Saturday, December 10, 2011

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்”

தமிழக - கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் - பாஜக கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 7ந்தேதி கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கேரள - தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்துவிடக்கூடாது. இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் பயனுள்ள வகையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி, சில அரசியல் இயக்கங்களின் பிரதேச ஊழியர்களும் வன்முறைச் சக்திகளும் தவறான முறையில் செயல்பட்டு, நிலைமையை மோசமாக்குவது துரதிருஷ்டமாகும்.எல்லையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் தவறான போராட்ட முறைகளைக் கையாள்வதானது தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு எதிராக வன்முறைச் சக்திகள் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கான தண்ணீருக்கு நஷ்டம் ஏற்படுத்த குமுளியில் ஷட்டரைத் தகர்ப்பது என்ற வக்கிரமான போராட்டத்தையே இளைஞர் காங்கிரஸ்காரர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, மலையாளிகளின் வாகனங்களைத் தடுப்பது, அவர்களின் கடைகளை எரிப்பது, மலையாளத் தம்பதிகளைத் தாக்குவது முதலான - முற்றிலும் கண்டிக்கத்தக் கதும் எதிர்க்கத்தக்கதுமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நிகழ்ந்தன.

அடுத்த மாநிலத்தவரின் நடமாடும் சுதந்திரத்தையோ, இயல்பான வாழ்க்கை யையோ தடுக்கிற எந்த முயற்சியும் தாக்கு தலும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ நிகழ்வதைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைச் சக்திகளைத் தனிமைப்படுத்த அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்தி களும் களம் இறங்க வேண்டும். சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநி லங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர்க்கு அனைத்துவிதப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசு மட்டுமல்லாமல் கட்சி ஊழியர்களும் களமிறங்க வேண்டும்.

நெருக்கமான பக்கத்து மாநிலத்தவர்களாக வாழ்கிற கேரளத்தையும் தமிழ் நாட்டையும் சேர்ந்த மக்கள் இந்த இரு மாநிலங்களிலும் பணி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மாநில மக்களும் பரஸ்பரம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது உண்டு. இந்த வாழ்க்கை முறையைச் சீர்குலைக்க வரும் எதையும் இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அனுமதிக்கக்கூடாது.

“கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்” என்பதே முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் எழுப்புகிற பொது முழக்கம். விவேகமற்ற போராட்டமும் வன்முறைகளும் இந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்து வதற்கான முயற்சிக்குப் பலத்த அடியாகி விடும். இவற்றை அடக்கவும், அமைதி காக்கவும், தமிழர் - மலையாளி என்கிற பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

Sunday, December 4, 2011

தகர்ந்தது சங்ககிரி தீண்டாமைச்சுவர்!



சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்திற்கு வெற்றி


சேலம் மாவட்டம் சங்ககிரி சன்னியாசிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தீண்டாமைச்சுவர், அப் பகுதி அருந்ததிய மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களால் இடிக்கப்பட்டது.

சங்ககிரியிலிருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் இந்த சன்னியா சிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. சுமார் 450 அருந்ததிய மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஊராட்சி தலைவராக இருந்து வந்துள்ளனர். இம் முறை பொது ஊராட்சியாக மாற்றப்பட்டதால், மற்ற சமூகத்தினரின் ஆதரவுடன் மகேஸ்வரி என் பவர் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்குப் பிறகு அருந்ததிய மக்களுக்கு பல் வேறு தொல்லைகள் துவங்கின. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படுவதில்லை. இந்நிலையில் தான் இந்த மக்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து தங்கள் பகுதியை அடைவதற்காகப் பயன்படுத்தி வந்த தார்ச் சாலையின் குறுக்கே திடீ ரென்று சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. நவம்பர்29 ஆம் தேதி கட்டப்பட்ட இந்த சுவரின் கட்டுமானப்பணி யை ஊராட்சித்தலைவர் மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட பலர் மேற்பார்வை செய்ததாக அருந்ததிய மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் செய்தனர்.

இந்தத் தீண்டாமைச்சுவர் அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டங்களைத் துவக்கின. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் அ. சவுந்தரராசன், மாவட்டச் செயலாளர் ஆர். வெங்கடபதி உள்ளிட்ட தலைவர்கள் தீண்டாமைச் சுவரைப் பார் வையிட்டதோடு, மக்கள் நடத்திய போராட்டத்திலும் இணைந்து கொண்டனர். அதிகாரிகளைச் சந்தித்த அ.சவுந்தரராசன், தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுவர் இடிப்பு

உறுதியான போராட்டத்தால் டிசம்பர் 4 ஆம் தேதியன்று காலை சங்ககிரி தாசில்தார் தலைமையில் வந்த அரசு ஊழியர்கள் பொதுச் சாலையை ஆக்கிர மித்துக் கட்டப் பட்டிருந்த தீண்டாமைச் சுவரை இடித்து தரை மட்டமாக்கினர். மீண் டும் மக்கள் பயன்படுத்தும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டது.

போராடிய மக்களை நேரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.நர சிம்மன், செயலாளர் ஆர். குழந்தைவேல், உதவி செய லாளர் என்.பிரவீண்குமார் , மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tuesday, August 16, 2011

"பப பாப்பா... பாப்ப பாப்பா..."


தெய்வத் திருமகள்

வரும்போதே மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஹிலாரி கிளிண்டன்தான் படத்தின் நாயகி என்பதால் முதலில் அமெரிக்கத் திருமகள் என்றுதான் பெயர் சூட்டியிருந்தார்கள். எப்போதெல்லாம் குண்டுகள் இந்தியாவில் வெடிக்கின்றனவோ, அப்போதெல்லாம் ஹிலாரிகள் வருகிறார்கள் என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலிருந்து இவரைப் போன்றவர்கள் வரும்போதெல்லாம், பெரும் வரவேற்பு தரப்படும் என்பதை மனதில் வைத்துதான் தெய்வத்திருமகள் என்று படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒருபுறம், ஆயுத விற்பனையை கன ஜோராக தெய்வத்திருமகள் ஹிலாரி செய்து கொண்டிருக்கிறார். மறுபுறத்தில், அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு "பப பாப்பா... பாப்ப பாப்பா..." என்று மன்மோகன்சிங் பாடி வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார். நாட்டின் பிரதமர் யார் என்ற கேள்விக்கு "எனக்குத் தெரியாது.." என்று அவர் சொல்வது கலகலப்பூட்டுகிறது. படத்திற்கு சோனியா காந்தி இசையமைத்துள்ளார். ஒபாமா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் திக்விஜய்சிங் குழுவினரின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அக்குழுவில் முகத்தை எப்போதும் சீரியசாக வைத்துக் கொள்பவராக வரும் ராகுல் காந்தி அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை.

*********

அவன் - இவன்

இப்படத்தில் வரும் மு.க.ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இரு நாயகர்களுமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். நிதானத்தோடு வரும் ஸ்டாலின் உள்ளுக்குள் பதற்றமாக இருப்பதாகவும், எந்நேரமும் முறுக்கிக் கொண்டே இருந்தாலும் உதறலோடு வலம் வருபவராக அழகிரியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். காட்சிகள் தானாகவே நகரட்டும் என்று இயக்குநர் கருணாநிதி விட்டிருக்கிறார். முதல் பாதியில் கம்பீரமாக வளைய வந்த துணை நடிகர்கள் வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பொங்கலூர் பழனிச்சாமி போன்றவர்கள் இடைவேளைக்குப் பிறகு பெரும்பாலும் முகத்தை மூடியவாறே வருகிறார்கள். ஆர்க்காட்டார் வரும் கும்மிருட்டுக் காட்சிகளுக்கு தியேட்டர்களில் நல்ல வரவேற்பு.

************

காஞ்சனா முனி

இப்படத்தின் நாயகன் பாபா ராம்தேவ் வரும் துவக்கக்காட்சியே திகிலாகத்தான் உள்ளது. இரவு நேர யோகா நிகழ்ச்சி என்று அனுமதி வாங்கிக் கொண்டு "இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணிவரை" உண்ணாவிரதம் என்று அறிவித்து விடுகிறார். ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டு உண்ணாவிரதப் பந்தலுக்கு ராம்தேவ் வரும் காட்சியோடு படம் துவங்குகிறது. பத்தேகால் மணிக்கு பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வந்து எப்படியாவது அவரை "பீடா" சாப்பிட வைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு பீடா இருப்பதை கேமரா அற்புதமாகப் படமாக்கியிருக்கிறது.

அவர் மறுக்கவே ஒரு கடிதத்தைக் கையில் திணிக்கிறார்கள். 12 மணிக்கு தானே வந்து பீடாவைத் தரத்தயார் என்று மன்மோகன்சிங் அதில் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு, ம்...ஹூம்... என்று மறுக்கும் வகையில் தலையாட்டிய ராம்தேவ், "தூக்கம் வந்துவிடும். 11 மணிக்கெல்லாம் வந்தால்தான் ஆச்சு.." என்று ஆக்ரோஷமாக பதில் எழுதி ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார். பக்கத்தில் இருக்கும் தனது பி,.ஏ. பாலகிருஷ்ணாவிடம், அன்னாவுக்கு வந்ததவிட நமக்குக்கூட்டம் அதிகமா...? என்று அடிக்கடி கேட்டுக் கொள்கிறார். இப்படிப் பரபரப்பான காட்சிகளைக் கொண்ட படமாக இருந்தாலும், முடியும்போது ராம்தேவைக் காணவில்லை. நன்றி. வணக்கம் என்று போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

**************

ஆடுகளம்

திஹார் சிறையும், உச்சநீதிமன்றமும்தான் ஆடுகளங்களாக இருக்கின்றன. ராசா மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகிய இருவரும் நடிப்பில் பிச்சு உதறியுள்ளனர். சிறைக்குள் போய் மாதக்கணக்கில் ஆனாலும் கம்பீரமாக காட்சிகளில் தோன்றுகிறார்கள். சிறைக்குள்ளே இருவரும் டென்னிஸ் ஆடும் காட்சிகள் அபாரம். ஒரு முறை சர்வீஸ் போட்டுவிட்டு, "15-0" என்று நடுவர் தொழிலதிபர் பல்வா கூறும்போது, இல்லையில்லை... "70000-0" என்று போடுங்கள் என்கிறார் கல்மாடி. ஆமாம்... அடுத்த சர்வீசும் ஜெயிச்சா "176000-0னு" போடணும் என்கிறபோது அரங்கமே சிரிப்பொலியால் குலுங்குகிறது. உச்சநீதிமன்றத்தில் 2ஜி விவகாரத்துல பிரதமரையுமா உள்ளே போடணும் என்று கேள்விகேட்டுவிட்டு சிறைக்குத் திரும்பிய ராசா, யாத்தே... யாத்தே என்ற பாடலைப் பாடியவாறு ஆடும்போது பலத்த கைதட்டல்.

************
கற்பனை : கணேஷ்

Sunday, July 24, 2011

"தனியறை"யில் எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு!

ஒரிசாவில் தொடருகின்றன தீண்டாமைக் கொடுமைகள்

நலத்திட்டங்களை பரிசீலனை செய்யச் சென்ற இடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மட்டும் தனியறையில் அமரச் செய்து உணவளித்த கொடுமை ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் காஷிநாத் மல்லிக். தஸ்பல்லா என்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவராவார். நயாகர் என்ற இடத்தில் மாவட்டத்தின் நலத்திட்டங்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றிருக்கிறது. இவரைத் தவிர மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் ருத்ர மாதவ் ரே, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அக்கூட்டத்திற்காக வந்திருந்தனர். காலையில் கூட்டம் நடந்தது. மதிய உணவுக்காகக் கலைந்தபோது, காஷிநாத் மல்லிக் மட்டும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏன் என்று அவர் கேட்டபோது அந்த அறையில் இடம் இல்லை என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

மற்றவர்கள் தட்டில் சாப்பிட்ட நிலையில், இவருக்கு இலையில் சாப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி.யும், சட்டமன்ற உறுப்பினர்களும் கவுரமாக நடத்தப்பட்ட நிலையில் தான் மட்டும் மோசமாக நடத்தப்பட்டதற்கு மல்லிக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இத்தகைய சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னைக் கீழ்த்தரமாக நடத்தியது பற்றி அவர் ஒரிசா சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். நான் தலித் என்பதால்தான் தனியறையில் வைத்து சாப்பாடு போட்டனர் என்று காஷிநாத் மல்லிக் அதில் குறிப்பிடுகிறார்.

அப்பகுதி மக்களவை உறுப்பினரான ருத்ர மாதவ் ரே, ஆதிக்க சாதி மனப்பான்மையோடு இருக்கிறார் என்று நீண்டநாட்களாகவே மல்லிக் குற்றம்சாட்டி வருகிறார். சாதி பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினார் என்று அவர் மீது ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையம் வரை புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை திரும்பப் பெ வேண்டும் என்று மாநில முதல்வரான நவீன் பட்நாயக் கூறியும், இல்லை... சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று மல்லிக் உறுதியாக இருந்துவிட்டார். தனது மனைவியையும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார் என்பதும் மல்லிக், ருத்ர மாதவ் ரே மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

சட்டமன்ற உறுப்பினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண தலித் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றிய புகார்களை அப்பாவி மக்கள் கொண்டு வரும்போது இவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்பது இந்த அமைப்புகளின் கேள்வியாகும்.

கடவுளை நெருங்காதே..!



ஒரிசா
மாநிலத்தின் பல பகுதிகளில் தலித்துகள் கோவில்களில் நுழைய முடிவதில்லை. "அரிசனங்கள் இங்கிருந்து வழிபடலாம்" என்ற அறிவிப்புப் பலகை சில கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, உள்ளே நுழையக்கூடிய சில கோவில்களில்கூட எங்கிருந்து கும்பிட வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். புரி மாவட்டம் நுவாபடா என்ற கிராமத்தில் உள்ள காளி கோவிலுக்குள் மூன்று இளம் தலித் பெண்கள் நுழைந்து வழிபட்ட பிறகுதான் இத்தகைய அறிவிப்புப் பலகைகளை வைத்தனர். நவீன மயமாகியுள்ளதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில், அதுவும் கடந்த ஆண்டில்தான் இந்தப்பலகை வைக்கப்பட்டது. கடவுளை இவர்கள் நெருங்கினால் அது ஊருக்கு நல்லதில்லை என்று சரடு விடுகிறார்கள் ஆதிக்க சாதியினர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை அமல்படுத்துவதிலும் சாதி ரீதியான பாகுபாடு உள்ளது. மற்றவர்களுக்கு தரப்படும் ஊதியம் தலித்து மக்களுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக தலித் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் வேலையைத்தான் நாங்களும் செய்கிறோம். எதற்காக இந்த பாகுபாடு என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சந்தனா போய். ரனபாடா என்ற இடத்தில் கோவிலுக்குள் தலித்துகள் நுழைந்ததைக் காரணம் காட்டி, 80 தலித் குடும்பங்களின் விளைநிலங்களில் ஆதிக்க சாதியினர் அறுவடை செய்து அள்ளிச்சென்ற கொடுரமும் நடந்துள்ளது.

Tuesday, June 21, 2011

கோடிகளில் புழங்கும் பணக்கார "சந்நியாசி"கள்!


புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமப் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு இன்னும் முழு விடை கிடைக்கவில்லை. ஆனால் சாமிகளின் ஆசிரமத்தில் கோடி, கோடியாகப் பணம்(12 கோடி ரூபாய்), கட்டி, கட்டியாகத் தங்கம்22 கோடி ரூபாய்), வெள்ளி(1.64 கோடி ரூபாய்) என்று தாராளமாகக் கொட்டிக் கிடக்கிறது. புட்டபர்த்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணம் இரண்டு இடங்களில் பிடிபட்டிருக்கிறது. வோல்வோ பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் மற்றும் மற்றொரு வாகனத்தில் 35 லட்சம் ரூபாய் ஆகியவை ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

இங்கு மட்டுமல்ல, பெரிய, பெரிய சாமியார்களின் சொத்து விபரங்களைப்(அதிகாரபூர்வ) பார்த்தால் மலைப்பூட்டும்.

மாதா அமிர்தானந்தமயி

இவர்தான் இந்தியாவிலேயே பணக்கார சாமியாரினியாக இருப்பார். மிகவும் குறைவாக மதிப்பிட்டால்கூட அவரது அமிர்தானந்தமயி டிர°டின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். தனது பதின்பருவ வயதிலேயே சாமியாரினியாக மாறிவிட்ட அமிர்தானந்தமயியின் சொந்த ஊரான வள்ளிக்காவு என்ற தீவில் அவரது ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது ஐந்து அடுக்குமாடிக் கட்டிடமாகும். அவரது பக்தகோடிகளிடமிருந்து வரும் நன்கொடைகள் ஒருபுறம். கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளை லாபம். சந்தையில் உள்ள கட்டணங்களையே அவர்களும் வசூலிக்கிறார்கள். இதோடு ஒரு மருத்துவமனை, தொலைக்காட்சி நிறுவனம் என்று பணம் கொட்டுகிறது.

சொத்துகள் : அம்ரிதா விஸ்வ வித்யாபீடக் கல்லூரிகள், அம்ரிதா மருத்துவக்கல்லூரி(கொச்சி), அம்ரிதா பள்ளிகள், தொலைக்காட்சி நிறுவனம்.

------------

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

151 நாடுகளில் 30 கோடி பக்தர்கள் அவருக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, சாமியார்கள் காவி உடுத்துவதை வாடிக்கையாகக் கொள்வார்கள். இவர் மட்டும் வெள்ளை உடையை உடுத்துகிறார். 1980களின் துவக்கம் வரை அவர் யார் என்றே தெரியாது. கடந்த முப்பது ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் அவரது சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் பாபநாசத்தில் அவர் பிறந்தார். பெங்களுருவில் வாழ்க்கைக்கலை மையத்தை அவர் அமைத்தார். அவரது மையம் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உருவானது. பெங்களுரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 15 ஏக்கர் நிலத்தை ரவிசங்கரின் ஆசிரமம் கபளீகரம் செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியரான பால் குற்றம் சாட்டினார். ஆனால் அந்த சர்ச்சை மறைக்கப்பட்டது.

சொத்துகள் : பெங்களுருவில் உள்ள வாழ்க்கைக் கலை மையம், ஸ்ரீஸ்ரீ சங்கர் வித்யா மந்திர் டிரஸ்டு, பி.யு.கல்லூரி(பெங்களுரு), ஸ்ரீஸ்ரீ ஊடகக்கல்வி மையம்(பெங்களுர்), ஸ்ரீஸ்ரீ பல்கலைக்கழகம், வாழ்க்கைக்கலை சுகாதார மற்றும் கல்வி டிரஸ்டு(அமெரிக்கா) மற்றும் இதர சொத்துக்கள்.

--------------

ஆஷாராம் பாபு

இந்திய சாமியார்களில் அதிகமான அளவு சர்ச்சைகளில் அடிபட்டவர் இந்த ஆஷாராம் பாபு. ஏராளமான நில ஆக்கிரமிப்பு புகார்கள் இவரின் ஆசிரமங்கள் மீது உள்ளன. 2009 ஆம் ஆண்டில், இவருடைய ஆசிரமங்கள் கிட்டத்தட்ட 67 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன என்று நரேந்திர மோடி அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 350க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை ஆஷாராம் பாபு அமைத்துள்ளார். அமெரிக்காவில் நியூஜெர்சி உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆசிரமங்கள் உள்ளன.

----------------

ஓஷோ

மத்தியப் பிரதேசத்தின் குச்வாடா என்ற இடத்தில் டிசம்பர் 11, 1931 அன்று பிறந்த ஓஷோவின் இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின். சோசலிசத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தவர். அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் ரஜ்னீஷ்புரம் என்ற இடத்தை அவர் அமைத்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 1990 ஆம் ஆண்டில் அவர் மறைந்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து அவரது அமைப்பிற்கு இருந்தது.

-----------------

மகரிஷி மகேஷ் யோகி

1970களில் மிகவும் பிரபலமான இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிறந்தவர். மகேஷ் பிரசாத் வர்மா என்பது அவரது இயற்பெயராகும். உலகின் முக்கியமான நபர்கள் பலருக்கு அவர் ஆன்மீக ஆலோசகராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு பத்தாயிரம் கோடி ரூபாயிலிருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வரையிருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஏராளமான நிலங்கள் அவரது அமைப்பின் வசம் இருந்தன.

---------------

பாபா ராம்தேவ்

ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா பயின்றார். பின்னர், உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார். பின்னர், திவ்யா யோக மந்திர் டிரஸ்டு ஒன்றைத் துவங்கினார்.

சொத்துக்கள் : 36க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிரஸ்டுக்கு சொந்தமாக உள்ளன. இவையெல்லாம் வெறும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட சொத்துக் கணக்குகளாகும்.

--------------

Monday, May 2, 2011

"இலவசம்" அல்ல, நியாயமான பங்கீடுதான்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கருத்துப் பிரச்சாரத்தைத் தவிடு பொடியாக்கி விடுகிறோம் என்று கிளம்பியிருக்கும் எழுத்தாளர் சோலை மற்றும் திமுக வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் ஆகிய இருவருமே ஒரு புதிய சாதனையைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட "இலவச" மாநிலங்களவை உறுப்பினர் பதவி. இதில் திருச்சி செல்வேந்திரன் ஒருபடி மேலே போய் "கலைஞரின் எத்தனையோ அறிவிக்கப்படாத இலவசங்களில் ஒன்று" என்று புளகாங்கிதமாகக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினரானபிறகு, தற்போது தோழர்.டி.கே.ரங்கராஜன் கட்சி சார்பில் சென்றிருக்கிறார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவ்வொரு முறை மாநிலங்களவைத் தேர்தல் வரும்போதும், இந்த 15 உறுப்பினர்கள் திமுக சார்பில் நிற்பவர்களுக்கு தங்கள் வாக்குகளை(இலவசமாகத்தான்!) அளிப்பார்கள். அந்த சட்டமன்றத்தின் காலகட்டத்தில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஒரு இடத்தைக் கோரிப் பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒன்பது உறுப்பினர்கள் என்ற நிலையில்தான் மீண்டும் தங்கள் நியாயமான கோரிக்கையான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்பதை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினரானதன் பின்னணி.

தங்களைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதால்தான் இலவசங்கள் என்று நியாயமான பகிர்வைப் பற்றியும் திமுகவினர் நினைத்துக் கொள்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைந்தபோது, இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் உருவானது. அது நாங்கள் போட்ட இலவசம் என்று திமுகவைப் பார்த்து இடதுசாரிகள் ஒருபோதும் ஏகடியம் செய்யவில்லை. சொல்லப்போனால், திமுகவின் பங்கோடு, இலவசமாக மதிமுகவினருக்கான அமைச்சர்கள் பதவியையும் கேட்டு வாங்கிச் சென்றதுதான் திமுக. ஐக்கிய முன்னணி ஆட்சி தொடர திமுக வெளியேறினால் போதும் என்று காங்கிரஸ் சொன்னபோது, திமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள் நின்றார்கள். அதை இலவசம் என்று இடதுசாரிக்கட்சிகள் குத்திக் காட்டவில்லை.

1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் அரசு அமைந்தது. அதில் தி.மு.க.வும் இடம் பிடித்தது. இத்தனைக்கும் ஒரு மக்களவைத் தொகுதிகளில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அந்த அரசும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவால்தான் உருவானது. இதையும் எந்தக்காலகட்டத்திலும் இலவசம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும். முரசொலி(ஏப்.29 வெளியூர் பதிப்பு) நாளிதழில் திருச்சி செல்வேந்திரன் எழுதுகிறார். "இனிமேல் தொழிற்சங்கப் பொன்மொழிகளான தர்ணா, கேரோ போன்ற வார்த்தைகள் மேற்கு வங்கத்துக்குள்ளே கேட்கக்கூடாது. ஒழுங்காய் இருங்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சொன்னதாகக் கதைவிடுகிறார். இன்றைக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். இங்கு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்கிறோம் என்றாலே முதுகுத்தண்டைக் கீறிவிடும் அளவுக்கு காவல்துறையை ஏவிவிடும் திமுக அரசைத்தான் பார்க்க முடிந்தது.

"குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டவன் எல்லாம் குற்றவாளி அல்ல..." என்று கனிமொழிக்கு ஆதரவாக முழங்கியுள்ளார் செல்வேந்திரன். "கரும்பாலையில் வேலை செய்த ரங்கராஜனுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் அது புத்திசாலித்தனமாக இருக்காது" என்கிறார். மக்கள் பணம் 1,76,000 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல்வரின் மகளும், கட்சியின் எம்.பி.யுமான கனிமொழி சேர்ந்து சதி செய்தார் என்று மத்தியப்புலனாய்வுக்குழு சொல்கிறது. இவரோ கரும்பாலையில் தரும் மெமோ பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் கொல்கத்தா பதிப்பு வெளியிட்ட பொய்ப்பிரச்சாரக் கட்டுரை ஒன்றை எடுத்து, தலித் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் ஒரு ஆண்டு கழித்து பிரசுரித்துள்ளன. இதைத்தான் கரைத்துக் குடித்துவிட்டு செல்வேந்திரன் சொல்கிறார், பதினேழாயிரம் தலித்துகள் குழந்தை, குட்டிகளோடு சுட்டுக்கொன்று கடலிலே மூழ்கடித்த கொடுமை என்று. இதற்கு ஏற்கெனவே தீக்கதிரில் பதில் சொல்லப்பட்டுள்ளதை செல்வேந்திரன் படிக்காதது நமது குற்றமல்ல. அப்படியொரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கமான கம்யூனிச எதிர்ப்புப் பிதற்றல் அது. இதற்கு மாய்ந்து, மாய்ந்து எதை எழுதச் சொல்கிறார்?

திமுக பற்றிய எகனாமிக் டைம்ஸ் கருத்து போட்டியாளரின் கருத்து என்கிறார். உண்மைதான். அனைத்து வர்த்தகத்துறைகளிலும் முதல்வரின் குடும்பம் நுழைந்துள்ளதால், யார் குறை கூறினாலும் அது போட்டியாளரின் கருத்து என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏகபோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஒரு இடத்தில் "ரெங்கராஜன் நம்முடைய வர்க்க விரோதி" என்கிறார் செல்வேந்திரன். தெரிந்தோ, தெரியாமலோ, பெரியாரின் வாக்கியம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

"நம்முடைய எதிரி உன்னை யோக்கியன் என்று சொன்னால், நீ அயோக்கியன் என்று அர்த்தம். அவர்கள் கெட்டவன் என்று சொன்னால்தான் நீ நல்லவன் என்று அர்த்தம்" என்பதுதான் அந்த வாக்கியம். எதிரி முகாமில் இருக்கும் செல்வேந்திரன், தோழர். டி.கே.ரங்கராஜனைப் பார்த்து வர்க்க விரோதி என்கிறார். பெரியாரின் வார்த்தைகளையே செல்வேந்திரனுக்கு சமர்ப்பிப்போம்.

Friday, April 29, 2011

புருலியாவில் ஆயுதம் வீசிய சதி அம்பலம் !

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசின்மீது பழிசுமத்தி எப்படி யேனும் வீழ்த்தவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, அம்மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத் தில் பெருமளவில் மர்மமான முறையில் ஆயுதங்கள் குவியல் குவியலாக வீசப்பட்ட சம்பவத் தில் முதன்மைகுற்றவாளியான கிம் டேவி என்பவர், தற்போது இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம் என்றும், இதுகுறித்து இந்திய அரசுக்கு அனைத்துவிவரங்களும் முதலி லேயே தெரியும் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அரசியல் அரங்கில் கிம் டேவியின் இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன் னணி அரசுக்கு எதிராக செய்தி கள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறை யில் இறக்குமதி செய்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்றுகுவித்துவருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழு வதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர் களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப் பிற்காக தீவிரவாத குழு வைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன் மை குற்றவாளிகளான மேற் கண்ட இருவரும் இந்தியாவிலி ருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு நிர்வாகமே ஏற்பாடு செய்தது. புருலியா ஆயுத வீச்சு சம்பவத் திற்குப்பின்னால், இடதுமுன் னணி அரசுக்கு எதிராக மம்தா வின் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாவோயிஸ்டுகளின் உதவியுடன் ஏராளமான முயற்சி களை செய்தவண்ணம் இருக் கின்றனர்.

இந்தப்பின்னணியில், 15 ஆண்டுகளுக்குப்பின்னர், புருலியா ஆயுத வீச்சு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு உண்மைகளை, இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபருக்கு அளித்த நீண்ட பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கில் தற்போது இந்தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என்றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு நாச காரியத்திற்காக சிலர் தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம் டேவி, இந்தப்பின்னணி யிலேயே உண்மைகளை வெளி யிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டி ருக்கிறார்.

புருலியாவில் ஆயுதம் வீசுவ தன் மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப் பில் ஈடுபடுகிறது என்ற பிரச் சாரத்தை நடத்தி, அதன்மூலம் அங்கு குடியரசுத்தலைவர் ஆட் சியை அமல்படுத்திவிட முடியும் என்ற எண்ணத்துடன், அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்திக்கொண்டன என்று கிம் டேவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உலகம் முழுவதும் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றி இருப்பதாகவும் கிம் டேவி கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.


Friday, January 7, 2011

எந்திரன் வெற்றியா.. தோல்வியா..? ரஜினி குழப்பம்


முன்பெல்லாம் படம் வெளியாகி 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என்று தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்படும். வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். வெற்றிப்படமாக இருந்தால் கிட்டத்தட்ட அந்த 175 நாட்களையும் விழாக்காலமாக ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் என்று பலரும் சொல்லிக் கொள்ளும் எந்திரன் பல திரையரங்குகளில் இருந்து வெளியேறிவிட்டது. ரசிகர்கள் மூலம் இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், திரைப்படத்துறையின் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் தொலைபேசி எண்களைத் தட்டியிருக்கிறார்.

திரையிடப்பட்ட அரங்குகளில் இன்னும் எத்தனை அரங்குகளில் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற விபரங்களை அவரிடம் கேட்டிருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தனின் பதிலை வைத்து ரஜினியின் ஆய்வு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், திரைப்பட வட்டாரங்களில் எந்திரன் தயாரிப்புக்கும், விளம்பரத்திற்கும் செய்த செலவோடு ஒப்பிட்டால் படம் தோல்விதான் என்று பேசிக் கொள்கிறார்கள். அதுவும் யதார்த்தமான கதையைக் கொண்ட மைனாவின் வெற்றியைப் பார்த்தால், எந்திரன் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார்கள்.

