Sunday, September 13, 2009

திருவாளர் முஸ்லிம் அவர்களே...



சக முஸ்லிம் ஒருவருக்கு பயப்படுவதில் 10 சதவீதமாவது முஸ்லிம்கள் அல் லாவுக்கு பயந்தார்கள் என்றால், அவர்கள் சிறந்த முஸ்லிம்களாகவும் உணர்வுமிக்க மனிதர்களாகவும் மாறுவார்கள் என்று பாலிவுட் திரைக்கதை ஆசிரியரும், பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவெத் அக்தர் பல மேடைகளில் பேசியிருக்கிறார். மும்பை, டில்லி, லக்னோ, கான்பூர், அலகாபாத், ஐதராபாத் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் முஸ்லிம்களைச் சீண்டிவிடக்கூடிய இந்த வாக்கியங்களை அவர் வெளிப் படையாகப் பேசியிருக்கிறார். இந்த வசனங்களைக் கேட்டவர்களிடையே ஆமோதிக்கும் தலையாட்டமும், சங்கடம் நெளியும் புன்னகையும், சப்தமான வாவ் வாவ் குரல்களும் வெளிப்பட்டன.


இதே வசனங்களை ஜமியாத்-உல்-உலேமா-இ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த மதிப்புமிக்க மவுலானா ஒருவரும், கடந்த ஆண்டு தனிப்பட்ட உரையாடலின் போது கூறினார். முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் ஊடகங்களும் எங்களுக்கு முன்நிற்கும் பெரும் தடைகள் என்றும் அவர் கூறினார். எது சொன்னாலும் நடந்தாலும் அல்லாவைக் கூறுகிறார்கள். எதிர் கருத்துக்களைக் கூற விரும்புவோர் அச்சப்படவேண்டும்.


முஸ்லிம்கள்தான் சக முஸ்லிம்களைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், தேசிய சட்டக்குழு யாரைக்கண்டு பயப்படுகிறது? வெளிப்படையாகக் கூறுவதைக் காட்டிலும் பொதுவான சங்கடங்களை ஏன் அது தேடிக்கொள்ள வேண்டும்? இருதார மணம் குறித்த முஸ்லிம்கள் சட்டம் குறித்த வழிவழிவந்த புரிதல்கள், அடிப்படையிலேயே தவறானதாகும். அது உண்மையான முஸ்லிம் சட்டங்களிடம் எழுத்திலும் உணர்விலும் முரண் பட்டு நிற்கிறது என்று அண்மையில் வெளியான தேசிய சட்டக்குழுவின் 277வது அறிக்கை குறிப்பிடுகிறது. நன்றாகவே சொல்லியுள்ளது. ஆனால் அந்த அறிக்கை அடுத்து என்ன சொல்கிறது? இருதார மணத்துக்காகச் செய்யப்படும் மோசடி மதமாற்றத்தைத் தடுக்க, இந்து குடும்பச் சட்டத்தில் ஒரு புதிய சட்டப் பிரிவை சேர்க்குமாறு அது முன்மொழிந்துள்ளது. ஆனால் “மத உணர்வுகளை” மனதிற்கொண்டு முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் அவசியம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி அறிக்கை வாய் திறக்கவில்லை.


இஸ்லாமிய சட்டம், இந்து சட்டம், மதம் மாற்றும் சட்டம், சிறுபான்மையினர் சட்டங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் தாஹிர் முகமது, இந்திய சட்டக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆவார். இஸ்லாமில் உள்ள இருதாரமுறை பற்றிய சட்டக்குழுவின் கணிப்புகளுக்கு இவர் ஒரு உந்து சக்தியாக இல்லாதபோதும் அதன் கணிப்பில் இவருக்கும் பங்கு உண்டு என்பதில் ஐயம் இருக்க முடியாது. அவரைப் பற்றி நாம் சிறிது சிந்திப்போம். அவர் தம்முடைய மனசாட்சிக்கும் மதத்துக்குமிடையே அல்லாடுகிறார். முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் இஸ்லாத்தினுடையதல்ல என்று அவருடைய இஸ்லாம் பற்றிய அறிவு கூறுகிறது. கடந்த சில பத்தாண்டுகளில், பல இஸ்லாமிய நாடுகளில் முல்லாக்களின் ஒப்புதலோடு பரந்துபட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன வென்று இஸ்லாமிய உலகம் பற்றிய அவருடைய அறிவு கூறுகிறது.


உதாரணமாக, பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பெண்ணின் திருமண வயது குறைந்தது 16 ஆகும்; லெபனான், டுனீசியா மற்றும் சிரியாவில் இது 17 ஆகும்; அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் ஜோர்டானில் 18 ஆகும். ஆனால் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், முஸ்லிம் சிறுமியர்களுக்கு பாலியல் விவாகம் குறித்த சட்டப்பிரிவுகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்று கேட்டது.


டுனீசியா, துருக்கி மற்றும் லெபனான் (சிலபிரிவினருக்கு) போன்ற நாடுகளில் பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் தீவிரமான கட்டுப்பாடுகள் உள்ளன. பாகிஸ்தானில் சில நிபந் தனைகளுக்கு உட்பட்டு பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய மனைவியிடம் முன்அனுமதி பெற்றது குறித்து மத்தியக்குழுவை நம்பவைப்பது, உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப் பட்ட பின்தான் அங்கு இருதாரமணம் அனுமதிக்கப்படுகிறது. மலேசியாவில் ஷரியாத் நீதிமன்றத்தின் சம்மதத்துடன் தான் இரண்டாவது திருமணம் செய்ய முடியும்.


இந்தோனேசியாவில் பொதுத்துறை யில் பணிபுரியும் பெண்கள் இரண்டாம் தாரமாக ஆக முடியாது. அத்துடன் வங்க தேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்சில் பொதுத்துறையில் ஊழியம் செய்யும் ஆண், இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினால், அதற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றுவதுடன் மேலதிகாரிகளின் அனுமதியையும் பெறவேண்டும். இரண்டாம் திருமணத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். 1990ல் இரண்டு முஸ்லிம் நீதிபதிகள் அடங்கிய டாக்கா உயர்நீதிமன்றப் பெஞ்சு அளித்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. குரானில் கூறப்படும் நியதிகள் அனைத்தும் ஒருதார மணத்தைப் பற்றியதே என்று அத்தீர்ப்பு கூறியது. மாறுபட்ட அரசியல் சூழலில் வங்கதேச உச்சநீதிமன்றம் அத் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.


ஆனால், ஏராளமான சலுகைகளைப் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் ஆடவருக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இவை அனைத்துக்கும் மேலாக ஒரு முஸ்லிம் ஆடவர் ஒரே சமயத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இரண்டாண்டுகளுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு மதக்கட்டளை (பட்வா) பிறப்பிக்கப்பட்டது.


ஒரு முஸ்லிம் ஆடவர் தன்னிச்சைப் படி திருமணத்தை ரத்து செய்வது ‘தலாக்’ எனப்படும். அல்ஜீரியா, இந்தோனேசியா மற்றும் டுனீசியா ஆகிய நாடுகளில் இந்த உரிமைக்கு அங்கீகாரம் கிடையாது. நீதிமன்றங்கள் மூலமே விவாகரத்து பெறமுடியும். மொராக்கோவிலும் விவாக ரத்து நீதிமன்றங்களின் கறாரான கட்டுப் பாட்டில் உள்ளது. ஜோர்டான், லெபனான், மலேசியா மற்றும் சிரியாவில் விவாகரத்து பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யவேண்டும்.


பெரும்பாலான நாடுகளில் விவாகரத்துக்கு முன்பாக சமரச முயற்சிகள் செய்வது கட்டாயமாகும். ஈரானில் தலாக் கூறி யதற்கு அவசியமாக இரண்டு சாட்சிகள் தேவை. இந்திய முஸ்லிம்கள் மட்டுமே உடனடி தலாக் (மும்முறை) உரிமையை கட்டுப்பாடின்றி அனுபவித்து வருகின்றனர். எந்தவொரு நிலையிலும், குடித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், ஆத்திரப்பட்டோ அல்லது ஒருவித மனக்கிலே சத்திலோ அவர் எப்போது, எப்படி, தலாக்கை முகத்துக்கு எதிரிலோ, கடிதத்திலோ, தந்தியிலோ, தொலைபேசியிலோ, ஒரு மின் அஞ்சலிலோ அல்லது குறுஞ்செய்தி சேவையிலோ (எஸ்எம்எஸ்) முஸ்லிம் கணவர் அறிவிக்க முடியும்.


