Monday, July 6, 2009

உள் ஒதுக்கீடா? உள் குத்தா?
கெடுவைத்துப் பேசுவது காங்கிரசாருக்கு வழக்கமாகி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிடுவோம் என்று மன்மோகன் சிங் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, நீங்கள் ஏற்கனவே ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தீர்களே...அப்போது அந்த 100 நாட்கள் கிடைக்கவில்லையா என்று சூடாகவும் சுவையாகவும் கேட்டார்.எப்படியோ மன்மோகன்சிங் மீண்டும் பிரதமராகிவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நிச்சயமாக 100 நாட்களுக்குள் ஒழித்து விடுவார். 101வது நாள் யாராவது வேலையில்லாதவர்கள் இருந்தால் மன்மோகன் சிங்கை அணுகலாம்.


மன்மோகன் சிங் அரசு வைத்த அடுத்த கெடு குடியரசுத்தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. 100 நாட்களுக்குள் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம் என்பதுதான் அது. குடியரசுத்தலைவர் பதவியை பெண் ஒருவர் அலங்கரிக்கும் நிலையில், மக்களவை சபாநாயகராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சியின் அதிகார மையமாக பெண் ஒருவர் நீடிக்கும் நிலையில் மகளிர் மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மகளிர் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது.கேட்டால் சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் இம் மசோதாவை இப்போதுள்ள வடிவத்தில் நிறைவேற்றக்கூடாது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்களோடு பேசி கருத்தொற்றுமையை உருவாக்கப்போகிறோம் என்று காங்கிரசார் கூறுகின்றனர்.அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட இத்தகைய கருத்தொற்றுமையை உருவாக்குவது பற்றி காங்கிரசார் கவலைப்படவில்லை. உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்ததால் இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில், முலாயம்சிங் யாதவை வளைத்துப்போட்டு, காந்தி நோட்டைக் காட்டி ஆட்சியை வெட்கமின்றி தக்கவைத்துக்கொண்டனர். இம்மாதிரி நேரங்களில் அமர்சிங் விசுவரூபம் எடுத்துவிடுவார். எடுத்தார். மகளிர் மசோதா விஷயத்தில் மட்டும் கருத்தொற்றுமை என்று கழுத்தறுப்பு நாடகம் நடத்துகின்றனர். அதிலும் சரத்யாதவ் இம்மசோதவை நிறைவேற்றினால் விஷம் குடித்துச்சாவேன் என்று வீரவசனம் பேசினார். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது அமுதமும் விஷமும் ஒருசேர வந்ததாம். பகவான் பரமசிவன் விஷத்தை எடுத்துக்குடிக்க பார்வதிதேவிதான் விஷத்தை பரமசிவனின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காமல் தடுத்து உடையவனைக் காப்பாற்றினாராம்.இது புராணக்கதை. ஆனால் நடைமுறையில் ஆணாதிக்க சமுதாயம் அமுதத்தை தான் குடித்துவிட்டு விஷத்தை மட்டுமே பெண்களுக்கு கொடுத்து வருகிறது.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு கேட்பதே பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்ற ஆதிக்க வெறி மனோபாவத்தில்தான்.மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களை நிறுத்துவதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. இப்போது இந்தக்கட்சிகளின் சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஆண்கள்தான் பெரும்பாலோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சொல்லப் போனால் எந்தக் கட்சியுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படியிருக்க, மசோதா நிறைவேறி விட்டால் உயர்சாதிப் பெண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்து வார்கள் என்று இவர்கள் கட்டை போடுவது மகளிருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இவர்கள் தயாராக இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கின்றன. அரசு நினைத்தால் நிச்சயம் மசோதாவைநிறை வேற்றிவிடமுடியும்.அதற்கான அரசியல் உறுதி காங்கிரசுக்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி.

- மதுக்கூர் இராமலிங்கம்

நன்றி : புதிய ஆசிரியன்
www.puthiyaaasiriyan.com

No comments:

Post a Comment