Tuesday, July 28, 2009

திவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்!



அடமானக் கடனில் துவங்கி சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை கொண்டு சென்றுள்ள அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிறைவில் சுமார் 252 வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மஞ்சக்கடுதாசி கொடுத்து விடும் என்ற நிலையில் இருந்தன. திவாலாகி வரும் வங்கிகளை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசு நியமித்திருக்கும் மத்திய காப்பீட்டுக்கழகமே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. தற்போது அதே கழகத்தின் மதிப்பீட்டின்படி திவாலாகிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துவிட்டது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.


வங்கிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உருவானது என்று பலர் கருதினாலும் அதற்கு முன்பே நெருக்கடி துவங்கிவிட்டது. ஜனவரி 2008லிருந்து இன்றுவரை திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 89யைத் தொட்டுவிட்டது. நடப்பாண்டில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்பது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன. நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படும் 2008ஆம் ஆண்டில் கூட 25 வங்கிகள் மட்டும்தான் திவாலாகின. ஆனால் நடப்பாண்டின் முதல் ஏழு மாதத்திலேயே 64 வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முற்றிவிட்டதையே இது காட்டுகிறது. இதை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று வலதுசாரிப் பொருளாதார ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர்.


ஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் தங்கள் வங்கி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் திவாலான வங்கிகளின் வரவு-செலவு அறிக்கைகள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், மற்றொரு வங்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால் திவால் நிலை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் சொத்து மதிப்பைக் காட்டி எந்த நிலையிலும் இந்த சொத்துக்களை விற்றாலே போதும். வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிவிடலாம் என்ற வாதத்தையே வங்கி நிர்வாகிகள் வைத்து வந்தனர். ஆனால் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி நிர்வாகங்களை உலுக்கி எடுத்துவிட்டது. திவாலான வங்கிகளின் மொத்த சொத்து மதிப்புக்கும், வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி பெரிதும் குறைந்துவிட்டது.


சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களின் சேமிப்புப்பணம் திருப்பித்தரப்படும் என்ற நிலையில் பல வங்கிகள். மேலும் பல வங்கிகளோ அதை விட மோசமான நிலைக்கு சென்று விட்டன. அத்தனை சொத்துக்களையும் விற்றால் கூட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பது அந்த வங்கிகளின் நிலை. வங்கிகளின் சரிவு துவங்கியபோது பெரிய வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. சிறிய வங்கிகள் தப்பித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரிய வங்கிகள் கூட மீண்டுவிடுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. மீளவே முடியாத நிலைக்குப்போய்தான் சிறிய வங்கிகள் திவால் அறிவிப்பையே வெளியிடுகின்றன. பெரிய வங்கிகள் அரசின் மீட்புத்திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவிக்கின்றன.

ஏற்கெனவே வேலையின்னை அதிகரித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம் அந்த நிலையை மேலும் மோசமடையவே செய்யும். சிட்டி குழுமம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிய லாபத்தை சம்பாதித்துள்ளன. இதுவும் அவர்களின் மொத்த நஷ்டத்தை ஈடுகட்ட எந்தவிதத்திலும் உதவாது. மொத்த நஷ்டம் என்பது அமெரிக்க அரசு வாயிலாக அந்நாட்டு மக்களின் தலையில்தான் சுமத்தப்பட உள்ளது. ஆனால் சிறிய, அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள வங்கிகள் எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்த நிலைக்கு மாறாக, இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 90 சதவீத வங்கிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்தான் காரணம் என்பதை அவர் கூறாமல் விட்டுவிட்டார். இதுதான் காரணம் என்று கூறிக்கொண்டே, அந்தக்காரணத்தைக் குழியில் போட்டு மூடும் வகையில் தனியார் மயம் பற்றிய சிந்தனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

No comments:

Post a Comment