Sunday, November 28, 2010

உள்குத்தில் இறங்குவதுதான் சமூகநீதிப் பாதையா?

தமிழகத்தில் உள்ள அட்டவணை சாதியினரில் மூன்று பிரிவுகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவையாகும். பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய பிரிவுகளே அவை. நீண்ட நெடுங்காலமாக சாதி ரீதியான ஏற்றத் தாழ்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகப் பெற்ற உரிமைகளில் அட்டவணை சாதியினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றாகும். மனிதகுலம் சந்திக்கும் எந்த நெருக்கடியைப் பட்டியலிட்டாலும் இந்தியாவைப் பொறுத்த வரை, இந்த அட்டவணை சாதியினர்தான் அதில் அதிக நெருக்கடியைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது இந்த நிலை. அட்டவணை சாதியினருக்குள் ஒப்பிட்டுக்கொண்டால், எத்தனை முறை சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் ஒரு வரி என்னவென்றால், மூட்டைகளில் அடி மூட்டை என்கிற வரிக்குச் சொந்தக் காரர்களாக அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்று அட்ட வணை சாதியினரில் ஒரு சிறு பிரிவு முன்னேற முடிந்ததோ, அதுபோன்று உள் ஒதுக்கீடு தரப்பட்டால் அருந்ததியின மக்களில் ஒரு சிறு பிரிவினர் முன்னேற வாய்ப்புள்ளது என்ற கோரிக்கை 26 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தது.

இந்தக் கோரிக்கை காகித அளவில் தான் துவக்கத்தில் இருந்தது. அருந்ததிய சமூக அமைப்புகள் இந்தக் கோரிக்கை யை அந்த சமூகத்து மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றன. 2007 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு கிடைத்தது. வலுவான மக்கள் இயக்கங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் அருந்ததிய அமைப்புகளால் நடத்தப்பட்டன. இந்த இயக்கங்களுக்கு அருந்ததிய மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற தரப்பினரிடம் கிடைத்த ஆதரவு அரசிடம் அசைவை ஏற்படுத்தியது. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் குழு ஏற்படுத்தப்பட்டது. அருந்ததிய மக்க ளின் துயர நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அக்குழு, மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்தது. சட்டமன்றத்தில் 2009, ஏப்ரல் 29 அன்று ஒப்புதல் தரப்பட்டு, 27.5.2009 அன்று அரசாணை வெளியானது.


இந்த ஒதுக்கீட்டுக்கு காரணங்களாக நீதிபதி ஜனார்த்தனம் அளித்து, அரசு ஏற்றுக்கொண்ட அம்சங்கள் அருந்ததி யருக்கு உள்ஒதுக்கீடு என்பதை முழுமை யாக நியாயப்படுத்துகிறது-

* அரசுப்பணிகளின் ஏ,பி, மற்றும் சி- பிரிவுகளில் அருந்ததியருக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது.

* டி - பிரிவுகளில்தான் அருந்ததியினர் பெரும்பாலும் பணிபுரிகிறார்கள். மனித மலம் அள்ளுவது போன்ற பணியாக இருப்பதால் இதில் மற்ற பிரிவினர் வருவதில்லை. மேலும் இந்தப் பணிகளுக்கு எந்தவித கல்வித்தகுதியும் தேவையில்லை.

* பொதுத்துறை நிறுவனங்களில் நம்ப முடியாத அளவுக்கு அருந்ததிய சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இடஒதுக்கீட்டிலும் தலித்துகளில் கொஞ்சம் முன்னேறிய பிரிவினர்தான் வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார்கள். அருந்ததிய சமூகத்தினர் விடுபட்டுள்ளனர்.

* கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் பெயரளவில்தான் உள்ளன.

