தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 1500 ரூபாயைத் தாண்டி சென்றுள்ளது. இத்தனைக்கும் பண்டிகைக் காலம் நெருங்கிய நேரம். தங்கத்துக்கான கிராக்கி இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அந்தக்கிராக்கி குறைந்துள்ளது. மேலும் குறையவும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியே இதற்குக் காரணமாகும். இந்தியாவில் 14 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது. இதில் 42 சதவிகிதம் மட்டுமே பாசன வசதியைப் பெற்றுள்ளது. மீதமுள்ள நிலங்கள் மழையை நம்பியே இருக்கின்றன. தற்போது மழை ஏமாற்றியுள்ளதால் வழக்கத்தை விட குறைவான அளவே பயிரிட்டுள்ளார்கள்.
இத்தகைய நிலை பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கப் போகிறது. இது பண்டிகைக்கால வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தங்கத்தின்மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்க சந்தையை தொடர்ந்து கவனித்து வரும் அதுல் ஷா, மழை பொய்த்துள்ளது உள்ளுர் சந்தையை பெரிதும் பாதிக்கும். விவசாயிகளுக்கு உபரி வருமானம் எதுவும் இருக்கப்போவதில்லை. இதனால் நாட்டின் பெரும்பான்மையான துறையைச் சேர்ந்தவர்கள் தங்கத்தை நாடிச் செல்லப்போவதில்லை என்கிறார். ஆக.8 ஆம் தேதி வரையிலான கணக்கின்படி, மழைப்பற்றாக்குறை 28 சதவிகிதமாக இருந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிதப்பங்கை செலுத்தும் விவசாயத்துறை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
23 கோடி விவசாயிகள் இந்த வறட்சியால் பாதிக்கப்படவுள்ளார்கள். கிட்டத்தட்ட 70 கோடிப்பேர் விவசாயத்தை நம்பி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். இவர்களைப் பொறுத்தவரை பண்டிகைக்காலம் கசப்பானதாகவே இருக்கப்போகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போதும் வெவ்வேறு இடங்களில் தங்கம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சில மாநிலங்களில் அட்சய திரிதியை, சில இடங்களில் விநாயகர் சதுர்த்தி அல்லது தீபாவளி என்று தங்கத்தின் விற்பனை அமோகமாக இருப்பதுண்டு. ஆனால் இம்முறை தங்கள் விருப்பத்தையெல்லாம் தாண்டு இரு காரணங்களுக்காக தங்க விற்பனை குறைவாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
முதல் காரணம், பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்பட்டுள்ளதுதான். தங்கம் வாங்குவதை பெரும்பாலும் அதன் விலைதான் நிர்ணயிக்கிறது என்பது இரண்டாவது காரணம். குழந்தைப்பிறப்பு, திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கினாலும், அதன் விலையும் பெரும்பங்கை வகிக்கிறது. இந்த இரு காரணங்களும் தங்க இறக்குமதியில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். கிராக்கி குறைவதால், இறக்குமதியும் குறைய வாய்ப்புள்ளது என்கிறார் தங்க விற்பனையில் ஈடுபட்டுள்ள நவீன் மாத்தூர்.
சொத்துகளை விற்றாவது பெண்ணின் திருமணத்தை நடத்தும் ஆந்திர விவசாயிகளின் வாழ்க்கையே அபாயகட்டத்தில் உள்ளது. கடந்த நாற்பது நாட்களில் தற்கொலை செய்து கொண்ட ஆந்திர விவசாயிகளின் எண்ணிக்கை 21ஐத் தாண்டிவிட்டது. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தற்போது அந்த நெருக்கடி அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்டு, அசாம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுமையும் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய நெருக்கடி தங்கம் வாங்குவதை மட்டுமல்ல, அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியுமா என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது.
சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் தங்கத்திற்கான கிராக்கி குறைந்துள்ளது. ஆனாலும், அதன் விலையேற்றத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. பங்குச்சந்தைகள் கடுமையான அடி வாங்கியுள்ளதும் இதற்குக் காரணம் என்கிறார்கள் நிதித்துறை வல்லுநர்கள். மக்களுக்கு முதலீடு செய்ய வேறு வழி தெரியவில்லை. இதுதான் அவர்களை தங்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. இதனால்தான் அதன் தேவை மற்றும் மதிப்பு குறைந்தாலும், விலையில் இறக்கம் தெரிய மாட்டேனென்கிறது. மற்ற முதலீடுகளுக்காக வாய்ப்புகள் அதிகரித்தால் உச்சாணிக்கொம்பில் இருக்கும் தங்கம் கீழே பொத்தென்று விழும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள் வல்லுநர்கள்.
No way!! The cost of gold may come down a bit - but it will never be a big fall!! Farmers in India were never a big purcharsers of Gold !! Well, having said that, if what you have suggested with your trademark "stats" becomes true, its only a matter of rejoice.. right ?
ReplyDeleteநாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
ReplyDeleteநீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.