சோராபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டது போலி மோதலில்தான் என்று ஆதாரங்கள் வெளிவந்து அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 2004 ஆம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதும் போலி மோதல்தான் என்பது அம்பலமாகியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் அரசு எந்திரம் பெரும் அளவிற்கு தவறான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றோடு காந்தி பிறந்த மண்ணில் கள்ளச்சாராயத்தை ஆறாகப் பெருகி ஓடச்செய்ததும் மோடியின் மேற்பார்வையில்தான் என்ற செய்தி நிர்வாகம் செயலிழந்து போயிருப்பதையே காட்டுகிறது.
ஜூன் 2004 ஆம் ஆண்டில் நடந்த மோதலில் குஜராத் முதல்வர் மோடியைக் கொலை செய்ய சதி செய்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளிவந்தது. மும்பையைச் சேர்ந்த இஷ்ரத், கேரளாவைச் சேர்ந்த கோபிநாத் பிள்ளையின் மகன் ஜாவேத் ஷேக், பாகிஸ்தானைச் சேர்ந்த அம்ஜத் அலி ரானா மற்றும் ஜிஷான் ஆகிய நான்குபேரும் மோடியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தார்கள் என்றும், அகமதாபாத் நகருக்கு வெளியில் நடந்த மோதலில் இந்த நான்கு பேரும் கொல்லப்பட்டார்கள் என்றும் அப்போது காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
இஷ்ரத்தின் உடலை வாங்குவதற்காக வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள், முதன்முறையாக லஷ்கர்-இ-தொய்பா என்ற பெயரைக் கேள்விப்படுகிறோம் என்று கதறி அழுதனர். மோடியின் தலைமையில் மாநில அரசு இருப்பதால் நீதி கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் மும்பை திரும்பினர். ஆனால் குஜராத் படுகொலைகள் மற்றும் அதைத்தொடர்ந்து நடக்கும் போலி மோதல்கள் குறித்து உச்சநீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் போன்றவை பல்வேறு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளன. இஷ்ரத் கொலை சம்பந்தமாகவும் குஜராத் உயர்நீதிமன்றம் அத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ள வேளையில்தான் அகமதாபாத் மாநகர் மாஜிஸ்ரேட் எஸ்.பி.தமங்கின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.
243 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரி வன்ஜாரா உள்ளிட்ட பலர்தான் நான்கு பேரையும் கொலை செய்துள்ளனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் ஏற்கெனவே சோராபுதீன் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர். முதல்வரைத் திருப்திப்படுத்தி பதவி உயர்வைப் பெறுவதே இந்த காவல்துறை அதிகாரிகளில் நோக்கமாக இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டும் மாஜிஸ்ட்ரேட் தமங், இரு பக்க அளவிலான காவல்துறையினரின் பெயர்ப்பட்டியலையும் பதிவு செய்துள்ளார். ஜூன் 12, 2004 அன்று இந்த நான்கு பேரையும் குஜராத் காவல்துறை கடத்திக் கொண்டு வந்துள்ளது. காவல்துறைப் பாதுகாப்பில் இருக்கும்போதே ஜூன் 14 இரவில் அந்த நான்கு பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் மறுநாள் காலையில் மோதல் நடந்ததாகக் காவல்துறையினர் ஜோடித்துள்ளனர். இதற்காக ஏற்கெனவே உயிரிழந்த இஷ்ரத்தின் உடலைத் தோட்டாக்களால் துளைத்துள்ளனர். அகமதாபாத்திலிருந்து மும்பை சென்ற இவர்கள் காரில் குண்டுகளும், துப்பாக்கிகளும் இருந்ததாக காவல்துறையினர் கூறியிருந்தனர். அது காவல்துறையாலேயே வைக்கப்பட்டது என்று தமங் அறிக்கை அம்பலப்படுத்துகிறது. அதோடு, இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவேத் ஷேக் ஆகிய இருவரையும் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புபடுத்துவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், மோடியைக் கொல்வதற்காகவே அவர்கள் குஜராத்திற்கு வந்தார்கள் என்பதையும் நிரூபிக்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
குஜராத் படுகொலை தொடர்பான ஏராளமான வழக்குகள் இழுத்து மூடப்பட்டன. அவற்றில் சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. பாரபட்சமில்லாத ஒவ்வொரு விசாரணையும் மோடி தலைமையிலான பாஜக அரசின் வெறியாட்டத்தையே அம்பலப்படுத்தி வருகிறது. இவர்களின் இந்த மதவெறியை தங்கள் வளர்ச்சிக்காக காவல்துறையினர் பயன்படுத்த முயற்சித்துள்ளனர். அப்பாவி மக்கள், குறிப்பாக அப்பாவி சிறுபான்மை மக்கள் இந்த இரு தரப்பின் வெறியாட்டங்களுக்கு பலியாகியுள்ளனர். மோடியின் அலமாரியிலிருந்து மேலும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment