Wednesday, July 8, 2009

எளிமை + அர்ப்பணிப்பு = கக்கன்



காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி சண்டையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், என ம.பொ.சி கேலி செய்வார்.


அது உண்மை என்பதை இன்றைக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் பறைசாற்றும். ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழ் நாடு கமிட்டியிலும் கோஷ்டி சண்டையை மறந்து ஒன்றுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை.


1955-57 ஆண்டுகளில் பூ.கக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்ட இந்த குறுகிய காலமே கோஷ்டி சண்டை மட்டுப்பட் டிருந்த காலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மேலும் கக்கன் தலைவராக இருந்து சந்தித்த 1957 பொதுத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 155 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.


கக்கனின் சாதனை மகுடத்தில் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை என பல மாணிக்கக் கற்கள் உண்டு. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அவற்றை அசை போடுவது உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாக அமையும்.


மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என் னும் சிற்றூரில் வாழ்ந்தவர் பூசாரி கக்கன் .இவர் மேலூர் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரியாகவும் அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர். இவருக்கு பெரும்பி அம்மாள், குரும்பி என இரண்டு மனைவிகள் உண்டு. தான் தாழ்த்தப் பட்ட சாதியில் பிறந்து தோட்டியாக பணிபுரிய நேரிட்டாலும் தம் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தணி யாத வைராக்கியத்தோடு பிள் ளைகளைப் படிக்கவைத்தார்.


இவரின் முதல் மனைவிக்கு 1909ஜூலை 18ஆம் நாள் பிறந்தார் நம் கதாநாயகன் கக்கன். ஐந்து வயதில் மேலூர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின் திருமங்கலம்அரசு மாணவர் விடுதியில் தங்கி உயர்நிலைக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரி யர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று ஆசிரியர் ஆனார். தான் படித்துத் தேறியது தனக்காக அல்ல, தமது சமுதாயத்துக்காகவே என உணர்ந்த கக்கன், தான் வாழ்ந்த பகுதியில் தீண்டப்படாதவர் வாழும்படி நிர்பந்திக் கப்பட்ட சேரிப்பகுதிகளில் இரவுபாடசாலைகள் அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி போதித்து பள்ளிகளில் சேரவைத்தார். இந்த அருந்தொண்டு பற்றி கேள்விப்பட்ட மதுரை வைத்தியநாத ஐயர், இவரை வாழ்த்தி ஊக்கம் அளித்தார்.


விடுதலை இயக்கத்திலும் அரிஜன சேவையிலும் கக்கனின் பணிகள் முத்திரை பதித்தன. மதுரை மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அரிஜனப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலூரில் மாணவ, மாணவியருக்கு என இரண்டு தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன. இரண்டுக்கும் கக்கன் காப்பாளராக இருந்தார்.


1938ஆம் ஆண்டு சொர்ணம் பார்வதி என்பவரை மணந்தார். சிவகங்கை அரசரின் உறவின ரான ஆர்.சசிவர்ணத்தேவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் சடங்கு சாங்கிய மின்றி எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.1932ஆம் ஆண்டுக்கு பிறகு அரிஜன சேவை யில் மும்முரம் காட்டிய காங்கிரசார்,கோவில் நுழைவுப் போராட் டங்களில் தீவிரம் காட்டினர். கக்கன் அதில் முன்னிலையில் நின்றார்.