இவையே நீதிபதி ஜனார்த்தனத்தின் ஒருநபர் குழு, அரசிடம் 2008, நவம்பர் 22 அன்று தந்த அறிக்கையில் உள்ள விளக் கங்களின் சுருக்கம், இதற்கு ஆதரவான புள்ளிவிபரங்களையும் தனது அறிக்கையில் விரிவாக நீதிபதி சொல்லி யிருக்கிறார் என்று தமிழக அரசு சொல்கிறது. அட்ட வணை சாதியினருக்கு தனியாக இட ஒதுக்கீடு என்ற கொள்கை உருவான தற்கு எந்த நியாயங்கள் சொல்லப்பட் டனவோ அவையனைத்தும் இங்கும் பொருந்துகிறது.

இந்த சமூக நீதி நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக் கீட்டை ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களின் மதவெறிக் கொள்கை என்று எடுத்துக் கொள்ளலாம். தலித்துகளில் ஒருபிரி வினரே எதிர்க்கிறார்கள் என்றால் அது ஒட்டுமொத்த சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைத்துவிடும் என்ற கவலை ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் மத்தியில் எழுந்துள்ளது. அட்டவணை சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பார்ப்பனியம் எத்தகைய வாதங்களை முன்வைக்குமோ அதையே உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக கூறுகிறார்கள்.

அருந்ததியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவிற்கு இந்த உள்ஒதுக்கீடு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம். காகிதத்தில் உள்ள மூன்று விழுக்காட்டை நடைமுறைக்குக் கொண்டு வர தனிப் போராட்டம் தேவைப்படுகிறது. அர சாணைக்குப் பிறகு நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் மின்வாரியத் தொழில்நுட்ப உதவி யாளர் பணியிடங்களில் உள்ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத் துக்கழகம் (கோவை) 17 உதவிப் பொறி யாளர்கள் பணியிடங்களுக்கான நபர் களைப் பரிந்துரை செய்யுமாறு மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் அருந்ததியருக்கு என்று தனியாக அவர்கள் குறிப்பிடவில்லை. இது அரசாணைக்கு முரணான அம்சமாகும். பொருத்தமான முறையில், வேலை வாய்ப்பு அலுவலகம் தலையிட்டு அருந்த திய சமூகத்தினருக்கு ஒரு இடம் என்று ஒதுக்கியது. நேர்காணல் நடத்தி மூன்று மாதங்கள் ஆகியும் பணி நியமனம் செய் யாமல் இருக்கிறார்கள். ஒரே ஒரு (கோவையைச் சேர்ந்த லெனின் என்பவர்) அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இந்த நேர்காணலில் பங்கேற்றார்.

அரசாணை வெளியாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனபிறகும் பெரிய அளவில் வேலைவாய்ப்பில் அருந்ததி யர்கள் பயனாளிகளாக இல்லை என்பது தான் நிதர்சனம். காவலர் வேலைவாய்ப்பு மட்டுமே விதிவிலக்கு. இதற்கான போராட்டங்களை ஒருபுறம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான் முதலுக்கே மோசம் என்று சொல்வார்களே, அதை ஏற்படுத்து வதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் அருந்த தியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். அரசின் நோக்கம் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இரண்டு மாதங்கள் கழித்து விசாரணைக்கு வந்தபோது மேலும் அவகாசம் வேண்டும் என்றுதான் கேட்டது.

சமூகநீதிப் பாதையைத் திருப்பி வேறு பக்கம் கொண்டு போய்விடுவார்களோ என்கிற அச்சத்தில், பெற்ற உரிமையைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோரும் வழக்கில் சேரும் வகையில் மனு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக் டர் கே.கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை அருந்ததியர் சமூகத்திற்கு எதிராக நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் பிரச்சனையை எழுப்பக்கூடிய வாசகங்களுடன் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அட்டவiணை சாதியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தில் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 19 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலு வாக முன்வைக்க வேண்டிய நேரத்தில் உள்குத்தில் இறங்குவது சமூக நீதிப் பாதையா என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் யோசிப்பது நல்லது