ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆந்திராவில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் மெயில் டுடே பத்திரிகை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதில் பலர் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரிய வந்தது. செப்.3 அன்று ராஜசேகர்ரெட்டியின் உடல் கிடைத்ததாக செய்தி வெளியாகியது. அப்போதிருந்து தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் நடந்ததாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சிலருக்கு அதில் சந்தேகங்கள் எழுந்தன. விசாரித்ததில் அந்த சந்தேகங்கள் சரிதான் என்று தெரிய வந்துள்ளது.
யாராவது இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து பணம் கொடுத்து ராஜசேகர்ரெட்டி இறந்த அதிர்ச்சியில்தான் அவர் இறந்தார் என்று சொல்லச் செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் மாநில அமைச்சர் ஒருவரே நேரிடையாகத் தலையிட்டார் என்று கூறப்படுகிறது. மறைந்த முதல்வரைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோன்றச் செய்யவும், ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தவுமே இத்தகைய செய்திகள் மோசடியாகப் பரப்பப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு ஒவ்வொரு மணி நேரமும் உயிரிழப்புப் பட்டியலை வழங்கிக் கொண்டே இருந்தது.
அவர்களின் கடைசி பட்டியலின்படி மொத்தம் 462 பேர் உயிரிழந்தனர். அதில் 402 பேர் மாரடைப்பாலும், 60 பேர் தற்கொலை செய்தும் மரணமடைந்தனர். அவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின்படி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகம் பேர் இறந்தனர். அங்கு 58 பேரும், வாரங்கல்லில் 48 பேரும், கரீம்நகரில் 46 பேரும் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் மெயில் டுடே பத்திரிகை மேற்கொண்ட ஆய்வு, சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரை இறுதிச்சடங்களுக்காக காங்கிரஸ்காரர்களால் தரப்பட்டது என்பதும், அதற்குப்பதிலாக ராஜசேகர்ரெட்டியின் மறைவுதான் இறப்புக்குக் காரணம் என்று சொல்ல நிர்ப்பந்தித்ததும் அம்பலமாகியுள்ளது.
எடுத்துக்காட்டாக, வாரங்கல் மாவட்டத்தின் பரக்கலா தாலுக்காவைச் சேர்ந்த எழுபது வயதான உப்பலய்யா மாரடைப்பால் இறந்து போனார். அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்ததாக அவரது மகன் மல்லையா கூறினாலும், ஒருமாதமாகவே மூச்சுவிட முடியாமல் உப்பலைய்யா அவதிப்பட்டு வந்ததாக மல்லையாவின் மனைவி லட்சுமம்மா கூறியுள்ளார். ஜகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்சி தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்ட உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் ராஜசேகர்ரெட்டி மறைவின் அதிர்ச்சிச் செய்திதான் உப்பலய்யாவின் மரணத்திற்குக் காரணம் என்று செய்தி போடச் செய்துள்ளார்கள்.
40 வயதான பி.ஸ்ரீஹரி, 80 வயதான சுக்கா சாயம்மா என்ற பெண்மணி, 45 வயதான ராஜமவுலி ஆகியோரின் மரணங்களும் இயற்கையான மரணங்களே என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களின் குடும்பங்களின் வாயை அடைக்க காங்கிரஸ்காரர்கள் பணம் தந்துள்ளார்கள். ஹனம்கொண்டாவைச் சேர்ந்த 25 வயதான தீகலா சிரஞ்சீவியின் கதை வித்தியாசமானது. அவருக்கென்று யாரும் கிடையாது. அதோடு அவர் ஒரு மனநோயாளி. செப்டம்பர் 5 அன்று அவர் திடீரென்று தனது உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார். அவரது உடலை வாங்கவோ அல்லது எரிக்கவோ யாரும் இல்லாததால் உள்ளுர் மாணவர் காங்கிரஸ்காரர்கள், இவரும் ராஜசேகர்ரெட்டியின் மறைவின் துயரம் தாங்காததால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.
இத்தகைய மோசடியான தகவல்களைப் பரப்புவதில் ஜகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எரிகிற கொள்ளியில் முடிந்த வரை பற்ற வைக்க பார்த்துள்ளார்கள்.அதிர்ச்சியாக உள்ளது...இவர்களது அதிகார மோகத்தை நினைக்கும் போது... நல்ல பகிர்வு தோழா!
ReplyDeleteஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !!
ReplyDelete