பொருளாதார நெருக்கடியால் உலகின் பெரிய, பெரிய நிறுவனங்கள் எல்லாம் முழி பிதுங்கிப் போய்க்கிடக்கின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இருந்ததையும் இழந்து நிற்கும் அவலம். 1930களில் ஏற்பட்ட நெருக்கடியை விட பல மடங்கு அதிகமான சிக்கல் என்று வல்லுநர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பெரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்(இதில் பலர் அந்தந்த நிறுவனங்களின் முதலாளிகள்) எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கியுள்ளார்கள். ஹியூலெட் பாக்கர்டு என்ற கணினி நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியது. கேட்டால் செலவு தாங்கவில்லை என்றார்கள். ஆனால் அந்நிறுவனத்தின் தலைவரான ராண்டி மோட், ஒரு ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேல் தனது நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 2008ல்(ஆமாம்.. நெருக்கடிக்குள்ளான அதே ஆண்டில்தான்) எடுத்துக் கொண்டுள்ளார்.
ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவரோ போனசாக மட்டும் 10 கோடி ரூபாயை 2008 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். திணறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க நிறுவனமான ஏடி அண்டு டியின் தலைவர் ஜான் டி ஸ்டான்கீ, 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம், இழப்பீடு மற்றும் போனஸ் என்று பலவகைகளில் பணம் பெற்றுள்ளார்.
உலகிலேயே அதிகமான சம்பளத்தைப் பெறும் இந்த நபர்களின் பட்டியலில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனத்தின் உயர் அதிகாரியான லிண்டா ஆர் கூடனும் சுமார் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். எந்தக்கையால் ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் உத்தரவுகளில் கையெழுத்து இடுகிறார்களோ, அதே கையால் கூசாமல் நான்கு, ஐந்து மடங்கு அதிகமான சம்பளத்தை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டியுள்ளார்கள் இந்த அதிகாரிகள்.
No comments:
Post a Comment