Monday, January 3, 2011

"சார்... எனக்கு வேலை கிடைச்சுருச்சு...!"



"சார்... எனக்கு கோ-ஆபரேடிவ் பேங்குல வேல கிடைச்சுருச்சு..." செல்போனில் மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டிருப்பது போன்ற குரல்.

பதில் சொல்வதற்கு முன்பே அந்தக்குரல் தொடர்கிறது. "சார்... நம்ம மையத்துல மேத்ஸ்(கணக்கு) எடுத்ததுதான் சார் ரொம்ப உதவியா இருந்துச்சு..." என்றார் கல்பனா என்ற அந்தப்பெண். கோவையில் அண்மையில் நிரப்பப்பட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் பணியிடங்களில் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தால் அட்டவணை சாதியினருக்காக கோவையில் நடத்தப்பட்டு வரும் டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.

இவர் மட்டுமல்ல. இங்கு நடத்தப்படும் வகுப்புகளால் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் மூவர் தேர்வு பெற்றனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று இந்த மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. ஜனவரி மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சியைத் துவக்கினோம். ஏப்ரல் இறுதியில் அதற்கான தேர்வு நடைபெற்றது. இந்த வகுப்பு நடந்து கொண்டிருந்தபோதே, இப்போதுதான் எங்களுக்கு இதுபோன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு வகையில் வகுப்புகள் தொடரட்டும் என்றார்கள் வகுப்புகளுக்கு வந்தவர்கள். இதனால் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பைத் துவங்கினோம்.

தொழில் ரீதியாக இந்த வேலையைச் செய்யும் ஒருவரை அணுகலாம் என்று முடிவெடுத்தோம். திரு.சபாபதி என்பவர் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வகுப்புகளை நன்றாகச் செய்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டோம். விஷயத்தை விளக்கிவிட்டு உங்களுக்கு எவ்வளவு கட்டணம் தர வேண்டும் என்று கேட்டோம். இவ்வளவு பெரிய பணியை உங்கள் மையம் செய்து வருகிறது. நானும் அதில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு கட்டணம் எதுவும் வேண்டாம் என்றபோது மையம் பரந்து விரிவடைவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவரது வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

அது நிறைவுபெறும் நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) தேர்வுக்கான விளம்பரம் வந்தது. அதற்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது அதில் இரண்டாம் கட்டத்திற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறது கோவை டாக்டர்.அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையம். ஜனவரி 2 ஆம் தேதி முதல் வி.ஏ.ஓ தேர்வுக்காகவும், வரும் காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதப் போகிறவர்களுக்காகவும் பயிற்சி வகுப்புகளை நடக்கப்போகிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.
பயிற்சி வகுப்புகள் துவங்குகையில் கணிதப் பாடத்திற்கென்று சிறப்பான கவனம் செலுத்துவதென்று முடிவெடுத்தோம். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பெரிய அளவில் பயன்படாவிட்டாலும் அதைத்தாண்டி மற்ற தேர்வுகளுக்கு கணிதம் அத்தியாவசியம் என்பது நமது ஆசிரியர்களின் கணிப்பாக இருந்தது. அது சரியானது என்பதைத்தான் மையத்தைச் சேர்ந்த கல்பனா கூட்டுறவு வங்கித்தேர்வில் தேர்வு பெற்றது காட்டுகிறது.

அட்டவணை சாதியினர் தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பது போலவே மையத்தின் பணிகளும் வெகு தூரம் செலல வேண்டியிருக்கிறது. அண்மையில் வெளியான காவலர் தேர்வு முடிவுகளில் கட்-ஆப் மதிப்பெண்களில் அட்டவணை சாதியினருக்கான கட்-ஆப் என்பது மற்ற பிரிவினரை விடக் குறைவாக இருந்தது. அட்டவணை சாதியினரிலும், அருந்ததியருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் மேலும் குறைவாகவே இருந்தது. இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு ஆகியவற்றை இந்த கட்-ஆப் மதிப்பெண்கள் நியாயப்படுத்துகின்றன.

