அமெரிக்காவின் பகாசுர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏடி அண்டு டி நிறுவனம் நேரடியாக பொதுத்துறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அணுகியுள்ளது. அழையா விருந்தாளிகளாக வந்த அவர்கள் கதவைத்தட்டாமலேயே உள்ளே நுழைந்துள்ளனர். உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமாயிருக்கிறோம் என்று சொல்லியிருகிறார்கள். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் பங்குகள் விற்பது குறித்து முடிவே எடுக்கப்படவில்லை. ஆனால் பல் பிடித்துப் பார்க்கும் வேலையில் அமெரிக்க நிறுவனம் இறங்கிவிட்டது. அரசு இதுவரையிலும் எதையும் சொல்லாத நிலையில், அதன் அனுமதியுடன்தான் ஏடி அண்டு டி நிறுவனம் களத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. பி.எஸ்.என்,எல். நிர்வாகம் பளிச்சென்று பதில் சொல்லியிருக்கிறது. நாங்கள் எதையும் முடிவு செய்ய முடியாது. அரசின் கதவுகளைத் தட்டுங்கள் என்று கூறிவிட்டார்கள். ஆனால் அரசோடு உட்கார்ந்து மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டுதான் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைப் பார்க்கச் சென்றார்களோ என்னவோ...?
லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய நிறுவனத்தைக் குறைத்து மதிப்பிடும் வேலைகளும் துவங்கிவிட்டன. 81 ஆயிரம் கோடிதான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மதிப்பு என்ற கட்டுக்கதையைப் பரப்புகிறார்கள். 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன் 26 சதவிகித பங்குகளை ஏடி அண்டு டிக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இத்தகைய திட்டத்தை அவ்வளவு எளிதாக நடைமுறைப்படுத்தி விட முடியாது என்றாலும் ஒவ்வொரு நகர்த்தல்களையும் நன்றாக யோசித்துதான் எடுக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சனை எழும்போதும் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரின் மனங்களிலும் "இடதுசாரிகள் இல்லை. அதனால்தான் கண்மூடித்தனமாக இயங்குகிறார்கள்" என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment