Monday, December 28, 2009

அழவைக்கும் வெங்காய விலை..!


அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வால் மக்கள் கடுமையான துயரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருட்களின் விலை உச்சத்திற்குச் சென்றுள்ளது. பல தனியார் நிறுவனங்களும், ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் சிலரும் இதற்கெல்லாம் முன்பேர வர்த்தகம் காரணமல்ல என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த விலையுயர்வு காரணமாக விளைபொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்யப் போகிறோம் என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் அத்தியாவசியப் பொருட்களை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எகிறிய அரிசி, கோதுமை விலை

கடந்த 2007ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த இடதுசாரிகளின் வற்புறுத்தலால், அரிசி, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் உளுந்து மீது முன்பேர வர்த்தகம் மேற் கொள்ள மத்திய அரசு தடைவிதித்தது. இதன் பிறகு, சர்க்கரை உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற நவம்பர் மாதத்தில், அனைத்து பொருட்களுக்கான பணவீக்க விகிதம் (4.78 சதவீதம்) அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால் அனைத்து விளைபொருட்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கை ரப்பர் விலை, வழக்கத்திற்கு மாறாக மிகவும் உயர்ந்துள்ளது. இதற்கு ஊக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முன்பேர வர்த்தகமே காரணம் என்று மோட்டர் வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் கூறுகிறார்.

இரண்டு மடங்கான உருளைக்கிழங்கு

பொதுமக்களில் கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தக்கூடிய உருளைக்கிழங்கின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. கிடைக்கும் வருமானத்தில் ஐம்பது விழுக்காட்டை உணவுப்பொருட்களுக்காகவே மக்கள் செலவிடுகிறார்கள். ஒரே ஆண்டில் உருளைக் கிழங்கு விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதாவது 136 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் (40 விழுக்காடு), வெங்காயம் (15.4 விழுக்காடு), கோதுமை (14 விழுக்காடு), பால் (13.6 விழுக்காடு), அரிசி (12.7 விழுக்காடு), பழங்கள் (11 விழுக்காடு) விலையும் உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு 20 சதவீதத்தை எட்டி உள்ளது. அன்றாடம் தேவைப்படும் இந்தப் பொருட்களின் விலையுயர்வு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

பொய்த்த பருவமழை

விலை கடுமையாக அதிகரித்துள்ளதற்கு, போதிய அளவு மழையின்றி உற்பத்தி குறைந்ததும் காரணமாகும். ஒரு ஆண்டு சர்க்கரையின் தேவை 2.35 கோடி டன்னாக இந்தியாவில் இருக்கிறது. அதே சமயம், நடப்பு சர்க்கரை பருவத்தில் (சர்க்கரை பருவம் என்பது முந்தைய ஆண்டின் அக்டோபரிலிருந்து நடப்பாண்டு செப்டம்பர் வரையிலானது) 1.60 கோடி டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தியாகும் எனக் கூறப்படுகிறது. அதாவது 75 லட்சம் டன் சர்க்கரை பற்றாக்குறையாக இருக்கப்போகிறது. கடந்த நிதியாண்டில், பத்து கோடி டன்னாக இருந்த அரிசி உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 8.45 கோடி டன்னாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை ஆண்டிற்கு 1.20 கோடி டன் சமையல் எண்ணெய் ஆகும். ஆனால் 65 லட்சம் டன்னாகத்தான் உற்பத்தி இருக்கிறது.

கடந்த 2003-04 ஆம் நிதியாண்டில் ஒரு ரூபாய்க்கு 7.70 கிராம் உணவு தானியம் கிடைத்தது. இது தற்போது பாதியாக அதாவது 3.7 கிராமாக சரிவடைந்துள்ளது. உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு உற்பத்தி குறைவுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், முன்பேர வர்த்தகமும் ஒரு காரணமாக உள்ளது என்று பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் விலையுயர்வுக்குக் காரணமாக இருக்கும் முன்பேர வர்த்தகத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் வலியுறுத்தின. விலைவாசி உயர்வுக்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயுமாறு பொருளாதார நிபுணரும், மத்தியத் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அதன் அறிக்கையில் "விலைவாசி உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் வழிவகுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Sunday, December 27, 2009

ஏழு லட்சம் காலிப்பணியிடங்கள்...!!


ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் வேலைக்கான கனவுகளோடு படிப்பை நிறைவு செய்து கொண்டிருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலை கிடைக்காமல் நாற்பது வயதைத் தொட்டுக் கொண்டிருப்பவர்களின் பட்டியலோ மிக நீளமானது. இவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்கப்போகிறோம் என்ற மத்திய, மாநில அரசுகளின் உறுதிமொழிகளைப் பட்டியலிட்டாலும் அந்தப்பட்டியலுக்கு போட்டியாக நீளத்தான் செய்யும். கடந்த பத்தாண்டுகளாக காலியாக இருக்கும் அரசுப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இரண்டு லட்சம் அரசுப்பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 2004 ஆம் ஆண்டிலிருந்து வேலைக்கு நியமிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 6 ஆயிரத்து 816 தான்.


இந்த 6 ஆயிரத்து 816 பேரில் கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) பதவிக்கு மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த விளம்பரத்தைப் பார்த்து சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். எந்த அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது என்பதை அந்த பரபரப்பு காட்டியது. இந்த 6 ஆயிரத்து 816 பேரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் அது 13 லட்சத்தைத் தொடுகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பஞ்சமில்லை. வேலைகளுக்கும் பஞ்சமில்லை. வேலையில்லாதவர்களுக்கு வேலை தர வேண்டும் மற்றும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்கான அரசின் முன்முயற்சிக்குதான் பஞ்சம்.


ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்பலம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த சமயத்தில் காலியாக இருந்த 1 லட்சத்து 86 ஆயிரத்து 837 பணியிடங்களை படிப்படியாக நிரப்பப் போவதாக முதல்வரே உறுதியளித்திருந்தார். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. சில காலிப்பணியிடங்களுக்கு விளம்பரம் வந்தாலே விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை பெரும் அளவிலேயே இருந்து வருகிறது. இத்தகைய நிலைமைகளைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பணியிடங்களை நிரப்புமாறு தொடர்ந்து கோரிக்கையை வைத்து வருகிறது.


மாநில அரசு எந்திரத்தின் முக்கியமான அங்கம் வருவாய்த்துறையாகும். இந்தத் துறையின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். அதில் நான்காயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அதாவது மூன்றில் ஒரு பகுதி ஊழியர்கள் இனிதான் நியமிக்கப்பட வேண்டும். ஒரு திட்டத்தை அறிவித்தால், பொது மக்களிலிருந்து இதனால் பயனடையப் போகிறவர் யார் என்பதை இந்தத்துறைதான் தீர்மானிக்கும். ஆனால் அதைத் தீர்மானிக்கப் போதிய ஊழியர்கள் தேவை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் திட்டங்களுக்கான அறிவிப்பு வந்துகொண்டே இருக்கின்றன. சரியான நேரத்தில் திட்டத்தின் பலன் மக்களுக்கு போய்ச்சேர இயலாது என்பதுதான் இந்த அவலத்தின் விளைவாகும்.


எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க ரேசன் கடைகளை முறைப்படுத்துவதுதான் தீர்வு என்பது நிபுணர்களின் கருத்து. ஆனால் இந்தத்துறையின் உயர்மட்ட அலுவலகங்களிலிருந்து ரேசன் கடைகள் வரை பணியிடங்கள் காலியாக இருப்பதே வழக்கமானதாகப் போய்விட்டது. அண்மையில் ரேசன் கடைகளுக்கான ஊழியர்களை நியமித்திருந்தாலும் போதிய அளவு நியமனம் நடைபெறவில்லை. குறிப்பாக, உணவு வழங்கல் ஆணையர் அலுவலகத்திலேயே எக்கச்சக்கமான இடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல் கூட்டுறவுத்துறையில் 600 காலியிடங்கள், தொழிலாளர் துறையில் 750 காலியிடங்கள், வணிகவரித்துறையில் 4 ஆயிரத்து 275 என்று கணக்கிட்டுக் கொண்டே சென்றால் மொத்தக் காலியிடங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தொடுகிறது. இதில் அரசுசார் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களும் அடங்கும்.


