Thursday, August 27, 2009

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை காப்போம்!


ராணுவத் தீர்வு என்பது சாத்தியமல்ல; அரசியல் தீர்வு காண்பதுதான் சாலச் சிறந்தது. ஒன்றுபட்ட இலங்கைக்கு உள் ளிட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தமிழர் பகுதிகளுக்குப் பரவலான சுயாட்சி அதிகாரம் வழங்கப்படுவதை உத்தரவா தம் செய்யும் வகையில் அந்த அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்”.
இது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எடுத்து வந்துள்ள உறுதியான நிலைப்பாடு. இந்தக் காலகட்டம் முழு வதிலும் இதற்காக மார்க்சிஸ்ட் கட்சியை ஏசியவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏகடியம் பேசியவர்கள் ஏராளம். இதை இன்னமும் தொடர்கிறவர்களும் உண்டு.
அரசியல் தீர்வுக்கு முதல் படியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்றும், அதற்காக இந்திய அரசு ராஜீய ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழகத் திலிருந்து வலுவான குரல் எழுப்பப்பட் டதுண்டு. போர் நிறுத்தம் என்பதை இலங்கை அரசும் ஏற்கவில்லை; இந்திய அரசும் அதற்கான நெருக்குதலைக் கொடுக்கவில்லை.
இப்போது போர் நிறுத்தப்படவில்லை; போரின் இலக்குகள் எட்டப்பட்டுவிட்ட நிலையில் இலங்கை இராணுவம் போரை முடித்துக்கொண்டுவிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆயுதங்களை மவுனிக்கச் செய்துவிட்டது.
இதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வையே வலியுறுத்தி நிலையெடுத்தன.
“பேச்சுவார்த்தை மூலம் அமைதி யான வழியில் அரசியல் தீர்வு காணப் படுவதே இந்த (இலங்கை)ப் பிரச்ச னையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும் என அதிமுக நம்புகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தோட்டத் தொழிலாளர், இ°லாமியர் உள்ளிட்ட இதர சிறுபான் மைத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்,” என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜன. 29, 2009 அன்று வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய நிலைபாட்டைத் தெளிவாகக் கூறி யிருந்தார்.
இடையில் மக்களவைத் தேர்தலில் `அரசியல் தீர்வு இல்லையேல், தனி ஈழம்தான்’, `இலங்கைக்கு இந்திய இராணுவத்தையே அனுப்ப வேண்டும்’ என்றெல்லாம் வேகங்காட்டிய போதிலும், தேர்தல் முடிந்த பிறகு அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானத்தில் ஜெயலலிதா கீழ்க்கண்ட நிலையையே மீண்டும் உறுதிப்படுத்தினார்.
“அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் தலைமையிலான இலங்கை அரசு ஒடுக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் நியா யமான மனக்குறைகளை உடனடியாகக் களைய வேண்டும். இலங்கையில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும். தமிழர்கள் (வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங் களில் வாழ்பவர்கள்), இஸ்லாமியர்கள் மற்றும் பிற குடியினத்தவர்கள் அனை வரும் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார் அவர்.
தமிழக ஆளுங்கட்சியான திமுக பிப்ரவரி 3, 2009 அன்று நடத்திய கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் பின்வருமாறு நிலையெடுத்தது:
“இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் (Full devolution of powers and autonomy)கிடைக்கின்ற அளவிற்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
திமுக தலைமையும் தேர்தல் காலத் தில் “தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி” என்று சுருதி மாறிப்பேசியது; எனினும் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அரசியல் தீர்வையே முன்னிறுத்தி முதலமைச்சர் பேசினார். அந்த நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எடுத்துவந்துள்ள நிலைப்பாடுதான் தன்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் அரசியல் அணி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டுத் தெளிவுபடுத்தினார். பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு பகிரங்கமாக எடுத்து வரும் நிலைபாட்டுக்கு மாறாக, சட்டமன்ற பாமக தலைவர் கோ.க. மணியும் அரசியல் தீர்வை ஒட்டியே தனது கருத்தை வெளியிட்டதையும் முதலமைச்சர் பதிவு செய்தார்.
`ஈழப்போர் 4’ நடந்துகொண்டிருந்த காலத்தில், இலங்கை அரசு, இந்திய அரசு மற்றும் தமிழக முதலமைச்சருக்கு எதிராகக் கனல் தெறிக்கும் உரைவீச்சுக் களை நிகழ்த்திக் கொண்டிருந்தவர்க ளில் ஒருவர் தமிழருவி மணியன். அவரே அண்மையில் `புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிக ளின் ஆயுத இயக்கம் இனியும் தொடர வேண்டும் என்று ஓயாமல் குரல் கொடுப் பவர்களும் நடந்து முடிந்த நிகழ்வுகளை மறுவாசிப்புச் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது’, என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த `மறுவாசிப்பின்’ வெளிப்பாடுகளாக, விடுதலைப் புலிகள் அமைப்பு, அதன் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் சமீபத்திய கோரிக்கைகளும், பிரகடனங்களும் வந்துள்ளன.
தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர் கொண்ட பெரும் பின்னடைவைக் கருத்தில் கொண்டு அரசியல் ராஜதந்திர வழிமுறையே சாத்தியமானதும் வலுவானதும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்தது என்றும், இது அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனே எடுத்த தீர்மானம் என்றும், செல்வராசா பத்மநாதன் தெளிவுபடுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நட வடிக்கைகளுக்குத் தலைமை தாங்குபவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதன் இப்போது இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு வெளியே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக இயங்கிவரும் ஆலோசனைக் குழுவும், `தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஜனநாயக, அமைதி வழிகளில் வென்றெடுப் பதிலும் தன் கவனத்தைச் செலுத்தும்’, என உறுதி கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இக்கூட்டமைப்பின் (இலங்கை) நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழு மையான சுயாட்சி தேவை; காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்கும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளனர். ஜூலை 2 அன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், இக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள் கலந்து கொண்டு அரசியல் தீர்வுக்கான முன் மொழிவுகளை வலியுறுத்தியது குறிப் பிடத்தக்கது.
பழ. நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அண்மையில் வெளியிட்ட உலகத் தமிழர் பிரகடனத்தில் இடம்பெற்ற கீழ்க்கண்ட வாசகங்களும் பொருள் பொதிந்தவை:
“ஈழத் தமிழ் மக்களின் மரபு வழித் தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவுத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்”.
இவ்வாறு அரசியல் தீர்வுக்கு ஒத்தி சைவான சூழல் எழுந்துள்ள இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, இலங்கை அரசை அதிகாரப் பகிர்வு - சுயாட்சி உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசி யல் தீர்வுக்கான முயற்சிகளை விரைவாக எடுக்கச் செய்ய சர்வதேச சமூகமும் - குறிப்பாக இந்திய அரசும் - உறுதியான நிர்ப்பந்தத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் இப்போது முன்னுரிமைப் பிரச்சனையாக முகிழ்த்திருப்பது, இலங்கையில் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த அகதிகளாக நிற்கும் தமிழர்களின் அவ லங்கள் களையப்படுவதற்கான அவசர நடவடிக்கைகள் ஆகும்.
சற்றொப்ப 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வவுனியாவில் உள்ள முகாம்களில் இந்த அகதிகள் மிக மோசமான நிலைமைகளில் அடைக்கப்பட்டு உயிர் பிழைக்க நேரிட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக இந்த முகாம்கள் தங்குவதற்கு லாயக்கற்றவையாக மாறியுள்ளதோடு, அங்குள்ள மக்கள் சுகாதாரக் கேடுகளுக்கு இலக்காகி நிற்கின்றனர்.
இந்த அகதிகளை அவரவர் சொந்தக் குடியிருப்புகளில் மீள் குடியமர்த்தும் பணி, கண்ணி வெடிகளை அகற்றுவது என்ற பெயரால் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கையில், அவர்களைப் பராமரிப்பதற்கு உதவியாகக் குடும்ப உறவுகளை உடன் அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
முகாம்களில் உள்ள இளம் சிறுவர், சிறுமியர்களைத் தனியாகப் பிரித்து ஒரு புனர் வாழ்வு முகாம் அமைப்பது என்ற பெயரில், அவர்களைத் தொடர்ந்து கண் காணிப்பிற்கு உட்படுத்தி வைக்க இலங்கை அரசு முற்படுகிறது.
இந்தத் தமிழ் அகதிகளின் அவல நிலைக்குச் சான்று பகருவதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணா ரத்னாவின் பேச்சு அமைந்துள்ளது.
“போரினால் பாதிக்கப்பட்டு அகதி களாக்கப்பட்ட லட்சக்கணக்கிலான மக்கள் இன்று அகதி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களைச் சென்று பார்வையிடவும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. முள் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கம்பிகளுக்கு அப்பால் தாயும் மறுபக்கத்தில் பிள்ளையும் என்ற நிலைமையே காணப்படுகிறது. தொடர்ந்தும் அந்த மக்களின் உரிமைகள், சுதந்திரம், சக வாழ்வு மறுக்கப்படுவதாக இருந்தால் முகாம்களுக்குள்ளேயே அவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை”, என்றார் அவர்.
எனவே சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்தத் தமிழ் மக்கள் ஒரு மனிதப் பேரவலத்திற்கு ஆளாக்கப்படுவது இன்று சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய சவாலாக முன்னெழுந்துள்ளது.
சர்வதேச அளவில் இலங்கைத் தமிழர்களின் துயர் துடைப்புக்காக என்று வழங்கப்படுகிற நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும், சர்வதேச செஞ்சிலு வைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள் மூலமாக அந்த மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.முகாம்களில் உள்ள மோசமான நிலைமைகளை உடனடியாக மாற்றியமைத்து, அடிப்படை வசதிகளும், சுகாதாரத்தைப் பேணும் சூழலும் கொண்டதாக ஆக்க வேண்டும்.மீள் குடியமர்த்தும் பணி விரைவு படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே வடக்கு மாகாணப் பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்விடங்களில் சிங்களர் களைக் கொண்டு குடியமர்த்தும் முயற்சி கள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பிலி ருந்து வெளியேறி, இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்ததாகக் கூறப்படும் சற்றொப்ப 10,000 இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழ் மக்களின் இந்த வாழ்வுரிமைக் கோரிக்கைகள், அடிப்படை மனித உரிமைகளாகும். இவற்றுக்காகத் தமிழ்நாட்டு மக்களைத்திரட்டிக் குரல் கொடுப்பதும், இந்திய அரசை உட னடியாகச் செயலில் இறங்கத் தூண்டு கோலாகச் செயல்படுவதும் இன்று நம் முன் உள்ள முதற்பெரும் கடமை. இந்தக் கடமையை ஆற்றும் வகையில் ஆகஸ்ட் 29 அன்று மாவட்டத் தலைநகர்களில் கூடி ஆர்ப்பரிப்போம்! தொடர்ந்து இயக் கம் காணுவோம்!
உ.ரா.வரதராசன்