1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புனிதமடைந்தது. ஆம், அதுவரை தீண்டத்தகாதவர்கள் உள்ளே நுழைய இருந்த வேலியை உடைத்துக் கொண்டு வைத்தியநாத ஐயர் எல்.என் கோபால்சாமி, தலை மையில் பூ.கக்கன், சாமிமுரு கானந்தம், முத்து, விஎஸ் முரு கானந்தம், வி.ஆர். பூவலிங்கம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட தோழர்களும் விருதுநகர் எஸ்.எஸ் சண்முக நாடார் (அன் றைய காலகட்டத்தில் நாடார் களும் தீண்டத்தகாதவர்கள் போல் கோவில் நுழைவுஉரிமை மறுக்கப்பட்டிருந்தனர்)ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்தனர். இதனை “குருதி சிந்தாப் புரட்சி” என ராஜாஜி வர்ணித்தார். அதைத் தொடர்ந்து கூடல் அழகர்,கள்ளழகர் என வரிசை யாக பல கோயில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடை பெற்றது.அரசும் சட்டமியற்றி உரிமை வழங்கியது.


வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942ஆகஸ்ட்8 அன்று துவங்கியது. கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறை யில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கக்கன் கடுமையாக தாக் கப்பட்டார்.அப்போது ஏற்பட்ட காயம் இறுதிவரை தழும்பாக அவரது உடலில் பதிந்து விட்டது. ஒன்றரை வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார் .


காமராஜரின் நம்பிக்கைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய சீடர் ஆனார். 1952-57 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957-67 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். முதலில் காமராஜர் முதலமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் அமைச்சராகச் செயல் பட்டார். உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார்.


மூன்றே முக்கால் நாள் ஒரு பதவி கிடைத்தாலே வாரிச் சுருட்டுகிற உலகில், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்கார ராகவே இருந்தார். சொத்து சேர்க்கவில்லை. தலைக்கனம் பிடிக்கவில்லை. எளிமையும் நேர்மையும் அவரது மறுபெய ராயின. 1975-ல் காமராஜர் மறைவுக்கு பின்னர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டார்.


அமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனை யில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.
1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது. 1981 டிசம்பர் 28 ஆம் நாள் இந்தத் அர்ப்பணிப்புச் சுடர் அணைந்தது. கக்கனோடு எளிமையும் தியாகமும் காங்கிரசிடம் இருந்து விடைபெற்றுவிட்டது. அவர்கள் கக்கனை மறந்துவிட்டார்கள். ஆனால் நாடு மறக்கக் கூடாது. நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றி உரக்கப் பேசுவோம்.

சு.பொ.அகத்தியலிங்கம்
இணையாசிரியர், தீக்கதிர்

5 comments:

  1. கக்கன் போன்றோர்களை இனி நாடு பார்க்காது. 'Gone with the wind' படத்தில் வரும் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது. Read about this age in books as they will never be experienced again.


    நூற்றாண்டு விழாவில் கும்மி அடித்துவிட்டு சொத்து சேர்த்து பிள்ளை, பேரன்களுக்கு பதவி தந்து, கோஷ்டிச் சண்டை போட்டு உய்வோம்.

    ReplyDelete
  2. இது போல் ஒரு மனிதர் வாழந்தார் என்று சொன்னால் இன்னம் சில ஆண்டுகளில் சொன்னால் யாராலும் நம்ப முடியாது...

    சாதரண கவுன்சிலர் டாட்டா சுமோவில் அல்லக்கைகளுடன் தற்பொழுது பவனி வரும் பொழுது எளிமை, உண்மை போன்ற வார்தைகளுக்கு உயிர்கொடுத்த தியாகி அவர்...
    இப்பொழுதுல்ல குள்ளநரி கூட்டம் கிடைத்த வரைக்கும் அட்டைப்பூச்சிகளாய் ஏழை எளிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சி குடித்து சொத்து சேர்து அடுத்த ஆட்சி வரும்பொழுது ஜெயிலுக்க சென்று கடைசிகாலத்தில் நாதியற்று அடையாளம் இழந்து நோய்க்கொ அல்லது அடிபட்டோ செத்து ஒழிவார்கள்...
    ஆனால் கக்கன் போல் மனித தெய்வங்கள் இறந்தும் வாழ்கின்றனர்...
    இதை வெளியிட்டதற்கு நன்றி!

    ReplyDelete
  3. Padikkumbothe namma udambu meisilirkurhu

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete