Friday, September 4, 2009

"கிழக்கு லண்டன்" லட்சணம் இதுதானா...?

இந்தியாவின் வணிகத்தலைநகர் என்று பெயர் பெற்ற மும்பையில் தனிநபர் வருமானம் ரூ. 65,361 ரூபாய். இதுதான் நாட்டிலேயே மிக அதிக வருமானத்தைக் கொண்ட நகரமாகும். ஆனால் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மும்பை மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது நாட்டின் வணிகத்தலைநகரில் வசிக்கும் மக்களில் பத்து சதவிகிதம் பேர் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கான வருமானத்தை ஈட்ட முடியாமல் இருக்கிறார்கள். இந்த நகரத்தில்தான் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பும் பத்து கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.


ஐ.நா.வளர்ச்சித்திட்ட அமைப்பின் நிதியுதவியுடன் மும்பை மாநகராட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டு அறிக்கையில்தான் இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. நகரின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற நிலையுள்ள இடங்களில்தான் வசிக்கிறார்கள். மேலும் இவர்கள் வசிக்கும் பகுதி மும்பை நகரில் ஆறு சதவிகிதப்பரப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பாதிப்பேர் 94 சதவிகிதப் பரப்பில் வசிக்கிறார்கள். குடிசைப்பகுதிகளில் அவ்வளவு அடர்த்தியான மக்கள் தொகை இருக்கிறது. இவ்வளவு மோசமாக மக்கள் வாழும் பகுதியாக இருக்கும் மும்பையை, கிழக்கின் லண்டன் என்று இனிமேலும் அழைப்பது சரியாக இருக்குமா? என்று அந்த அறிக்கையே கேள்வி எழுப்புகிறது.



அது சரி, இந்த மும்பை யாருக்குச் சொந்தம் என்று கேட்கும் அந்த அறிக்கை, நகர்ப்புற வறுமை பெருகிக்கிடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 12.17 லட்சம் பேரின் மாத வருமானம் 591 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது. இத்தனைக்கும் நாட்டின் தனிநபர் வருமானத்தின் சராசரி 29,382 ரூபாயாக 2006-07 ஆம் ஆண்டில் இருந்தபோது, மும்பையின் சராசரி 65,361 ரூபாயாக இருந்தது. இந்தியாவுக்குள்ளேயே ஒரு குபேரபுரி என்று பலரால் வர்ணிக்கப்படும் மும்பை நகரில்தான் இவ்வளவு கோரமான ஒரு நிலைமை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதோடு, இத்தகைய ஏழ்மை நிலைமை இருப்பதை அனைவராலும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அளவிற்கு பரவலாக உள்ளது.



வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிபரங்கள் தரப்படுகின்றன. இதையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று வெறும் 8.5 சதவிகித மும்பைவாசிகள்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்று கூறியது. ஆனால் மும்பை நகர்ப்புற போக்குவரத்துத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 40 சதவிகித மும்பைவாசிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்று கூறியது. இத்தகைய பல்வேறு ஆய்வுகள் மும்பையில் வறுமை பரவலாக இருக்கிறது என்பதைத்தான் சுட்டிக்காட்டியது என்று இந்த அறிக்கை கூறுகிறது.



தனிநபர் வருமான சராசரி பற்றிக் கூறியுள்ள இந்த அறிக்கை, இந்த சராசரி என்பது மக்கள் மத்தியில் இருக்கும் பெரும் ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. இங்கு பெரும் பணக்காரர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், வறுமையில் உழல்பவர்கள் என்று அனைவருமே மும்பையில் வாழ்கின்றனர். அனைத்து நகரங்களைப் போலவே, இங்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படாமலேயே போய்விட்டது. இந்திய சமூகத்தின் நிலைமையும் கூட அதுதான். மும்பையின் மக்கள் தொகையில் 54 சதவிகிதம் குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். அதோடு, இந்தக் குடிசைப்பகுதி மும்பையின் நிலப்பரப்பில் வெறும் ஆறு சதவிகிதத்தைதான் எடுத்துக் கொண்டுள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது என்று குறிப்பிடுகிறது.



குடிசைப்பகுதியில் வாழும் மும்பைவாசிகளின் வாழ்க்கை மற்ற பகுதியில் இருப்பவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனதாகும். மற்ற பகுதியில் வாழ்பவர்களின் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதோடு, மலிவான பொருட்களை அவர்களுக்கு விற்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மும்பையின் ஒரு பாதியில்லாமல், மற்றொரு பாதியின் வாழ்க்கை முடங்கிப் போய்விடும். இவர்களின் குறைந்த செலவுக்கான சேவையால் பல குடும்பங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளன. மற்ற பகுதிகளில் வாழும் பெரும்பாலானோருக்கு இந்தக் குடிசைப்பகுதிகளுக்கு வர வேண்டிய அவசியமோ அல்லது அப்பகுதி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயமோ கூட ஏற்படுவதில்லை. இத்தனைக்கும் இந்த வறுமையில் வாடும் மனிதர்கள் இருப்பது அவர்களுக்கு மிக, மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது.

3 comments:

  1. மும்'பாய் (பாய் கூட வாங்கமுடியாது !

    ReplyDelete
  2. india! incrdiable india!!.

    ReplyDelete
  3. ONLY CONGRESSMEN ARE RESPONSIBLE FOR THIS INCREDIABLE INDIA, BECAUSE THEY ARE RULING INDIA FOR THE PAST 60 YEARS EXCEPT 7 YEARS BY OTHERS.

    ReplyDelete