1 comment:

 1. பிரபாகர். சென்னை.September 8, 2009 at 12:18 PM

  உங்களுடைய வலைத்தளத்தின் தலைப்புகளை முழுதும் பார்த்தபோது 2008-2009 களில் இரண்டே இரண்டு தடவைகள் இலங்கைத் தமிழருக்காக எழுதியுள்ளீர்கள். அதுவும் CPM ன் நிலைப்பாடு அறிக்கைகளே;உங்கள் சிந்தனைகள் அல்ல.
  பத்தாயிரம் கி.மீ.க்கள் தள்ளியிருக்கும் வெனிசுலாவின் பொருளாதாரத்தைப் பிச்சு வாங்க முடிந்த உங்களுக்கு வெறும் 20 கி.மீ தள்ளி உள்ள இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பிரச்சனைகள் ஏன் சார் கண்ணுக்குத் தெரியவில்லை ? இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டது பத்தாதோ ? சுமார் எத்தனை பேர் செத்தால் நீங்கள் கவனிப்பீர்கள் ? அல்லது அவர்கள் தமிழர்களாக இருந்திருக்கக்கூடாதோ.. வேறு மொழி பேசினாத்தான் கவனிப்பீங்களா..
  இந்திய அரசாங்கமும் அல்லது இந்திய ஏகாதிபத்தியமும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியும் அப்படியே சொல்கிறது, நிலைப்பாடாய்க் கொள்கிறது என்றால் என்ன அர்த்தம் சார் ?
  நீங்கள் என்னைப்போல் சாதாரண ஆளாக இருந்தால் இவ்வளவு கடுமையான கேள்விகள் தேவையில்லை. நீங்கள் சமூகத்தைப் புரட்சியில் வென்றெடுக்கவேண்டிய கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிக்கையின் பொறுப்பாளர்களில் ஒருவர் என்பதால் தான் இவ்வளவு கடுமை. யோசிங்கசார். சும்மா சும்மா 'இதெல்லாம் ப்ளான் பண்ணிதான் செய்யனும்' ன்னு நாங்க எப்பவோ சொன்னோமே கேட்டீங்களா.. என்கிற ரீதியில் பேசாதீர்கள்.

  ReplyDelete