Wednesday, July 1, 2009

நான் கம்யூனிஸ்ட் ஆகிட்டேன்...



எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கிய அமெரிக்க நிதி நிறுவனங்களின் மோசடிகளால் ஏற்பட்ட பாதிப்பு சர்வதேசப் பொருளாதாரத்தை உலுக்கி எடுத்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் ஜப்பானிலும் அதன் பாதிப்புகள் கடுமையாக உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வருகின்றனர். சில மாதங்களாகவே ஜப்பானின் பல நகரங்களில் தொழிலாளர்களின் பேரணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானின் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பு நடந்த பேரணியை, அந்த நாட்டில் நடந்த மிகப்பெரிய பேரணிகளின் ஒன்று என்று வர்ணிக்கின்றனர்.


நெருக்கடியால் வேலையை இழந்தவர்கள் மட்டும் அதில் பங்கேற்கவில்லை. அவர்களோடு, வேலையை இழந்துவிடுவோம் என்று நினைப்பவர்களும், அவ்வளவு ஆபத்து இல்லை என்று கருதுபவர்களும் பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து நின்றனர். அவர்களின் கரங்களில் செங்கொடிகள் தவழ்ந்தன. பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டபோது ஒருவர், தற்காலிகத் தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரவே இந்தப் பேரணியை நாங்கள் நடத்துகிறோம். இத்தகைய பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றார். மற்றொருவரிடம் கேட்டபோது, நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தருகிறேன். தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு அந்தக்கட்சிதான் முன்னுரிமை தருகிறது என்று கூறியுள்ளார்.


நான்கு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஆயிரம் பேர் புதிதாக உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒப்பிடும்போது ஆளும் லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. ஆனால் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவரும், ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினருமான அகிரா கசாய், தற்போதுள்ள முதலாளித்துவ முறை சரிதானா என்று பல ஜப்பானியர்கள் யோசிக்கிறார்கள். வாழ்க்கை நிலை சரிந்து கொண்டிருக்கிறது. பணக்காரர் மற்றும் ஏழைக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது என்கிறது.


தங்கள் முதலாளிகளுக்கு எதிராக ஜப்பானிய ஏழை மீனவர்கள் கிளர்ந்தெழுந்த கதை 1929 ஆம் ஆண்டில் நாவலாகியது. கனிகோசன் என்று பெயரிடப்பட்ட அந்த நாவல் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால் சுனாமியைப் போலத் தாக்கியுள்ள பொருளாதார நெருக்கடி, அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் ஆகியவை இந்த நாவலையும் பிரபலப்படுத்திவிட்டது. அதோடு, தேடுவற்காகவே உள்ள இணையதளங்களில் மார்க்ஸ், மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வார்த்தைகள் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. இணைய தளங்கள் மூலமாக ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலர் தொடர்பு கொண்டனர்.


இணையதளம் மூலமாகக் கம்யூனிசம் பற்றித் தெரிந்து கொண்ட ஒரு பெண் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தனது மேலதிகாரிகளுக்கு தெரிந்தால் வேலை போய்விடும் என்பதால் பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். முதலாளிகளும், முதலீடுகளுமே தற்போது எங்களைக் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது. கம்யூனிச சமூகத்தில் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தைப்பற்றி நாம் யோசிக்க முடியும். பொருளாதாரத்திலும் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று கூறுகிறார். நான் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன் என்று பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.


கார்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எந்திரங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் அதிகமாக ஈடுபட்டிருந்து ஜப்பானியப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கடிக்கு முன்பு நடந்ததாகும். அதிலேயே 44 லட்சம் வாக்குகளை(7.5 சதவீதம்) கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. நடப்பாண்டின் இறுதியில் அடுத்த தேர்தல் நடக்கப்போகிறது. எங்கள் இறுதி இலக்கு சோசலிச, கம்யூனிச சமூகம்தான். ஆனால் ஒவ்வொரு படியாக முன்னேறுவதுதான் எங்கள் அணுகுமுறை. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதே முதல் கட்டம் என்கிறார் அகிரா கசாய்.

குறிப்பு : மேலே உள்ள ஓவியம் ஒரு சீன போஸ்டர்.

2 comments:

  1. Dear ganesh
    Japan is traditionally a satellite of US Imperialism. If people there have started to join the communist party, it shows the winds are changing there too. It is an interesting development.
    Thank you for introducing our magazine in your blogspot.
    K. Raju Editor Puthiya Aasiriyan

    ReplyDelete
  2. நான் கம்யூனிஸ்ட் ஆகிட்டேன் கட்டுரைச் செய்்ி மிக அருமை.
    சற்று கால தாம்்மானாலும் வெல்லப் போவ்ு கம்யூனிஸமே.ஆனால்
    ்ூண்டி விடுவ்்்ற்கு திரிகள் ்ேவை.அவைகள் எண்ணிக்கையில்
    இன்னும் பெருகவேண்டும்.உலக நடப்பு்்களை இருட்டடிப்பு
    செய்கின்ற ஊடகங்களை நாம் மீற வேண்டியுள்ள்ு.கணேசன்.குமரி.

    ReplyDelete