Friday, July 3, 2009
எப்படித்தயாராகிறது பட்ஜெட்?
பட்ஜெட் உரைக்காக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது கேமராக்களின் கண்கள் அவர் கையில் உள்ள பெட்டி மீதுதான் பதிந்திருக்கும். அந்தப் பெட்டிக்குள் பட்ஜெட் உரை போவதற்குள் ஏழு மலை மற்றும் ஏழு கடல்களைத் தாண்டுகிறது. சத்தமே இல்லாமல் திட்டக்குழுதான்(ஆமாங்க... ஆமாம்... எல்லாத்தையும் தனியார் மயமாக்கனும்னு துடிக்குற அந்த அலுவாலியாதான் இதுக்கு பொறுப்பு!!) துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும். அரசின் பல்வேறு துறைகளிடம் திட்டக்குழுதான் பழைய மற்றும் புதிய திட்டங்களைப் பற்றிப் பேசி தகவல்களை நிதித்துறையிடம் கொண்டு சேர்க்கிறது.
அதேபோல் நிதித்துறையின் ஒரு பிரிவான பொருளாதார விவகாரத்துறையும் திட்டக்கமிஷனைப் போலவே திட்டங்களை அடையாளம் காணும் வேலையைச் செய்கிறது. முதலாளிகள், தொழிலாளிகளை அழைத்து பட்ஜெட்டில் என்ன வேண்டும் என்று இத்துறையினர் கேட்பார்கள். சில கூட்டங்களில் நிதியமைச்சரே கலந்து கொள்வார். தொழிலாளிகள் கேட்டது, கேட்டதோடு நின்றுவிடும். கண்துடைப்பு சமாச்சாரம்தான் என்றாலும் கூட்டங்கள் மட்டும் தவறாமல் நடக்கின்றன.
நிதியமைச்சகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகிய இரண்டும் தனியாக விபரங்களைத் தயாரிக்கின்றன. கையைக் கடிக்கும் பட்ஜெட்டுகள்தானே நமது ஆட்சியாளர்களின் சாதனை. திட்டங்களை அறிவித்துவிட்டு கூடவே இவ்வளவு பற்றாக்குறை என்று கூறி திட்டத்திற்கு எதிரில் கேள்விக்குறியைப் போடும் வேலை பட்ஜெட்டில் நடைபெறும்.
திட்டக்குழு, பொருளாதார விவகாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகியவை அளிக்கும் விபரங்களைக் கொண்டுதான் பட்ஜெட் தயாராகிறது. பட்ஜெட் உரையைக் கணினியில் அடிப்பவர், பிரிண்ட் எடுப்பவர் எல்லாரும் பெட்டி, படுக்கைகளோடு வந்துவிட வேண்டும். பட்ஜெட் வெளியாகும் வரை அவர்கள் வீட்டுக்குப் போகக்கூடாது.
பட்ஜெட் ரகசிய ஆவணம் என்பது இந்தியக் குடிமகன்களுக்குத்தான். ஆட்சியாளர்கள் என்ற பொம்மைகளை ஆட்டுவிக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் கைகளில் முன்கூட்டியே இதன் விபரங்கள் தவழ்கின்றன என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment