Saturday, September 5, 2009

அணு உலைகள் : இந்த சரணாகதி ஏன்?


அனைத்து எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அணுசக்தி உற்பத்திச் சந்தையையும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேவேளையில், இதில் இறங்கும் அமெரிக்க நிறுவனங்கள் லாபத்தை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். நஷ்டம் வந்தால் அதற்கு வரம்பு விதித்துக்கொள்வது அல்லது அப்படியே அணுஉலையை செயல்படுத்துபவர் தலை மீது சுமத்திவிடுவது என்ற வசதிகளை இந்திய அரசு செய்து கொடுக்க முனைந்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கப்போகும் இந்த வசதிகள் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் அணு உலை நிறுவனங்களுக்கு கிடையாது.


அணுஉலைகளால் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை வழங்கிய அமெரிக்க நிறுவனங்கள் தர வேண்டிய இழப்பீடு 45 கோடி டாலரைத் தாண்ட வேண்டியதில்லை என்று வரம்பு விதிக்க முயற்சிக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டியிருந்தார். அதிலும் சலுகை அளிக்கலாமே என்று இந்தியத் தொழிலதிபர்களின் கூட்டமைப்பில் ஒன்றான ஃபிக்கி கேட்டுள்ளது. அணுஉலையை செயல்படுத்தும் இந்திய நிறுவனமும், அணு உலையை வழங்கிய அமெரிக்க நிறுவனமும் அதைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் என்ன என்பதுதான் ஃபிக்கி வழங்கும் திட்டம். மொத்தத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய மக்களின் தலையில் மொட்டை அடிக்க அரசும், இந்திய முதலாளிகளும் தண்ணீர் தெளித்து தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.


கேட்டால், இத்தகைய சலுகைகளை வழங்காவிட்டால் முதலீடு வராதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஆனால் சலுகைகள் தரப்படுவது அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டும்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெறுவதில் எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. இதிலும் தனியார் பாசம் வழிந்து ஓடுகிறது. பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் முழுமையாக அல்லது பெரும்பகுதி அரசின் வசம் உள்ளவையாகும். ஆனால் அமெரிக்க அணுஉலை நிறுவனங்கள் முழுக்க, முழுக்க தனியாருக்குச் சொந்தமானவையாகும். அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை வழங்க வேண்டும் என்று இந்திய அரசும், இந்திய முதலாளிகளும் முனைந்திருப்பதற்கு இது பிரதான காரணமாகும். இந்திய அணு மின்சாரச்சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் இழந்துவிடுமே என்று இந்த இரு தரப்பும் கவலைப்படுகிறது.


மற்றொரு ஆலோசனையும் முன்வைக்கப்படுகிறது. அதுவும் ஃபிக்கி தரப்பிலிருந்துதான் வருகிறது. இந்திய மின்கழகத்தின் முன்னாள் தலைவர் எ°.கே.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ள பரிந்துரையில், அணுஉலைகளால் ஏற்படும் பாதிப்புக்கு இந்தியாவில் அந்த அணுஉலைகளை இயக்குபவர்களை இழப்பீடு வழங்கச் செய்வதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கள் மோசடியை மறைப்பதற்காக அமெரிக்க .நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அன்னிய நிறுவனங்களுக்குமே இந்த சலுகையைத் தந்துவிடலாம் என்று அக்குழு கூறுகிறது. அமெரிக்காவின் ஜி.இ மற்றும் வெஸ்டிங்ஹவுஸ், பிரான்சின் அரேவா மற்றும் ரஷ்யாவின் ரோசாடோம் ஆகிய நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை சம்பாதிக்க இந்த பரிந்துரைகள் உதவப் போகின்றன.


அணுஉலைகளில் விபத்து ஏற்படுவதற்கு அதன் கருவிகள் பழுதுபடுவதோ அல்லது செய்யப்பட்ட வடிவத்தில் ஏற்பட்ட கோளாறோதான் காரணமாக இருக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அணுஉலையை வழங்கிய நிறுவனம்தான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு இதுதான் காரணமாகும். சர்வதேச அளவில் இதுதான் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதைத்தாண்டி, செயல்படுத்தும் நிறுவனத்தைப் பொறுப்பாக்கும் வேலை 1960, 1997 ஆகிய ஆண்டுகளிலும் நடந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, இந்திய அணுமின்கழகம் என்ற அரசு நிறுவனம்தான் உலைகளை கையாளப்போகிறது. இழப்பீட்டுக்கான வரம்பை ஒப்புக்கொண்டால் விபத்து ஏற்படும் வேளையில் அன்னிய நிதியுதவி கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் உதிர்க்கப்படுகின்றன.


1984 ஆம் ஆண்டில் நடந்த போபால் எரிவாயு விபத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரம் பேர் நிரந்தர ஊனமானார்கள். இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கும் அதன் பாதிப்புகளின் தாக்கம் உள்ளது. இந்த விபத்திற்கு 47 கோடி டாலர் இழப்பீடு வழங்கப்பட்டது. அதுவும் போதாது என்பதுதான் வல்லுநர்களின் கருத்து. அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் இதைப்பல மடங்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதற்கு முன்பாக பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ள விபத்துகள் இதை உறுதிப்படுத்துகிறது. அத்தகைய பாதிப்புகளை சமாளிப்பதற்கான இழப்பீட்டை வெறும் 45 கோடி டாலர் என்று மட்டும் நிர்ணயிப்பது கடுமையான விளைவுகளை உருவாக்கிவிடும். இது நாட்டின் வருங்காலம் பற்றியது என்பது காங்கிரஸ் மற்றும் அதோடு கூட்டு சேர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நினைவுக்கு வந்தால் சரி.

No comments:

Post a Comment