டுனீசியா, மொராக்கோ மற்றும் துருக்கியின் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிக்கும் உரிமை, விவாகரத்து பெறும் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தகப்பனுக்கு மட்டுமே ‘இயல்பான உரிமை’ அளிக்கப் பட்டுள்ளது. பாலியல் நீதியைப் பொறுத்த வரை பாரம்பரிய மன்னராட்சி கொண்ட மொராக்கோ முஸ்லிம் பெண்களுக்கு சிறந்த இடமாகத் திகழ்கிறது.


மன்னர் ஆறாம் முகமது, அக்டோபர் 2003ல் அறிவித்த குடும்ப நியதிகளை பிப்ரவரி 2004ல் மொராக்கோ நாடாளுமன் றம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அதன்படி திருமண ஒப்பந்தத்தில் ஆணும், பெண்ணும் சம கூட்டாளிகளாவர். கணவன் இனியும் குடும்பத்தலைவன் என்று கூறமுடியாது. கணவன் -மனைவி இருவருமே குடும்பத்துக்கு கூட்டு பொறுப்பாளிகளாவர்.


சுருக்கமாகச் சொல்வதென்றால், ஏரா ளமான முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு கிடைக்கும் உரிமைகளைவிடக் குறைவாகவே இந்திய முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது விந்தையான விஷயம். கற்றறிந்தவரும் சிறந்த முஸ்லிமுமான டாக்டர் முகமது இந்தியாவில் இஸ்லாத்தின் பெயரால் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்பதை வேதனையோடு உணராமல் இருக்க முடியாது. அவர்கள் போற்றித்துதிக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய அறியாமை கொண்ட முஸ்லிம்கள் அல்லது வெளி வேஷமிட்டு நம்பிக்கையின் மேல் சபதம் செய்தவர்களுக்கு மத்தியில் வாழும் அவர், தனது வார்த்தைகளை அளந்து பேசுவது சரி என்று எண்ணுகிறார்.


இந்திய நாட்டின் திருவாளர் முஸ்லிம், இஸ்லாத்தில் மதகுருக்களுக்கு இடமில் லை என்று பெருமையுடன் கூறுவார். ஆனால், இஸ்லாத்தைப் பற்றிய சகல ஞானத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கும் மதகுருக்களுக்கு அவுட்சோர்சிங் செய்துவிடுகிறார். அதன் விளைவாக இஸ்லாத்தைப்பற்றி, மோட்சத்துக்குப் போக தகுதியான பாஸ்போர்ட் இஸ்லாம் என்பதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.


திருவாளர் முஸ்லிம் அவர்களே, பாலின அநீதியுள்ள இஸ்லாம் வெட்கப்பட வேண்டியதொன்றே தவிர பெருமைக்குரியது அல்ல.


ஜாவேத் ஆனந்த்

கட்டுரையாளர், மதவாத எதிர்ப்பு இதழின் கூட்டாசிரியரும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான முஸ்லிம்கள் அமைப்பின் பொதுச்செயலாளரும் ஆவார்.

தமிழாக்கம்: தாஸ்

2 comments:

  1. ஒரு முஸ்லிம் அல்லாதவர் இவ்வளவு தைரியமாக கட்டுரை எழுதுகின்றாரே என்ற எனது ஆச்சர்யம், கடைசியில் எழுதியவர் பெயரை படித்ததும் விலகியது. முதலில் நீங்கள் தான் எழுதினீர்களோ என்று எண்ணிவிட்டேன் !!

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை,அவர் இதை எழுதிவிட்டு என்ன பாடுபடுகிறாரோ? இந்திய (ஆண்)முஸ்லீம்களுக்கு வாக்குரீதியாக இவ்வளவு சலுகையா தானோ.

    நடைமுறையில் சில முஸ்லீம் நண்பர்களின் அனுபவத்தை நேரில் பார்க்கிறேன். கடைசியாக தோன்றிய மதமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியில் மதகுருவுக்கு எதிராக பேச அவர்களால் இயலவில்லை.

    ReplyDelete