...??

திக்விஜய்சிங் : ஆமா, சோனியாஜீ... அவர தமிழ்நாட்டுக்கு பொறுப்பா போட்டுட்டீங்க... தங்கபாலுவுக்கு சீட் கொடுக்க சிதம்பரம், வாசன், பிரபு, இளங்கோவனையெல்லாம் சரிக்கட்டணும்..அப்புறமா இளங்கோவனுக்கு சீட் குடுக்க சிதம்பரம், வாசன், பிரபு, தங்கபாலுன்னு எல்லாத்தையும் சரி பண்ணணும்... பிரபுவுக்கு சீட் தர அவரைத் தவிர எல்லாருகிட்டயும் பேசணும்... சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க அவரையே சரிக்கட்டணும்.. இப்புடி எப்ப பாத்தாலும் பிக்கல், பிடுங்கலோட இருப்பார்... வேற என்னத்த செய்ய முடியும்..??

மன்மோகன்சிங் : அப்படின்னா நானே பிரச்சாரக்குழுவுக்கு தலைமை ஏத்துக்குறேன்... எனக்குதான் தேர்தல்ல நிக்க சீட் இல்லையே...

அகமது படேல்(மனதுக்குள் : தேர்தல்ல நிக்காம தப்பிக்க இப்புடி ஒரு வழி இருக்கா...) நானும் அந்தக்குழுவுல சேந்துக்குறேன்...

சோனியா காந்தி : சரி...சரி... இப்புடியே பேசிட்டிருந்தா எப்படி... பிரச்சாரத்துக்கான விஷயங்கள சொல்லுங்க..

பிரணாப் முகர்ஜி : வெளிநாடுகள்ல எப்புடி பிரச்சாரம் பண்ணுறாங்கன்னு நான் போய்ப் பாத்துட்டு ஜூன் முதல் வாரத்துக்குள்ள வந்துர்றேன்...

(தொலைபேசி அலறுகிறதுஅகமது படேல் அதை எடுக்கிறார். பேசிவிட்டு சிரித்துக் கொண்டே வருகிறார்.)

சோனியா காந்தி : யாரு லைன்ல...

அகமது படேல் : ஜார்ஜ் பெர்னான்டஸ்... எந்தக் கட்சில இருக்கேன்னு மறந்துட்டாராம்.. எல்லா கட்சி ஆபிசுக்கும் போன் போட்டு பேசிட்டிருக்கார்.

ப.சிதம்பரம் : ஒபாமா வெச்ச மாதிரி மாற்றம்ங்குற முழக்கத்த வைக்கலாம்...

தங்கபாலு : இவர நிதித்துறைய விட்டு மாத்துனதுலருந்து மாற்றம்ங்குற நெனப்புதான்....

திக்விஜய்சிங் : சும்மா இருக்க மாட்டீங்களா... நம்மள மாத்தனுணம்னுதான் இதுவரைக்கும் மக்கள் நெனச்சுருக்காங்க... அத நினைவுபடுத்துறதா ஆயிரும்...

ராகுல்காந்தி : ஆனா இளைஞர்கள்லாம் மாற்றம்தான் முழக்கம்னு சொல்றாங்க...

அகமது படேல் : எங்களலாம் மாத்தணும்னு சொல்லிருப்பாங்க...

ஆல்வா : பிரச்சாரம் பத்தி சீக்கிரம் பேசி முடிங்க... அடுத்து தேர்தல் சீட் விற்பனைப்பிரிவுப் பொறுப்பாளரத் தேர்ந்தெடுக்கணுமே...

அந்தோணி : என் தலைமைலான கமிட்டி சொன்னபடி பாத்தா உங்களுக்கு இன்னும் அஞ்சு வருஷத்துக்கு பொறுப்பு கொடுக்கக்கூடாது...