வேலைவாய்ப்புத்துறையின் நிலையே மோசமாகத்தான் இருக்கிறது. சராசரியாக ஐந்து லட்சம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். 62 லட்சம் பேர் வேலைக்காகப் பதிவு செய்துள்ளார்கள். இந்தத்துறையில் இருக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை 1,100. இருப்பதோ 630 பேர் மட்டும்தான். 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேலும் இரண்டு அல்லது மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார்கள். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொட்டுவிடும். இந்தப் பணியிடங்களை நிரப்பும் வேலை ஒட்டுமொத்த சமூகத்திற்கு நல்லது என்பது ஒருபுறம். சமூக நீதிக்காக ஏங்கித்தவிக்கும் தலித்துகள் குறிப்பாக, அருந்ததியர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் அது ஏற்படுத்தும்.

Friday, December 25, 2009

பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைக்கும் வாய்ப்பு

கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை என்பார்கள். அதுபோலத்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை சென்று கொண்டிருக்கிறது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தூண்டுதலால் இந்தத் தாக்குதலை நடத்துவது தொடர்பான சதித்தீட்டம் தீட்டினார்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மற்றும் அவரது சகா தகாவுர் ராணா ஆகிய இருவரையும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறை கைது செய்தது. இந்தக் கைதுக்குப்பிறகு விசாரணை வெகு வேகமாக நகர்வது போன்ற தோற்றம் ஏற்பட்டது.


ஆனால் புதிய, புதிய பிரச்சனைகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. கைதாகியுள்ள டேவிட் ஹெட்லி அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் ஏற்கெனவே இருந்தார் என்ற செய்தி பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அவ்வாறு கண்காணிப்பில் இருந்தவருக்கு ஐந்தாண்டுகள் செல்லுபடியாகக்கூடிய 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவிற்குள் வந்து செல்வதற்கான வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவைப் பயன்படுத்திதான் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோர் தங்கள் சதித்திட்டத்தைத் தீட்டுவதற்காக அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளார்கள்.


அமெரிக்காவைத் தங்கள் தளமாகக் கொண்டு இயங்கிய இந்த இருவரின் விசா தொடர்பான ஆவணங்களைக் காணவில்லை என்று சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் அடுத்த குண்டை வீசியுள்ளது. கேட்டால், தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை பொறுப்பாகப்(!) பதிலளித்துக் கொண்டிருக்கிறது. இருவரையும் கைது செய்த அமெரிக்க மத்தியப் புலனாய்வுக்குழு எந்த அளவுக்கு இந்திய விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருகிறது என்பதில் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை ஆகிய இரண்டிற்கும் இடையில் கூட ஒருமித்த கருத்து இல்லை.


மும்பையில் நடந்த தாக்குதலாக இருந்தாலும் சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரிகளை விசாரிக்க உங்களை அனுமதிக்க முடியாது என்று இந்திய விசாரணை அதிகாரிகளிடம் அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கூறிவிட்டனர். மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே ஹெட்லி மீது தங்கள் சந்தேகப் பார்வையைப் பதித்துவிட்ட அமெரிக்க புலனாய்வுத்துறை அதை ஏன் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற நியாயமான கேள்வியைப் பலரும் எழுப்பியுள்ளார்கள்.


அமெரிக்க உளவுத்துறை ஏஜண்டுகள் பட்டியலில் ஹெட்லியின் பெயரும் அடக்கம் என்று மார்க்சிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய விசாரணை அதிகாரிகளிடம் ஹெட்லியை ஒப்படைத்தால் அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அதைச் செய்ய மறுக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். போதை மருந்து கடத்தலை செய்து வந்த ஹெட்லி, 1999 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க உளவுத்துறை சிஐஏவில் பணியாற்றியுள்ளார்.


முழுமையான விசாரணை நடைபெற்றால் பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அம்பலமாவதோடு, அந்த அமைப்புகளுக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் உதவிகளும் வெளிச்சத்திற்கு வரும். குற்றவாளிகளை விசாரிக்கும் உரிமையை இந்தியா வலியுறுத்திப் பெறுவதன் மூலம் பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைத்துப் பிடுங்கி எறியும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை மத்திய அரசு நழுவவிடக்கூடாது.

Friday, December 18, 2009

மதுரை இன்னும் அங்கதான் இருக்கா...?


