களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கமல்ஹாசனின் திரைப்பட வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளைத் தொட்டுவிட்டது. சாதனைகள், வெற்றிகள், தோல்விகள், படிப்பினைகள் என்று பல மட்டங்களைத் தொட்டு இன்றும் அவருக்கென்று திரைப்பட உலகில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.
வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்ற தாகத்தை உடையவர்களில் ஒருவர் என்று சொல்வதை விட, அந்தத் தாகத்தைக் கொண்டவர்களில் பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராகவும் இருப்பவர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பரம ரசிகனுக்கு சகலகலா வல்லவன் படம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வர்த்தக ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய படங்கள் அவருக்கு அவ்வப்போது தேவைப்பட்டன.
பெரும் மகிழ்ச்சிகரமான செய்தி அவரிடம் சொல்லப்பட்டபோது எந்தவித நியாயமும் இல்லாத ஒரு கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டது. மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக தேசிய அளவிலான சிறந்த நடிகர் விருது அவருக்குக் கிடைத்தது என்பதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி. ஆனால் அந்தப்படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்குக் கிடைக்காமல் இவருக்குக் கிடைத்தது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.
பரபரப்புக்காக செய்திகளைப் போட்ட பத்திரிகைகள், அவரிடம் பேட்டி என்ற பெயரில் கேள்வியையும் எழுப்பின. சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். எனக்குக் கிடைத்துள்ள சிறந்த நடிகருக்கான விருது, நடிகைக்கான விருதல்ல என்று.
கமல்ஹாசனின் திறமை ஒருபோதும் குறைத்து மதிப்பிடப்பட்டதில்லை. ஆனால் அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை எழுப்பவும் சில முயற்சிகள் நடந்தன. குரு திரைப்படத்தில் நாயகி ஸ்ரீதேவியைத் தூக்கிக்கொண்டே கண்ணாடியை உடைப்பது போன்ற காட்சி. அதற்கு டுப் போட விரும்பாத கமல் தானே உடைப்பதாகக் கூறி அதில் நடித்திருக்கிறார். உடைத்தபோது அடிபட்டு அவரது கையில் ரத்தம் கொட்டியது. இதுதான் நடந்தது.
ஆனால் அவர் உடைத்தபோது அந்த உடைசல் இதயம் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது என்று வதந்தி பரவியது. அவர் காதல் இளவரசன். அதனால்தான் உடைந்த கண்ணாடியில் இதய வடிவம் இருந்தது என்றெல்லாம் விவாதத்தைக் கிளப்பினார்கள்.
No comments:
Post a Comment