குலாம் நபி ஆசாத் : அந்தோனிஜீ, அறிக்கை வெச்சதோட உங்க வேலை முடிஞ்சுது... மண்டல் கமிஷன் போட்டோம். அறிக்கைய வாங்குனோம்... நிறைவேத்தவா செஞ்சோம்...கமிட்டி போடுறதே யாருக்காவது பதவி கொடுக்கத்தான... தேர்தல் சீட் கொடுக்காம மனசுல இடம் கொடுத்தா ஏத்துக்குற காலம்லாம் மலை ஏறிடுச்சே...

சோனியா : பிரச்சாரம் பண்ண ஏதாவது சொல்லுங்கன்னா... ஆளாளுக்கு பேசி நேரத்த வீணாக்குறீங்களே...

மன்மோகன்சிங் : கண்டிப்பா எல்லாரும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பத்திப் பேசணும்...

ப.சிதம்பரம் : இந்த ஒப்பந்தம்குற ஒரே கல்லுல மாங்காய் மரமே ஆடிப்போச்சுன்னு சரவெடி கொளுத்திப் போட்டுடணும்..

ராகுல்காந்தி : எப்படி...??

ப.சிதம்பரம் : அதான் சரணடைஞ்சுட்டோம்ல... அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிஞ்சுரும்குற குற்றச்சாட்டை இனி யாராவது எழுப்ப முடியுமான்னு கேட்டு மடக்கிடலாம்...

அகமது படேல் : பாஜகவப் பாத்துக்கூட நக்கல் பண்ணலாம்...உங்களால முடியாதத நாங்க பண்ணிட்டோமேன்னு கேக்கும்போது இதுக்காக 13 முறை ரகசியமா பேசுன ஜஸ்வந்த் சிங் கண்ணுல தண்ணியே வந்துரும்...

திக்விஜய்சிங் : ஏற்கெனவே மக்கள் கண்ணுல தண்ணி வந்துக்கிட்டுதான் இருக்கு...

எஸ்.எம்.கிருஷ்ணா : 300 டிஎம்சிக்கு மேல வந்தா நிறுத்திரணும்... அப்பதான் தண்ணிய வெச்சு பிரச்சாரம் பண்ண முடியும்...

தங்கபாலு : 300 டிஎம்சி தரலேண்ணாலும் தந்துட்டதா சொல்லி நிறுத்திரணும்...அப்பதான் தமிழ்நாட்டுல பிரச்சாரம் களை கட்டும். இதவெச்சு விலைவாசி, நெருக்கடியெல்லாத்தையும் மறக்கடிக்கலாம்...

சோனியா : உருப்படியா ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குதே...

அர்ஜூன் சிங் : அப்ப வழக்கம்போல நம்ம வேலைய ஆரம்பிச்சுடலாம்... வேற வழியில்ல..

சோனியா : ஆமா... ராகுல்தான் பிரதமர்னு நீங்க, ஆசாத், அகமது படேல்லாம் பேசுங்க...

மன்மோhகன்சிங் : எப்படினாலும் அவர் ஆகத்தானே போறார்... அப்படினு எப்ப சொல்லணும்னு சொன்னீங்கன்னா அலாரம் வெச்சுக்குவேன்...

தங்கபாலு : தமிழ்நாட்டுல இந்த சிரமமே கிடையாது... காங்கிரசுன்னா கோஷ்டி சண்டை, வேட்டி கிழிவது அப்படிங்குற ஞாபகந்தான் மக்களுக்கு வரும்..எங்ககிட்டலாம் யாரும் சீரியசா விலைவாசி, பொருளாதார நெருக்கடின்னுலாம் பேசமாட்டாங்க... தமிழ்நாட்டுல சிரிப்பு காங்கிரஸ்... இந்த உத்திய நாடு முழுக்க கொண்டு போனா...

(இவ்வளவு நேரம் கண்ணை மூடி பேசிக் கொண்டிருந்த தங்கபாலு விழித்துக் கொள்கிறார்) போய்ட்டாங்களா...

கற்பனை : கணேஷ்


Friday, April 3, 2009

"நான்தான் பிரதமர் வேட்......"

இடம் : புதுடில்லி
அத்வானியின் செய்தியாளர் சந்திப்பு

அத்வானி : வணக்கம். கேள்விகள நீங்க கேட்குறீங்களா... நானே கேட்டுக்கட்டுமா...?