தீர்ப்பு வந்தவுடன் போனால் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்திருந்த பத்திரிகையாளர்கள் சில நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கிறார்கள். தினகரன் ஊழியர்கள் எரிந்து சாம்பலானபோது கொந்தளிப்போடு பேட்டி கொடுத்த கலாநிதி மாறனின் மனநிலை தீர்ப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
பத்திரிகையாளர்கள் : தினகரன் அலுவலகம் தாக்குதல் தொடர்பான தீர்ப்பு வந்துவிட்டதே...?
கலாநிதி மாறன்(உற்சாகமாக) : ஆமாம், நீதி வென்றது.
பத்திரிகையாளர்கள் : அலுவலகம் எரிக்கப்பட்டப்ப நீங்க என்ன சொன்னீங்களா அதுக்கு மாறான தீர்ப்பு வந்துருக்கே...
கலாநிதி மாறன் : நீங்கள் வேண்டுமென்றே எதையோ கிளறுகிறீர்கள்... நானாகவே சொல்லிடுறேன்... உங்க எதிர்பார்ப்பு பொய்யாகிரும்.. நான் கடைசியாக மதுரைக்கு போனது இன்னும் நினைவுல அப்படியே இருக்கு... அப்ப சின்னப்பையனா எங்கப்பாவோட விரலைப் புடிச்சுக்கிட்டே போனேன்...அதுக்கப்புறம் மதுரைய பாக்கவே இல்லை... தெற்குப்பகுதிலதான இருக்கு..
பத்திரிகையாளர்கள் : இன்னும் அங்கதான் இருக்கு...நாங்க அதக் கேக்க வரல...
கலாநிதி மாறன் : பின்ன என்ன கேக்கப்போறீங்க... தினகரன்னு சொல்றீங்களே... அப்படி ஒரு பத்திரிகையே இல்லை..அது நின்னு போய் பல வருஷம் ஆச்சு... இதெல்லாம் நீங்க கௌப்பி விட்டதுதான...
பதறிப்போன பத்திரிகையாளர்கள் தயாநிதி மாறனிடமாவது கேட்கலாம் என்று அவரைத் தேடினார்கள். அவர் கோபாலபுரத்தில் இருப்பது தெரிந்து "ஆஹா... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம். கலைஞரிடமும் அப்படியே கேட்டு விடலாம்" என்று அங்கு படையெடுக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி : என்ன... பத்திரிகை அன்பர்கள்லாம் சேந்து வந்துருக்குற மாதிரி இருக்கே.. உங்களுக்கு தொந்தரவு வேணாம்னுதான நானே கேள்வி கேட்டு பதில் தந்துட்டு இருக்கேன்...
பத்திரிகையாளர்கள் : நாங்க கலாநிதி மாறன் வீட்டுல இருந்து வர்றோம்...
கருணாநிதி : இப்பதான் கண்மணி மாறனின் அன்புச் செல்வத்துக்கிட்ட இருந்து அழைப்பு வந்தது... நானும் கேள்விப்பட்டேன்...
பத்திரிகையாளர்கள் : என்ன கேள்விப்பட்டீங்க...
கருணாநிதி : தினகரன் பத்திரிகை நின்னு போய் ரொம்ப நாளாச்சுன்னு...
பத்திரிகையாளர்கள் : உறுதியாச் சொல்றீங்களா...

கருணாநிதி : இதுல என்ன இருக்கு... இந்த விஷயத்துல மேற்கு வங்கத்துல என்ன நிலைமையோ அதுதான் இங்கயும்...
அப்போது அங்கிருந்த மத்திய அமைச்சர் தயாநிதிமாறனும் தலையிட்டார், "நாங்க சொல்றத நம்பலைன்னா வெளியில தினகரன் நிருபர் நிக்குறாரு... அவர்கிட்டயே கேட்டுக்குங்க... அப்படியும் நம்பலைன்னா ஒண்டிக்கு ஒண்டி வர்றீங்களா..."
திடீர்த் தாக்குதலால் அதிர்ந்து போய்க் கலைஞரை நோக்கித் திரும்பினார்கள் பத்திரிகையாளர்கள்.
கருணாநிதி : ஒன்றும் கவலைப்படாதீர்கள். பெரியார் மற்றும் அண்ணாவின் தம்பியாகிய நானே உங்கள் மனநிலையை எடுத்துரைப்பேன். யாரிடம் எடுத்துரைப்பேன். முதல்வராகிய என்னிடமே எடுத்துரைப்பேன்...
எல்லாரும் ஒரே மாதிரியா கூட்டு சேந்துட்டாங்கன்னு சொல்லிவிட்டு ஓடுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
*******

Friday, December 11, 2009

மூடி மறைக்கப்படும் படுபாதகச்செயல்


திரிணாமுல் காங்கிரசின் ஆதரவுடன் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் வெறிச்செயல்களால் டிச.10 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தச் செய்தி கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளிலும் உள்பக்கங்களில் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது.

