Tuesday, July 14, 2009

கர்ப்பிணிகளையும் விட்டுவைக்கவில்லை!உரும்கி எங்கே இருக்கிறது?

உரும்கி என்பது சின்ஜியாங் உய்குர் சுயாட்சிப் பகுதியின் தலைநகராகும். இந்த சுயாட்சிப்பகுதி சீனாவின் வட மேற்கில் அமைந்துள்ளது.

அங்கு என்ன நடந்தது?

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது. ஜூலை 5, 2009 அன்று மாலையில் அது துவங்கியது. கத்திகள் மற்றும் கற்களோடு கிளம்பிய வன்முறையாளர்கள் பல குழுக்களாக இருந்தனர். உரும்கியின் சந்து பொந்துகளில் எல்லாம் வலம்வந்த அவர்கள் கண்டவர்களையெல்லாம் தாக்கினார்கள். கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை உடைத்து நொறுக்கி அவற்றையும் கொளுத்தினர். சின்ஜியாங் உய்குர் சுயாட்சிப் பகுதியில் சுமார் 220 இடங்களில் இந்த வன்முறை செயல்கள் நிகழ்த்தப்பட்டன.

வன்முறையின் வடிவம்...?

மிகவும் கோரமாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்களையும், இளம் பெண்களையும் கூட வன்முறையாளர்கள் விட்டு வைக்கவில்லை. 184 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 260 வாகனங்கள் மற்றும் 209 கடைகள் பலத்த தேசமடைந்தன.

அப்பகுதி நிர்வாகம் என்ன செய்தது?

அமைதியை திரும்ப கொண்டு வருவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வன்முறையாளர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது. காயமடைந்தவர்களை வன்முறை நிகழும் இடத்திலிருந்து மீட்டு வந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சை தரப்பட்டது. உரும்கியில் வன்முறை வெடித்தவுடன் அங்கு என்ன நடக்கிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்னிய ஊடகங்களை அங்கு அனுப்ப சீன அரசு வசதி செய்து தந்தது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் வன்முறைக்கு பிறகுள்ள நிலைமையை சரிசெய்வதற்கான வேலைகளில் நிர்வாகம் இறங்கியுள்ளது.

இத்தகைய வன்முறை நிகழ்ந்ததன் பின்னணி என்ன..?

ஜூன் 26 அன்று உள்ளுர் தொழிலாளர்களுக்கும், இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இதற்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. ஆனால் கிழக்கு துர்க்கி°தானிலிருந்து இயங்கி வரும் உலக உய்குர் காங்கிர° என்ற அமைப்பு இனவெறியைத் தூண்டிவிடும் வேலையில் இறங்கியது. இதற்கு பிரிவினைவாதம் பேசிவரும் ரெபியா கதீர் தலைவராக உள்ளார். இணையதளங்களும் மற்றும் வேறு சில தகவல் தொடர்பு ஏற்பாடுகள் மூலமாகவும் தைரியமான நடவடிக்கைகளிலும், ஏதாவது பெரிய வேலையிலும் இறங்குமாறு அந்த அமைப்பு வெறியேற்றியது.

வன்முறையை எப்படித் துவங்கினார்கள்?

ஜூலை 5 அன்று ஏதாவது பெரிய நடவடிக்கை இருக்கும் என்று ரெபியா தொடர்ந்து கூறிவந்தார். என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். உள்நாட்டில் உள்ள சிலரும் அவர்களோடு இணைந்து கொண்டனர். சவுத் கேட் மற்றும் ரென்மின் சதுக்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு இணைய தளங்கள் மூலமாக அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளின் தூண்டுதலோடு, உள்நாட்டில் உள்ள பிரிவினைவாதிகள் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது என்பது தெரிகிறது.

தாங்கள் வன்முறையைக் கையாள்வதில்லை என்று உலக உய்குர் காங்கிர° கூறுகிறதே?

இது அப்பட்டமான பொய். உள்நாட்டில் மட்டுமல்ல, கலவரத்தின் இரண்டாவது நாளில் நெதர்லாந்தில் உள்ள சீனத் தூதரகம் மீது கிழக்கு துர்கி°தான்காரர்கள் தாக்குதல் நடத்தினர். ஜெர்மனி நகரமான மூனிச்சில் உள்ள சீனத்தூதரகமும் தாக்கப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக இந்த கிழக்கு துர்கி°தான் பிரிவினைவாதிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

நியாயமான விசாரணை இருக்காது என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றனவே?

இந்தக் கொடுரமான கொலைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் இந்த மனித உரிமை அமைப்புகள் ஒன்றும் செய்யவில்லை. சின்ஜியாங் பகுதியிலுள்ள அனைத்து மக்களின் நலன்களைப் பாதுகாக்கவே சீனக்காவல்துறை வன்முறையாளர்களை கைது செய்துள்ளது. அதுவும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை உலகிலுள்ள எந்த அரசும் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது. சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் சீனாவில் அனைத்து குற்றவாளிகளுக்கும் சட்டப்படி தண்டனை அளிக்கப்படும்.

பல்வேறு இனங்கள் பற்றிய தனது கொள்கையை சீனா மாற்றிக் கொள்ளுமா?

வரலாற்று ரீதியாகவே சீனாவில் உள்ள அனைத்து இனங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ்கின்றன. நாட்டுப்பிரிவினை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து சீனா தெளிவான நிலையை எடுக்கிறது. பழங்குடி சிறுபான்மையினர் வாழும் பகுதிக்கு சுயாட்சி வழங்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது என்ற கொள்கையை சீன அரசு கடைப்பிடிக்கிறது. இதனால் நிலையான தன்மை கிடைக்கிறது.

சின்ஜியாங் பகுதி வளர்ச்சி பற்றி...?

பல்வேறு அம்சங்களில் இந்தப்பகுதி அபாரமாக வளர்ந்து வருகிறது. மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பல்வேறு இனங்களைச் சேர்ந்த 2 கோடி மக்கள் இப்பகுதியில் உள்ளனர். அவர்கள் மத்தியில் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் நிலவுகிறது. சுயாட்சி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்படியானால் தற்போதுள்ள பிரச்சனையை அலட்சியப்படுத்தலாமா?

கூடாது. உரும்கி பிரச்சனை நம்முடைய உறுதியையும் மீறி நடந்துள்ளது. அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். இதைத்தான் உரும்கி வன்முறைச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

(புதுடில்லியில் உள்ள சீனத்தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் சோ யோங்ஹோங்கின் தி இந்து(ஜூலை 13) கட்டுரை கேள்வி-பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது)

1 comment:

  1. Then why one side citizens effected against the governments

    ReplyDelete