செய்தியாளர்கள் : நீங்க சொல்ற சொல்லுங்க... அப்புறமா கேட்டுக்குறோம்..

அத்வானி : நான்தான் பிரதமர் வேட்....

செய்தியாளர்கள்( இடைமறித்து) : தேர்தல்பத்தி ஏதோ சொல்றதா சொன்னீங்களே...??

அத்வானி : நாங்க ஆட்சிக்கு வந்தாதான் பயங்கரவாதத்துக்கெதிரா பயப்படாம நடவடிக்கை எடுப்போம்..

செய்தியாளர்கள் : காந்தஹார் சம்பவத்துல அடங்கிப்போய் பயங்கரவாதிகள விடுவிச்சதா உங்க மேல குற்றம் சாட்டப்படுதே...

அத்வானி : அந்தப்பயங்கரவாதிகளோட பயப்படாம ஆப்கானி°தான் வரைக்கும் ஜ°வந்த்சிங் போனாரே... இப்புடி பயங்கரவாதிகளோட சரிசமமா உக்காந்துக்கிட்ட போக வேறு யாருக்கு தைரியம் வரும்...

செய்தியாளர்கள் : உறுதியான நடவடிக்கை எடுக்கணும்னு...

அத்வானி : அவங்க என்ன அப்பாவி மு°லீமா... உறுதியா நடவடிக்கை எடுக்க...??

செய்தியாளர்கள் : நீங்கதான் உண்மையான மதச்சார்பற்றவர்கள்னு சொல்லிக்குறீங்களே...

அத்வானி : பின்ன... போட்டிக்கு வந்துறக்கூடாதுன்னு அயோத்திலயே எவ்வளவு கோவில இடிச்சுருக்கோம்... மசூதிய இடிச்சோம்... பைபிளக் கொளுத்திருக்கோம் ... ஒரிசாவுல கன்னியா°திரீ ஒருத்தரயும் எங்க ஆளுங்க பலாத்காரம் செஞ்சாங்களே... மதமா பாத்தோம்...

செய்தியாளர்கள் : குஜராத் அமைச்சர் ஒருத்தர் மேல கலவரம் செஞ்சதா குற்றம் சாட்டிருக்காங்களே...

அத்வானி : அதனாலதான அமைச்சரே ஆனாரு... இப்ப பாருங்க. வருண்காந்தி எவ்வளவு பிரபலமாயிட்டாருன்னு...

(தொலைபேசியில் டிரிங்... டிரிங்...)
ஹலோ... யாரு கணேசன்ஜியா சொல்லுங்க... என்ன அப்புடியா... கூட்டணிக்கட்சிகளுக்கு எப்புடி சீட் ஒதுக்குறீங்க... ஓஹோ... பாஜக(சிபிஆர்) கட்சிக்கு கோவை, பாஜக(ராஜா) கட்சி சிவகங்கை கேக்குது... ஆனா கொடுக்க முடியலையா... ஏன்... ஓ.. சரி.. சரி.. பாரதீய ஜனதா கழகமா... அது என்ன... நம்ம திருநாவுக்கரசர் கட்சியா... அவங்களுக்கு ராமநாதபுரம்... நீங்க எங்க நிக்குறீங்க... எங்க நடுத்தெருவுலயா... ஏன்... ஓ... தெருமுனைல கூட்டமா... இன்னும் எத்தனை சீட்ல உடன்பாடு எட்டணும்... சரி... சரி... சீக்கிரம் முடிங்க...
அத்வானி : தமிழ்நாட்டுலருந்து பேசுறாங்க...கூட்டணி வலுவா இருக்காம்...
செய்தியாளர்கள் : அங்க ஒரு சீட்டுகூட கிடைக்காதுன்னு சொல்றாங்களே...
அத்வானி : அதெல்லாம் பொய்ப்பிரச்சாரம்... போன தடவ எவ்வளவு வாங்குனோமோ அதை விடக்கூடவும் மாட்டோம்.. குறையவும் மாட்டோம்...

செய்தியாளர்கள் : போன தடவ ஒரு எம்.பி.கூட அங்க கிடையாதே...

(கவனிக்காதவர் போல் தொலைபேசி எடுத்து டயல் செய்யத் துவங்கினார் அத்வானி)

அத்வானி : ஹலோ... யாரு.. வெங்கய்யா நாயுடுவா...

(மறுமுனையில்) வெங்கய்யா நாயுடு : ஆமா அத்வானிஜி... சொல்லுங்க...

அத்வானி : எப்படி இருக்கு நிலைமை..??

வெங்கய்யா நாயுடு : தனியா இருக்குறதுனால கொஞ்சம் பயமாத்தான் இருக்கு...

அத்வானி : ஏதாவது ரெண்டு கட்சிய சேத்துக்குங்க... ஆனா நான்தான் பிரதமர்வேட்பாளர்னு ஒப்புக்கணும்...

வெங்கய்யா நாயுடு : அதச் சொல்லலீங்க... இங்க நம்ம ஆபீ°லதான் இருக்கேன்... பக்கத்துல யாருமே இல்லீங்க... தனியா இருக்கேன்... அந்தப்பயத்த சொன்னேன்...(தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது)

அத்வானி : என்ன கேட்டீங்க...

செய்தியாளர்கள் : தேர்தல் அறிக்கை வெளியிட ஏன் இவ்வளவு நாளாச்சு... முதல் கட்டத்துக்கு பாதிப்பிரச்சாரம் முடிஞ்சு போச்சே...

அத்வானி : எங்க இணையதளம் பாத்தீங்களா.. அதுலருந்து எடுத்துருக்கலாமே...?

செய்தியாளர்கள் : அதுல உங்க பேரத்தவிர வேற எதுவும் இல்லையே...

அத்வானி : ஹை... பின்ன வேற எதையும் போட்டா என்னைக் கண்டுக்க மாட்டீங்களே...

செய்தியாளர்கள் : தேர்தல் அறிக்கை பத்தி ஏதாவது சொல்றீங்களா...?

அத்வானி : நான்தான் பிரதமர் வேட்...

(செய்தியாளர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்)

கற்பனை : கணேஷ்

கூட்டாளிகளைத் தேடி...!

இன்னும் கூட்டாளிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பாஜகவின் தமிழகக்குழு முடிவு செய்ததால் மற்ற கட்சிகளின் அலுவலகங்கள் முன்பாக கண்காணிப்புப் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டனர். அனைவரிடமும் வயர்லெஸ் கருவிகள் கொடுக்கப்பட்டிருந்தன.

இல.கணேசன் : ஹலோ..ஹலோ... கணேசன் பேசுறேன்... ஓவர்... ஓவர்..
எச்.ராஜா : சொல்லுங்க கணேசன்ஜி... தேமுதிக வாசல்லருந்து ராஜா பேசுறேன்... ஓவர்..

இல.கணேசன் : அங்க எப்புடி இருக்கு...

எச்.ராஜா : கட்சிக்காரங்ககிட்ட பேசுனதுல ஏழு உத்திகள் இருக்காம்... ஆனா நம்ம பேரு அடிபடல... நானாகத்தான் இனிம யாராவது கேட்டா எட்டு உத்திகள்னு சொல்லுங்கன்னு சொல்லிருக்கேன்... நீங்க எங்க இருக்கீங்க...

இல.கணேசன் : அதிமுக வாசல்ல இருக்கேன்... டீ குடுக்குற ஆள் மாதிரி உள்ள போலாம்னு இருக்கேன்... அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுல்ல...

ராஜா : நீங்க நீங்களாவே போங்க... அங்க யாருக்கும் அடையாளம் தெரியாது...

இல.கணேசன் : ரொம்பதான் நக்கல் பண்ணுறீங்க... வைங்க... தமிழிசை எங்க இருக்காங்கன்னு கேக்குறேன்... ஓவர்...

தமிழிசை : ஹலோ.... கணேசன்ஜீ... ஓவர்...

