Wednesday, July 22, 2009

விடுதலை கிடைத்து 62 ஆண்டுகளாகி விட்டதாம்...?!





சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் உள்ள நெய்யமலை மற்றும் மன்னூர் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். விடுதலை கிடைத்து 62 ஆண்டுகள் ஆகியும் கவனிக்கப்படாமல் இருக்கிறோம் என்பது அந்த மக்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.


நெய்யமலை : நெய்யமலை அதை சுற்றியுள்ள அக்கரப்பட்டி, ஆலங்கடை ஆகிய மலை கிராமங்களில் சுமார் 1,300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். 653 பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். சேலத்திலிருந்து கருமந்துரை செல்லும் பிரதான தார் சாலையில் அக்கரப்பட்டி வரை செல்லலாம். அடர்ந்த காடுகள் வழியே 6 கிலோ மீட்டர் வரை சென்றால் நெய்யமலை அடிவாரம் வரும். அதன் பின் சுமார் 8 கிலோ மீட்டர் மூன்று மலைகளை கடந்து மலைப்பாதை வழியாக சென்றால் நெய்யமலை கிராமம் வரும்.


இக்கிராமத்திற்கு செல்ல மலைவாழ் மக்களே உருவாக்கிய மலைப்பாதைதான் உள்ளது. மழைக்காலங்களில் விளையும் உணவு தானியமும், ரேஷனில் கிடைக்க கூடிய பொருட்களும் தான் இம்மக்களுக்கு உணவாகும். ஒரு பாழடைந்த கிணற்றில் தண்ணீரை தேக்கி வைத்து. துணியால் வடிகட்டி குடிக்கும் அவல நிலையில் உள்ளனர். மின்சாரம் என்பதை இதுவரை அந்த மக்கள் பார்த்ததே இல்லை. இப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது பெண்களுக்கு பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் 48 கி.மீ. கடந்து ஆத்தூர் செல்ல வேண்டும் அல்லது 90 கி.மீ. கடந்து சேலம் செல்ல வேண்டும். இதனால் உயிரிழப்பு என்பது சர்வ சாதாரணமாக காக்கை, குருவி இறப்பதைபோல் நடந்து கொண்டிருக்கின்றது.


கல்வி நிலையம் என்ற பெயரில் 8வது வரையில் உள்ளது. ஆசிரியர், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வருவார். மற்ற நாட்களில் மாணவர்களே பாடம் நடத்தும் அவல நிலையும் உள்ளது. மேற்படிப்பிற்கு பல மைல் தூரம், அதுவும் மலையில் ஏறி இறங்கி செல்ல வேண்டியிருப்பதால் மேற்படிப்பிற்கு செல்வது இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்கவும் கூட மலையை விட்டு கீழே இறங்கி வரும் மோசமான நிலைமையில் இம்மக்கள் உள்ளனர்.


மன்னூர் : இம்மலையில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர். இம்மலைகிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மண்பாதை கூட கிடையாது. பாறைகளின் சந்துகளிலும், புதர்கள் நிறைந்த வனப்பகுதியிலும் செல்ல வேண்டும். இடப்பட்டி பிரதான சாலையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் வரை சமமான காட்டுப்பாதையில் சென்று சுமார் 12 கிலோமீட்டர் மலை ஏறிச் சென்றால் மன்னூர் கிராமம்.

5வது வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. வாரம் ஒரு நாள் மட்டுமே ஆசிரியர் வருவார். மீத நாட்களில் 5 வது படிக்கும் மாணவர்கள் தான் ஆசிரியர்கள். குடிநீருக்கு 3 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றால் குடிநீர் தேக்க குட்டை வரும். அதுதான் மனிதனுக்கும், மிருகத்திற்கும், குடிநீர். ஒரே வித்தியாசம், மனிதன் துணியால் வடிகட்டி குடிக்கிறான். மிருகம் அப்படியே குடிக்கின்றது.


இப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் பிரசவ காலங்களிலும் மூங்கிலில் தொட்டில் கட்டி இரண்டு பேர் தூக்கி கொண்டு கீழே வரவேண்டும். இப்படி வரும் பொழுது பலர் பாதியிலேயே இறந்து போய் உள்ளனர். பெண்களுக்கு பாதி வழியில் பிரசவம் நடந்துள்ளது. சின்ன குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் மலையை விட்டு கீழே பல மைல்கள் கடந்து தங்கி படிக்கின்றனர். மாதம் ஒரு முறை மட்டும் மலைக்கு செல்லும் கொடுமைகள். ரேஷன் பொருட்கள் வாங்கி வர சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வர வேண்டியுள்ளது.


பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் பணிகள் நடக்காததால் ஜூலை 19 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் நடந்த இந்தப்போராட்டத்தால் நான்கு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


போராட்டக் களத்திலேயே வெற்றி

காவல் துறையினர் பலமாக குவிக்கப்பட்ட மக்களை மிரட்டி பார்த்தனர். 62 ஆண்டுகளாக கொடுமைகளை அனுபவித்த மக்களின் கோபத்திற்கு முன் காவல்துறையினரின் மிரட்டல் பலிக்கவில்லை. அதன் பின் ஆத்தூர் தாசில்தாரும் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் எழுதி அனைத்து துறை அதிகாரிகளும் கையெழுத்திட்டு இரண்டு மலைக்கும் உடனடியாக ரேஷன் கடை அமைக்க வழி வகை செய்தனர்.


மீதம் உள்ள பிரச்சனைகள் மின்சாரத்தை உடனடியாக கொண்டு வருவது வனத்துறை அதிகாரிகளுடன் பேசி சாலை வசதிகள் ஏற்படுத்துவது, குடிநிர் பிரச்சனை தீர்வு காண்பது ஆசிரியர்கள் எல்லா நாட்களும் இருக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செயல்படுத்த அனைத்து அதிகாரிகளும், மக்களும், வாலிபர் சங்கத் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 23 அன்று நடத்திட ஒப்புதல் எழுதி கொடுத்தனர்.

எம்.குணசேகரன்

நன்றி : தீக்கதிர்

3 comments:

  1. ganesh said...

    என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...]]

    நண்பர் கணேஷ்

    [[
    எந்த நூற்றாண்டுப்பா ...]]

    இப்படி நான் போட்டது, இப்பவெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லவில்லை

    இன்னமும் இப்படி இருக்காங்களேன்னு தான்.

    ReplyDelete
  2. [[விடுதலை கிடைத்து 62 ஆண்டுகள் ஆகியும் கவனிக்கப்படாமல் இருக்கிறோம் என்பது அந்த மக்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. ]]


    பாவம் தான் அவங்க

    விடுதலை கிடைச்சிடுச்சின்னு நம்பிகிட்டு இருக்காங்ளே ...

    ReplyDelete
  3. Very sad that we still have such villages. I thought such villages existed only in Bihar.

    ReplyDelete