Tuesday, August 11, 2009

மக்கள் பணத்தை சூறையாடிய அமெரிக்க வங்கிகள்எந்தவிதத் திட்டமும் இல்லாமல் அடமானக் கடன்களை, அடமானத்திற்கு மேல் அடமானம் வைத்து உருக்குலைந்து போன வங்கிகள் தங்களது மோசடி வேலைகளை மட்டும் கைவிடவில்லை. மீட்புத்திட்டம் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடிகளை முழுங்கி ஏப்பம் விட்டு நிற்கும் வங்கிகளில் ஒன்பது பெரிய வங்கிகள் செய்த தில்லுமுல்லுகள் மீண்டும் அம்பலமாகியுள்ளன. நெருக்கடி மற்றும் சொத்து மீட்புத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்றுக் கொண்ட வங்கிகள் கடந்த ஆண்டிற்காக அளித்த போனஸ் தொகை குறித்து அமெரிக்க நிதித்துறை ஆய்வு செய்துள்ளது. ஒன்பது பெரிய வங்கிகளின் கணக்குகள் மற்றும் போனஸ் தொகை பற்றிய விரிவான ஆய்வு வங்கிகளின் மோசடியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

வங்கிகளிலேயே அதிகமான அளவு மீட்புத்திட்ட நிதியை சிட்டி வங்கிக்குழுமம்தான் பெற்றது. திவால் நிலைக்கு சென்ற இந்த வங்கியின் பங்குகளில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்க அரசே எடுத்துக் கொண்டது. மேலும் மீண்டு வரட்டும் என்பதற்காக நிதியை வாரி வழங்கியது. வங்கியின் மீட்சிக்காக அதைப் பயன்படுத்தாமல் போனஸ் வழங்குவதற்காக அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளார்கள். 2008 ஆம் ஆண்டுக்கான போனசாக சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாயை சிட்டி குழுமம் அளித்துள்ளது. இத்தனைக்கும் 2008 ஆம் ஆண்டில் சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் மேலும் நஷ்டத்தைக் கண்டுள்ளது சிட்டி குழுமம். எவ்வளவு மீட்பு நிதி வாங்கினார்கள், அதற்கும் போனசிற்கும் என்ன விகிதம் என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனென்றால் இதில் பல விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த மோசடியாளர்களுக்கு இல்லை.

சிட்டி குழுமம் மட்டும் தனியாக இந்த வேலையைச் செய்யவில்லை. அதற்கு கூட்டாளிகளாக இருக்கும் வகையில் பேங்க் ஆப் அமெரிக்கா, மெர்ரில் அண்டு லின்ச், ஜே.பி.மார்கன் சேஸ் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் குரூப் ஆகிய வங்கிகளும் மக்களின் வரிப்பணத்தை மீட்பு நிதியாகப் பெற்றுக் கொண்டு போனசையும் வாரி வழங்கியுள்ளார்கள். இவர்களின் போனசால் அதிகமாகப் பயனடைந்தவர்கள் வால் ஸ்டிரீட்டில் உள்ள முதலீட்டு வங்கியாளர்கள்தான். வங்கிகளை சிதைத்ததோடு நிற்காமல் மீட்புக்கான நிதியையும் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப்புதைக்கவும் முடிவு செய்துவிட்டார்கள்.

பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் மெர்ரில் லின்ச் ஆகிய இரு வங்கிகளும் கூட சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் போனசாக வாரி வழங்கியுள்ளன. மீட்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை இந்த இரு வங்கிகளும் இன்னும் திருப்பித்தரவில்லை. போனஸ் ஏன் தரப்பட்டது என்று கேட்டால், திறமையான நபர்களை போட்டி வங்கிகள் இழுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விட்டுள்ளார்கள். வங்கிகளிலிருந்து மிக அதிகமான வருமானத்தை ஈட்டும் முதல் 100 பேரை அடையாளங்கண்டு அவர்கள் வருமானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உத்தரவிட்டிருந்தார். அவரால் நியமிக்கப்பட்ட கென்னத் ஃபெய்ன்பர்க் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அவர் 2009 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் இழப்பீடு போன்றவற்றை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி பல்வேறு வடிவங்களில் வங்கியிலிருந்து வெளியேறி விட்டது. இந்த லட்சணத்தில் ஓரிரு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் இரண்டாவது மீட்புத்திட்ட நிதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதோடு, மாதாமாதம் திவாலாகிக் கொண்டிருக்கும் சிறிய வங்கிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 305 அமெரிக்க வங்கிகள் திவால் நிலையை எதிர்நோக்கியுள்ளன என்று மத்திய காப்பீட்டுக்கழகம் கணித்திருந்தது. திவாலாகும் வங்கிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இந்தக் கழகத்தின் தோள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.

நிறுவன மேலாண்மையில் நேர்மை, நியாயம் என்ற வார்த்தைகள் அனைத்தையும் அமெரிக்க வங்கிகள் தொலைத்துவிட்டு நிற்கின்றன. மக்கள் பணம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை முதலீடு செய்வதும், திவாலான நிலையிலும் மக்கள் பணத்தை எடுத்து போனசாக அள்ளி வீசிக்கொண்டிருப்பதும் எதை, எதையெல்லாம் நிர்வாகம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளின் கைகளில்தான் இந்திய வங்கிகளை ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஒருநாளில் 26 மணிநேரம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

1 comment:

  1. எரியுற குடிசையில் பீடியை பற்றவைத்துக் கொள்ளுவது போன்ற கொடூர சிந்தனை இது.இந்த பண வெறி பிடித்த ஓநாய்களின் அட்டூழியங்கள் தெரிந்தும் நம்மை நம் நாட்டோடு காவு கொடுக்க காத்திருக்கும் அரசியல் விற்பன்னர்களை எதை கொண்டு சாத்துவது?

    ReplyDelete