இல.கணேசன் : ஹலோ... தமிழிசை... சமக அலுவலகம் முன்னாலதான இருக்கீங்க...

தமிழிசை : அட... நீங்க வேற... அவங்க அலுவலகத்துக்குள்ளதான் இருக்கேன்... வர்ற போனைக் கூட நான்தான் எடுத்துக்கேக்குறேன்...ஓவர்...

இல.கணேசன் : ஹலோ... திருநாவுக்கரசரா... எங்க இருக்கீங்க...ஓவர்... ஓவர்...

திருநாவுக்கரசர் : நம்ம கட்சிலதான்...ஓவர்...

இல.கணேசன் : இது ரொம்பதான் ஓவரா இருக்கே... அதக் கேக்கலீங்க... உங்கள திமுக அலுவலகத்துக்குதான அனுப்புனோம்... அங்கதான் இருக்கீங்களா...

திருநாவுக்கரசர் : இங்க ஒரே குழப்பமா இருக்கு... எல்.ஜி.யும், செஞ்சியும் திமுகல சேர வர்றப்போ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிரலாம்னு பாத்தேன்... ஆனா அவங்க ரெண்டு பேரு மட்டும் வந்ததால உள்ள போக முடியல...

இல.கணேசன் : பாத்து இருங்க... தேர்தல் சீட்டுக்கான நேர்காணல் கூட்டத்தோட உள்ள போயிராதீங்க... உங்கள வெச்சு இணைப்பு விழா நடத்திரப் போறாங்க....

திருநாவுக்கரசர் : நேர்காணல் முடிவப் பாத்துட்டு அப்புறமா பேசிக்கலாம்...

இல.கணேசன் : ஆஹா... இருக்குற ஆளும்ல போயிருவீங்க போலருக்கு...ஓவர்...

(இல.கணேசனின் செல்போன் ஒலிக்கிறது)
ஹலோ...யாரு அத்வானிஜியா... சொல்லுங்க..

அத்வானி : என்ன கணேசன்ஜி... நிலைமை எப்படியிருக்கு...

இல.கணேசன் : எல்லாரையும் நல்லா கண்காணிச்சிட்டு வர்றோம்... நம்மளத்தவிர அத்தனை பேரும் குழப்பத்துல இருக்காங்க...

அத்வானி : அப்படியா...

இல.கணேசன் : ஆமா... 16 வகையான உத்திகள நாம வெச்சிருக்கோம்... அதுல எட்டு உத்தி தனியா நிக்குறதுதான்...சரத்குமாரும், கார்த்திக்கும் நம்மோட இருப்பாங்க... ஆனா கார்த்திக்கோட இன்னும் பேசலை... சரத்குமார் பகுஜன்சமாஜோட பேசுறாரு... அங்க இல்லைனா நம்மோட வந்துருவாரு... விஜய்காந்தோட பேசிருக்குறதா நானே அறிக்கை விட்டுட்டேன்... இவங்க வந்தா 15 தொகுதில போட்டியிடுவோம்... இல்லைனா ஏழு தொகுதில நிக்கலாம்... காங்கிரஸ் திமுகவ கழட்டி விட்டுட்டா திமுகவோட ஒட்டிக்கலாம்...

ஹலோ...ஹலோ... என்ன...திருநாவுக்கரசரா.... ஆமா... நம்ம அணிலதான் இருக்காரு... என்ன...சரியாக் கேக்கலையே... சிஎன்என் கருத்துக்கணிப்பா... ஆமா... தமிழ்நாட்டுல நமக்கு ஆறு சதவீதம் ஓட்டு இருக்குன்னு சொல்லிருக்காங்க.. அதெல்லாம் நம்பாதீங்க... அவ்வளவெல்லாம் நமக்கு இல்லை... ஆமா... இந்துக்களுக்கு எதிரா அந்த தொலைக்காட்சி சதி பண்ணுது...
(லைன் கட் ஆகிறது)

(அடுத்து வயர்லெஸ்சில் யாருடன் பேசலாம் என்ற யோசிக்கத் துவங்குகிறார் இல.கணேசன்.)