மேற்கு வங்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கெதிராக கிளம்பிய திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், காங்கிரஸ், பாஜக மற்றும் எஸ்.யு.சி.ஐ ஆகியவை அடங்கிய கூட்டணி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடந்த தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். முதலாளித்துவ ஊடகங்களின் உதவியுடன் பொது மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையிலான மோதல் என்று தவறான மோசடிப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்கு அப்பாவிப் பொது மக்களும் பலியானார்கள்.
நந்திகிராமத்தில் சிக்கல் நிலவியபோதே மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று எச்சரிக்கை விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு பெரும்பாலான ஊடகங்களை மவுனமாக இருக்கச் செய்துவிட்டது. ஆனால் லால்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, மம்தாஜி சரணம் என்ற அபயக்குரல் மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான கோடீஸ்வர ராவ் என்ற கிஷன்ஜி மூலமாக எழுந்தது. நந்திகிராமத்தில் நாங்கள் செய்த உதவிக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டாமா என்று ஏற்கெனவே செய்த கூட்டுச்சதியையும் போட்டு உடைத்தார்.
அதேபோல், தொழிற்சாலைகளை அமைக்க நிலங்களை மாநில அரசு எடுத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள்தான் என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. அது உண்மைதான் என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது. ஹால்டியா பகுதியில் உள்ள பல நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வாங்கித்தர புரோக்கர்கள் கிளம்பியுள்ளனர். இவர்கள் அனைவருமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான சுபேந்து அதிகாரியின் ஆதரவாளர்களாவர். எட்டு லட்சம் மதிப்பிலான நிலத்தை 25 லட்சத்திற்கு புரோக்கர்கள் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவர்.
இவ்வாறு நடத்தப்படும் பேரத்தால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடையிலுள்ள புரோக்கர்களே லாபத்தை அடித்துக் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது. இந்த புரோக்கர்களுக்கு ஆதரவாகவே நிலம் கையகப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி நிர்ப்பந்தித்து வருகிறார். தனியார் தொழில் துவங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலையை அரசு செய்யக்கூடாது என்கிறார் அவர். நேரடியாக விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் அடிமட்ட விலைக்கு விவசாயிகளின் நிலங்கள் பறிபோனது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நிலம் கையகப்படுத்தலுக்காக அரசாணை வெளியிடப்படாத தொழில் திட்டங்களுக்காக நிலங்களை எடுக்கப்போவதில்லை என்று மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய மசோதாவுக்காக மாநில அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புரோக்கர்களின் பிடியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் செல்வாக்குள்ள பகுதிகளில் நிலங்களை அடையாளம் காணும் வேலையில் அக்கட்சிக்காரர்கள் இறங்கியுள்ளனர். தனது நிலத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது விவசாயிகளுக்கு தெரியாத நிலை இருக்கிறது.
நிலத்தை எடுக்கும் நடவடிக்கையில் அரசு இருந்தபோது அதற்கு ஒரு வெளிப்படையான தன்மை இருந்தது. ஏழைகளிலும் ஏழையாக இருப்பவருக்கு அதில் பாதுகாப்பு கிடைத்தது. இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விவசாயிகள் அல்ல, வெறும் புரோக்கர்கள்தான். தங்கள் வருமானம் போய்விடுமே என்பதுதான் அவர்களுடைய அச்சம். சந்தை மதிப்பை விட அதிகமாகக் கொடுத்து, விவசாயிகளுக்கு மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்யும் மாநில அரசுக்கு எதிராக மோசடிப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டு வன்முறையையும் ஏவிவிட்டனர். புரோக்கர்களைப் பொறுத்தவரை விவசாயிகள் ரத்தமும், சதையும் கொண்டவர்களல்ல. அவர்களும் விற்பனைப் பண்டம்தான்.
It is sad to see that every politician, these days, acts on the sole interest of vote bank politics and NOT on the development plank. Mamata leads the pack. Her act on Singur spelled doom for the industrial development of West Bengal.
ReplyDelete