Sunday, August 16, 2009

சொன்னதை செய்யாததும் சொல்லாததை செய்ததும்!



விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, ரம்ஜான் மற்றும் தீபாவளி என்று வரும் மாதங்களில் தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. பண்டிகைக்காலத்தில் வழக்கமாக இருக்கும் உற்சாகம் இந்தமுறை இருக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது. ஆட்சியாளர்களின் வழக்கமான முழக்கங்கள், மோசடிப் புள்ளிவிபரங்கள் போன்றவை மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கவில்லை. நடைமுறையில் கடுமையான நெருக்கடியை மக்கள் சந்தித்து வருவதால் இதோ.. பணவீக்கத்தைப் பாருங்கள். (-)1.74 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது. எங்கள் சாதனையைப் பாரீர்... பாரீர்... என்ற ஆர்ப்பாட்டமான அறிவிப்போடு கடைகளுக்கு சென்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் முகத்தில் அறைகின்றன.


தமிழக அரசின் ரூ.2க்கு ரேசனில் அரிசித்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், மற்ற அறிவிப்புகள் காகிதங்களிலேயே நின்றுவிட்டன. 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என்று அறிவித்தார்கள். ஆனால் துவங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோடு சரி, எப்போது திட்டத்தை இழுத்து மூடினார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை. ரேசனில் துவரம்பருப்பு கிடைப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. பெரும்பாலான மக்களுக்கு அது கிடைக்கவில்லை என்பதே தற்போதைய செய்தி. வெளிச்சந்தையில் பொருட்களின் விலைகள் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டு விட்டன.


மலையாளிகள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடுவது ஓணம் பண்டிகையாகும். செப்.2 அன்று அந்தப்பண்டிகை நடப்பாண்டில் கொண்டாடப்பட உள்ளது. மக்கள் விலையுயர்வு நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் பண்டிகை உற்சாகம் குறையாமல் இருக்க சிறப்பு விற்பனை அங்காடிகளை கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு திறந்துள்ளது. வெளிச்சந்தையில் இருக்கும் விலையை விட 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை குறைவான விலையில் விற்று வருகிறார்கள். மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவை என்று கூறப்படும் 25 பொருட்கள் அந்த அங்காடிகளில் கிடைக்கின்றன. இவ்வாறு திறக்கப்பட்டுள்ள அங்காடிகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தையும் தாண்டிவிட்டது.


தமிழகத்தில் 60 அல்லது 70 ரூபாய்க்கு விற்கப்படும் உளுந்தின் விலை 36 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரை 20 ரூபாய்க்கும், 170 ரூபாய்க்கு கிடைக்கும் மிளகு, 66 ரூபாய்க்கும் இந்த அங்காடிகளில் விற்கப்படுகின்றன. 500 ரூபாய் மதிப்புள்ள பொருளின் விலையை 1000 ரூபாய் என்று போட்டு 50 சதவிகித அதிரடி தள்ளுபடி என்ற அறிவிப்போடு அசல் விலையிலேயே தலையில் கட்டிவிடும் மோசடியில்லாமல் உண்மையிலேயே தேவையான நேரத்தில் மக்களுக்கு பலன்தரும் வகையில் இந்த விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய விற்பனை நடந்தாலும், நெருக்கடி நேரத்தில் கூடுதல் அக்கறையோடு நடப்பாண்டில் இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்பட்டுள்ளது.


சொன்னதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று கூறிக் கொள்பவர்கள், 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என்று சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் அளிக்கப்படாத உறுதிமொழிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிவிரைவில் ஏறிக் கொண்டிருக்கும் வேளையிலும் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுவும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அங்காடிகள் என்பது கிட்டத்தட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது,

No comments:

Post a Comment