Sunday, July 19, 2009

சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம்!


பெர்லின் சுவர் தகர்ந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. தகர்க்கப்படுவதற்கு முன்பாக இருந்த கிழக்கு ஜெர்மனி என்ற நாடு சட்டவிரோதமானது என்றெல்லாம் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அடிமைத்தளை முறிந்தது என்று அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் உரக்கக் கத்தின. அமெரிக்க மற்றும் மேற்கு ஜெர்மனி ஊடகங்களின் தவறான பிரச்சாரங்களால் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த மக்களில் கணிசமான பகுதியினர் கம்யூனிச முழக்கங்களை எழுப்பினர். இது பெர்லின் சுவரைத் தகர்த்ததோடு, 1990 அக்டோபரில் இரு ஜெர்மனிகளும் இணைந்து ஒன்றுபட்ட நாடாக உருவாவதற்கு வழி வகுத்தது.


அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்று, கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை மிகவும் மேம்பட்டதாக இருந்தது என்ற கருத்தை மக்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. ஜெர்மனியின் கிழக்குப்பகுதியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் முன்னாள் கிழக்கு ஜெர்மனிக்கு ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக 49 சதவீதம் பேர் மிகவும் தெளிவான பதிலுடன் இருந்துள்ளார்கள். சில பிரச்சனைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தது உண்மைதான். ஆனால் வாழ்க்கை அங்கு நன்றாக இருந்தது என்கிறார்கள் அவர்கள். மேலும், நல்ல அம்சங்கள்தான் கிழக்கு ஜெர்மனியில் அதிகமாக இருந்தது. தற்போதுள்ள ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ள வாழ்க்கையை விட நன்றாகவும், மகிழ்ச்சியானதாகவும் அப்போது இருந்தது என்கிறார்கள் கணிசமான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள்.


இந்தக் கருத்துக்கணிப்பு மீது ஜெர்மனியின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிளாஸ் ஸ்°ரோடர் என்ற பிரபல வலதுசாரி அரசியல் ஆய்வாளர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். பிரதேசப் பற்றே இத்தகைய கருத்துக்களுக்கு காரணம் என்று அந்தப் பகுதி மக்களின் கருத்துகளை நிராகரிக்கிறார் ஸ்ரோடர். தங்கள் குடும்பத்தினரிடம் பேசுவதன் மூலமே இளம் பிராயத்தினர் கிழக்கு ஜெர்மனி பற்றி தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கிழக்கு ஜெர்மனியின் இளைஞர்களில் பாதிப்பேர் கூட முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்று கூற மாட்டேனென்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார் அவர்.


இவரது இந்த விமர்சனம் கிழக்குப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் நாலாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு கடிதங்கள் அனுப்பினர். பாடப்புத்தகங்கள் பதவியில் இருக்கும் வலதுசாரிகளின் ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை. மக்களின் அனுபவத்தை விடவா வேறு பாடம் இருக்கப்போகிறது என்று குடும்ப உரையாடல்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நியாயப்படுத்துகிறார்கள் அவர்கள். முன்னாள் கிழக்கு ஜெர்மனி நாட்டை சட்டவிரோதமானது என்று கூறுவதைக் கண்டிக்கிறார் பிர்கர் என்பவர். கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்கிறார்கள். ஆனால் இப்போதுதான் எங்களைப் பற்றி உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமான விபரங்களைச் சேகரித்து வருகிறார்கள் என்கிறார்.இப்போதுள்ள நிலையைப்பார்த்தால், பெர்லின் சுவரை உடைத்தபோது நாங்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவே உணர்கிறோம் என்கிறார் ஸ்ரோடருக்கு கண்டனக் கடிதம் எழுதியவர்களில் ஒருவர். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் வாழ்ந்த அனுபவம் கிடைத்ததற்காக 38 வயதான ஒருவர் கடவுளுக்கு நன்றி சொல்கிறார். ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானபிறகுதான் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சம் கொண்டவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் வீடில்லாமல் உழன்றவர்கள் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. இதெல்லாம் எனது கிழக்கு ஜெர்மனி அனுபவத்தில் பார்க்கவில்லை என்கிறார் அவர். தற்போதுள்ள ஜெர்மனியில் மக்கள் அடிமைகளாகவும், மூலதன சர்வாதிகாரம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்றும் பலர் தங்கள் கடிதங்களில் குறிப்பிடுகிறார்கள்.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதி வந்த கிழக்கு ஜெர்மனி மக்களின் வாழ்க்கையை சோகம்தான் கவ்விப்பிடித்துள்ளது. தவறான பிரச்சாரங்கள் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பிவிட்டன என்றுதான் பெரும்பாலான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள் கருதுகிறார்கள். அவர்கள் அதிருப்தியுற்றிருக்கிறார்கள் என்பதுதான் கருத்துக்கணிப்புகளில் தெரிய வருகிறது. "தங்கள் வரலாறு மோசமானதல்ல என்பதை இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் கூட அதன் வாழ்க்கைத்தரம் குறித்து பேசத் துவங்கியுள்ளார்கள்" என்கிறார் வரலாற்றாய்வாளர் ஸ்டீபன் ஓலே. ஏழைகளுக்கு வாழ்வதற்கான சுதந்திரத்தைத் தவிர மற்ற அனைத்து சுதந்திரங்களும் ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ளன என்கிறார்கள் கிழக்கு ஜெர்மனியினர். அக்காலகட்டத்து அரசின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வுகள் தற்போது ஜெர்மனியில் அதிகமாகி வருகின்றன.

No comments:

Post a Comment