Sunday, July 26, 2009

பழைய தமிழ்ப்பாடலில் சிங்கு, அத்வானி, அம்பானி,



பாட்டு வரும்...பாட்டு வரும்... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்..

அமெரிக்க வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு மன்மோகன்சிங் பாடுவதாகத்தான் பாடல் துவங்குகிறது. ஆனால் அவருடைய கைகளோ புஷ், ஒபாமா, ஹிலாரி ஆகியோர் கைகளில் இருக்கும் ஆவணங்களில் கையெழுத்து இட்ட வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்திய வரைபடத்தை "சுருட்டுவது" போன்ற காட்சியும் அருமை.


**************


மாணிக்கத்தேரில் மரகதக்கலசம் மின்னுவதென்ன...


தோற்றுப்போய்விட்டோம் என்ற கவலையே இல்லாமல் தேரில் கிளம்பும் அத்வானி உற்சாகமாகப் பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. மரகதக்கலசம் என்ற வரி வரும்போதெல்லாம் பழைய துணியால் மறைக்கப்பட்ட ஒன்றைக் காட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட பாடல் காட்சியாதலால் பிரதமர் என்று அந்த இடத்தில் எழுதி வைத்திருந்தார்கள். கிழிசலுக்கிடையில் அது தெரியத்தான் செய்கிறது. தேரின் பாதையில் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்கா, அருண்சோரி ஆகியோரின் வீடுகள் வரும்போது அத்வானி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் காட்சி தத்ரூபமாகப் படமாகியுள்ளது.


**************


ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...


முகேஷ் அம்பானி தலைமையில் முதலாளிகள் கூட்டம் குத்தாட்டம் போடுகிறது. அமர்சிங் இல்லாததால் ஒரு மூலையில் அனில் அம்பானி தனியாக ஆடிக்கொண்டிருக்கிறார். அமெரிக்க மெட்டுக்கு ஆடுவதில் இவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிதான். என்னடா இவங்க ஆடலையேன்னு பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் திரும்பினால், ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வேலையில் இருப்பது தெரிகிறது. பாட்டுக்கான மெட்டை அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களின் அசைவிலிருந்து தெரிகிறது.


**************


மாட்டுக்கார வேலா... உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா...


இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் இந்தப்பாடலைப் பாடுகிறார்கள். பொதுத்துறையை மாடாக உருவகப்படுத்தி கூறுகிறார்கள். பாடலுக்கு நடுவில் காங்கிரஸ்காரர்கள் மாட்டைக்கவருவதற்காக வருவதும், பாத்தியா உன்னால திருட முடியலை... நாங்க வந்திருந்தா இந்நேரம் திருடியிருப்போம் என்று பாஜக சொல்வதும் படமாக்கப்பட்டுள்ளது. கூடவே வரும் திமுககாரர்கள் எங்க ஏரியாவுக்குள்ள மட்டும் போயிராதீங்கன்னு கமுக்கமா சொல்றது பாடல் வரிகளை மீறி நமது காதுகளில் விழுகிறது.


**************


ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...


நாட்டு நிகழ்வுகளைப் பார்த்து தேசபக்த அக்கறையுடன் ஒரு தாய் இந்தப்பாடலைப் பாடுவதாக படமாகியுள்ளது. நியாயத்துக்குப் போராடும் மாணவர்கள், தொழிலாளர்கள் தடியடி வாங்கி சுருண்டு விழும் காட்சிகளின்போது அந்தத்தாய் விடும் கண்ணீர் பார்ப்பவர்களின் கண்களிலும் நீரை வரச்செய்கிறது. இப்போதைய நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக சில வரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நியாயத்திற்குப் போராடியும் உனக்கேன் இந்த குண்டாந்தடியடி என்ற அந்த வரிகளுக்குப்பிறகு, மீண்டும் ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ என்று துவங்கும்போது தியேட்டரே கண்ணீரில் மிதக்கிறது.


**************


தனிமையிலே இனிமை காண முடியுமா...


இப்பாடலை டி.ஆர்.பாலு பாடுகிறார். பதவியுடனேயே இருந்துவிட்ட அவரால் அதைப்பிரிந்து வாடும் சோகத்தை அப்படியே முகபாவனைகளில் கொண்டு வந்து விட முடிகிறது. வெளியிலிருந்து ஆதரவுன்னு என்ன வெச்சு சொல்ல வெச்சாங்களே... அப்பவே முழிச்சுகிடலை... கட்சி கிடையாது... நான்தான் வெளியிலருந்து ஆதரவு தரப்போறேன்னு தெரியாம கடுகடுன்னு முகத்தை வெச்சுகிட்டு டிவிக்கு பேட்டி கொடுத்தேனே... என்று பாடலுக்கிடையில் அவர் சோக வசனம் பேசுவதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகள் கைதட்டலை அள்ளுகின்றன.


**************


கல்வியா.. செல்வமா... வீரமா...


வீராவேசத்துடன் பாடல் துவங்கினாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டேயிருக்கிறது. பாடலின் நிறைவுப்பகுதி அந்த நெருடல் உண்மை என்று நிரூபிக்கிறது. காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் வந்துள்ள பாடலின் கடைசி வரிகள் இந்த மூன்றை விட மின்வெட்டே பெரியது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிய வைக்கின்றன. அந்த வரிகளின்போது ஆர்க்காட்டார் கம்பீரமாக நடந்து வரும் காட்சி அற்புதம். பாடலின் நடுவில் பெண்கள் மின்கம்பத்தைச் சுற்றிவந்து வணங்குவது போன்ற காட்சி நன்கு படமாக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தாங்கல சாமிகளா:))))

    ReplyDelete
  2. தனிமையிலே இனிமை காண முடியுமா... - by TR Baalu - thats the best!! :)

    ReplyDelete