Thursday, December 3, 2009

கம்யூனிஸ்டுகள் சுமப்பது சுகமான சுமை


கே : கம்யூனிஸ்டுகளின் இப்போதைய முக்கிய எதிரி யார்?

ப : கம்யூனிசம்தான். அவர்கள் அதைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியிருக்கிறது. பிரேதம் கனக்கத்தான் செய்யும். அதனால்தான் தடுமாற்றம். அதுதான் சுமை. அதுதான் சோதனை. அதுதான் எதிரி.

* * *

கே : இனி பா.ஜ.க.; இனிமேலும் பா.ஜ.க.; இனியுமா பா.ஜ.க.?

ப : உண்டு; தேவை; ஆமாம்.
* * *
டிச.9 தேதியிட்ட துக்ளக் இதழில் சோ அளித்த பதில்கள்தான் இவை. அண்மைக்காலமாகவே கம்யூனிஸ்டுகளைப் பற்றி அதிகமாக விமர்சிக்கத் துவங்கியிருக்கிறார் சோ. அதனால் கொள்கையே எதிரி என்பது போன்று சித்தரிக்க முனைந்துள்ளார். கனமாக இருப்பதெல்லாம் பிரேதம் என்று முடிவு செய்துவிட்டார் போலும். ராணுவத்தினருக்கான பிரேதப் பெட்டி வாங்கியதில்கூட ஊழல் செய்து சாதனை புரிந்த கட்சியின் ஆதரவாளராயிற்றே.. அதனால்தான் பிரேதம் நினைவுக்கு வருகிறது.

ஆம், கம்யூனிசம் கனக்கத்தான் செய்கிறது. பிரேதம் என்பதால் அல்ல, கனமான கொள்கை என்பதால். கனவான்களுக்காகவே கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேளையில் கனமான சுமைகளை வாழ்க்கையில் சுமந்துகொண்டிருந்த சாமான்யர்களுக்காக உருவான கனமான கொள்கைதான் கம்யூனிசம். கனக்கத்தானே செய்யும். இந்த கனமான கொள்கை மீதான அச்சத்தால்தான் உலகம் முழுவதும் சமூகப்பாதுகாப்புத்திட்டங்களை முதலாளித்துவ அரசுகள் கொண்டு வர நேர்ந்தது.

கம்யூனிசத்தைத் தூக்கி அலைய வேண்டியிருக்கிறது என்று கம்யூனிஸ்டுகள் சலித்துக் கொள்ளவில்லை. அண்மையில் தலைநகர் தில்லியில் நடந்த சர்வதேசக் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநாடு இதைத்தான் காட்டியது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேசக் கட்சிகள் புலம்பித்தள்ளவில்லை. தெளிவாக வருங்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டிய பிரகடனத்தை வெளியிட்டது. அதுவும் கனமாகவே உள்ளது, உள்ளடக்கத்தில்.

அது ஒருபுறம் இருக்கட்டும். இவர் எதை மாற்றாகக் காட்டுகிறார்? அதைத்தான் இரண்டாவது பதில் காட்டுகிறது. இவரே மூக்கைப்பிடித்துக் கொள்ளும் அளவுக்கு கர்நாடகத்தில் நாறிப் போய்க்கிடக்கும் கட்சியைத் தூக்கிச்சுமக்கிறார். மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்த நரேந்திர மோடியை யோக்கிய சிகாமணி என்கிறார். இதெல்லாம் இவருக்கு கனக்கவில்லை.

தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறாராம். அதனால்தான் இனியும் பாஜக உண்டு. இனிமேலும் பாஜக தேவை என்று வக்காலத்து வாங்கும் அவர், இனியுமா பாஜக என்று கேட்கும்போதும் ஆமாம் என்று வலுவாகக் குரல் கொடுக்கிறார். கரன்சிப் பெட்டிகளின் கனம் பற்றிய கவலைகளுடன் அலைபவர்களைத் தூக்கிப்பிடிக்கும் சோவின் தோள்களால் மக்களுக்கான கொள்கை கனமாகவே இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது கனக்கலாம். ஆனால் அது சுகமான சுமை. மக்களுக்கான சுமை. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு சோதனை. தேச விரோத சக்திகளுக்கு எதிரி.