Wednesday, August 19, 2009

அன்னியர்களின் பிடியில் இந்தியப் பங்குச்சந்தை



ஒரே நாளில்(ஆக.17) 1,226 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்றதால் சென்செக்சில் 627 புள்ளிகள் சரிந்தன. அன்னிய முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்த இந்தியப் பங்குச்சந்தையையே உலுக்கி விட முடியும் என்பதற்கு அவர்கள் கைவசம் இருக்கும் பங்குகளின் அளவு பற்றிய புள்ளிவிபரங்களே சாட்சியாகும். முதல் 500 இடங்களில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் குறித்த புள்ளிவிபரங்கள்தான் இத்தகைய எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்த மும்பை பங்குச்சந்தையின் முதலீட்டில் 93 சதவிகிதத்தை இந்த 500 நிறுவனங்கள்தான் வைத்துள்ளன. இந்த நிறுவனங்களில் 22.9 சதவிகிதத்தை அன்னிய முதலீட்டார்களே வைத்துக் கொண்டுள்ளனர். பெரும் தொழில்கள் என்று கருதப்படும் 20 துறைகளிலுமே இந்த நிலைமை உள்ளது.

இந்திய அரசின் வசம் 21.8 சதவிகிதப் பங்குகளே உள்ளன. தொழில்முனைவோர் வசம் 29.3 சதவிகிதமும், பொது மக்களிடம் 8.17 சதவிகிதமும், காப்பீட்டு நிறுவனங்களின் வசம் 4.74 சதவிகிதமும் உள்ளன. சீனா தவிர மற்ற நாடுகளின் பொருளாதாரம் பலத்த அடி வாங்கியுள்ள நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சீனாவின் பங்குச்சந்தை முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பங்குகளை வாங்காமலேயே பல கை மாறும் இந்தியப் பங்குச்சந்தையில் உள்ள நடைமுறைகள் அங்கு கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றன. இதனால் பல ஓட்டைகளைக் கொண்டுள்ள இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள்.

சென்செக்ஸ் என்ற குறியீட்டு எண்ணைத்தான் பெரும் அளவில் பங்குச்சந்தையில் விவாதிக்கிறார்கள். பல முதலாளித்துவ ஆதரவாளர்கள் இதன் ஏற்றத்தையே இந்தியாவின் விடிவுகாலமாக வர்ணித்துக் கொள்ளும் மோசடியிலும் இறங்குவதுண்டு. ஆனால் பங்கு விற்பனையில் முதல் 30 இடங்களில் இருக்கும் நிறுவனங்களைத் தனியே பிரித்தெடுத்து அதன் ஏற்ற இறக்கத்தையே சென்செக்ஸ் புள்ளிகளாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நிறுவனங்களிலும் 26.1 சதவிகிதப் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களே வைத்துக் கொண்டுள்ளனர். தொழில் முனைவோர் வசம் 32.2 சதவிகிதமும், அரசின் கையில் வெறும் 13 சதவிகிதம் மட்டுமே உள்ளன.

2009 ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்களுக்குத்தான் லாபம் கிடைத்துள்ளது. மற்ற நாடுகளில் நெருக்கடி முற்றிப் போனதால் குறைந்த தடுமாற்றத்துடன் இருந்த இந்தியச் சந்தையில் அவர்கள் விளையாடியுள்ளார்கள். அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு மட்டும் 15 சதவிகிதத்திலிருந்து 15.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தொடர்ந்து சரிந்து வந்த இந்தியப் பங்குச்சந்தை நடப்பாண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மீண்டும் மேலே சென்றது. இதற்கு வெளியே சென்ற அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பியதே காரணமாகும். அதிவிரைவு வேகத்தில் வெளியே சென்ற அவர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தது எதற்காக என்ற கேள்வி பங்குச்சந்தை நிபுணர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.

பங்குச்சந்தையில் புள்ளிகள் எகிறும்போது, காளை துள்ளிக் குதிக்கிறது என்றும், சரிவின்போது கரடி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் வர்ணிப்பார்கள். இந்தியப் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்கள்தான் காளை மற்றும் கரடி ஆகிய இரண்டு வேடத்தையும் போட்டுக்கொள்கிறார்கள்.ஜூலை மாதத்தில் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் போட்டுள்ளார்கள். இந்த வேகத்தில் சென்றால் தொழில் முனைவோரை விட அதிக சதவிகிதம் அவர்கள் கையில் போய்விடும் அபாயம் எழுந்துள்ளது. அதற்கடுத்த கட்டம் என்பது பெரும்பான்மை பங்குகள்தான். ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களின் அவர்களின் கைகளில் போய்விடும்.

இந்த அபாய அறிகுறிகள் எழுந்துள்ள நிலையிலும் மத்திய அரசு தனது தூக்கத்தை இன்னும் கலைத்துக் கொள்ளவில்லை. கோடிக்கணக்கான டாலர்கள் இந்தியாவுக்குள் வந்து கொண்டிருப்பதாகப் புள்ளிவிபரங்களை மட்டும் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வரும் டாலர்கள் மறுபடியும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விடுகின்றன. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில்தான் இந்திய அரசு முதலீடு செய்கிறது. டாலருக்கு மாற்றாக வேறு கரன்சி பற்றிய விவாதங்கள் சர்வதேச அளவில் நடந்தாலும் அமெரிக்க நெருக்கடிக்கு முட்டுக்கொடுப்பதில் மத்திய அரசு மும்முரமாக இருக்கிறது. வளைந்து நிற்கும் வளரும் நாடுகளின் முதுகுகளில் தனது சுமையை ஏற்றிவிட்டு நெருக்கடியிலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட அமெரிக்கா தயாராகி வருகிறது.

2 comments:

  1. Good article. Lot of corruption occurs in the name of share market. The corruption should be stopped

    ReplyDelete
  2. sir, your said 1000000000000000000000000000000000000000000000000%correct sir VERY VERY THANK FII THIFT PAASANGA

    ReplyDelete