தமிழக அரசுப்பணிகளில் நியாயமான அளவில் இடங்களைப் பெறுவதில் காட்டும் முனைப்பை மத்திய அரசுப்பணிகளும் காட்டிட அட்டவணை சாதியினர் முன்வர வேண்டிய அவசியமுள்ளது. குறிப்பாக, வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளுக்கும் சரியான வழிகாட்டுதலைப் பெற்று தயார் செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை கிராமப்புற அட்டவணை சாதியினரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தயாரிப்புகளுக்கு டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் உதவிடும் வகையில் தயாராக வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மையத்தின் பொறுப்பாளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இதையுணர்ந்தே, போட்டித் தேர்வுகளுக்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளில் துவங்கி, திறன் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி, தொடர் மாதிரி தேர்வுகள், தேர்வு எழுதப்போகிறவர்களே வகுப்புகள் எடுப்பது, அவர்களே கேள்விகளைத் தயாரிப்பது என்று திட்டமிட்ட முறையில் மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம் ஒருமுறைதான் வகுப்பு என்பதால், மற்ற நாட்களில் அவர்களைப் படிக்கச் செய்ய வகையில் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் ஒவ்வொரு நாளும் மூன்று கேள்விகள் வரை அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போதைய பயிற்சி பிப்ரவரி 20 வரையிலும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குப்பிறகு திட்டமிட்டுள்ளபடி வங்கி, எல்.ஐ.சி. போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடத்தப்படும். கோவைப் பயிற்சி மையத்தின் உயிர்நாடியாக கோவைக் கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் இயங்குகிறது. வகுப்புக்கு வருபவர்களின் நேரத்தை மிச்சம் பிடிக்க, சங்கத்தின் செலவில் வகுப்பறைக்கே தேநீர் வருகிறது. கேள்வித்தாள்கள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள் போன்றவற்றை நகல் எடுப்பதற்காக சங்கத்தின் செலவில் ஒரு ஜெராக்ஸ் மிஷினையே இறக்கிவிட்டார்கள். ஓராண்டு காலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்திருக்கின்றன என்றால் அதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ ஊழியர் சங்கத்தின் இத்தகைய அர்ப்பணிப்பு செயல்பாடுகள்தான் காரணம் என்றால் மிகையில்லை.

தோழியர் கல்பனாவின் வெற்றி ஆசிரியர்களையும், வேலைக்காகக் காத்திருப்பவர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. வேலையில் சேர்ந்து விட்டாலும், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்காக வகுப்புகளுக்கு தொடர்ந்து வருவேன் என்று அவர் சொன்னது இந்த மையத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக இருந்தது.


Sunday, January 2, 2011

தள்ளு மாடல் வண்டி இது.. தள்ளி விடுங்க...!!



கடந்த வாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கட்கான் என்ற ரயில் நிலையத்திற்குள் நுழைந்த சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்திலிருந்து இறங்கி ஓடத்துவங்கியது. நடைபாதையைத் தாண்டிய ரயில் சில இரு சக்கர வாகனங்களைச் சுக்குநூறாக்கியது. பாதை சரியாகத் தெரியாத அளவிற்கு பனி மூடியிருந்ததுதான் இதற்குக் காரணமாகும். நல்லவேளையாக, அதற்கு மேல் ஓடாமல் ரயில் நின்று விட்டது. ஆனால் இத்தகைய விபத்துகள் ஒவ்வொரு ஆண்டிலும் நடப்பது சாதாரண நிகழ்வாக ஆகி விட்டது என்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள். பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதுதான் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தண்டவாளங்களை பனி மூடிக்கிடக்கும் நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையிலான கருவிகளை ரயில்களில் பொருத்த வேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரிக்கை இருந்து வருகிறது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கோ கோப்புகளைப் பார்ப்பதற்கு நேரமில்லை. உயர் அதிகாரிகளோ பாதுகாப்புக் கருவிகள் வாங்குவது வீண் செலவு என்கிறார்கள். இத்தகைய பாதுகாப்புக் கருவிகளை அனைத்து ரயில்களிலும் பொருத்துவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள் அவர்கள். ரயில்வே நிர்வாகம் தற்போதுள்ள நிலையில் இத்தகைய கருவிகளை வாங்க முடியாது. இந்தக் கருவிகள் ஆண்டில் ஒரே ஒரு மாதம்தான் பயன்படும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.

இவர்களின் கருத்துகளைத் தாண்டி மக்களின் பாதுகாப்புக்காக இந்தக் கருவிகள் அவசியம் என்று சொல்வதற்கு மக்களின் பிரதிநிதியான அமைச்சர் வேலைக்குச் செல்வதே அபூர்வமானதாக இருப்பதே காரணமாகும். ஆனால் மேடைகளில் ரயில்வே பாதுகாப்பு பற்றி மம்தா பானர்ஜி பொரிந்து தள்ளி வருகிறார். விபத்தே இல்லாத ரயில்வே என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். கொல்கத்தாவில் மெட்ரோ சேவை ஒன்றைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், விபத்துகளைத் தடுக்கும் வகையிலான கருவிகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பொருத்தி விடுவோம். எந்தவிதமான விபத்தும் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதோடு, வருங்காலத்தில் விபத்தே இல்லாத நிலைமை உருவாகும் என்று பேசினார். ஆனால் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு தலைநகரில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

3 ஆயிரம் பயணிகள் ரயில்கள் மற்றும் ஆயிரம் சரக்கு ரயில்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இவற்றோடு சிக்னல்களின் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் பாகத்தில் ரயில்வேதுறை பெரிய அளவில் முன்னேறியிருப்பதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டனர். ஆனால் பாதுகாப்பு தொடர்பான ஊழியர்கள் பணியிடங்களில் சுமார் 90 ஆயிரம் இடங்களை நிரப்பவேயில்லை. தற்போது அமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று ஓராண்டாகியும் அந்தப் பணியிடங்கள் பற்றி வாய் திறக்கவேயில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பனி மூடிக்கிடந்ததால் தில்லி-லக்னோ ரயில் பாதையில் இரண்டு விபத்துகள் நடந்தன. அதில் பத்து பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கடுமையான குளிர் இருக்கும்போது வட மாநிலங்களில் பயணம் செய்யும் மக்களில் பெரும்பாலானர்கள் தங்கள் பயணத்தை நேரத்தில் முடிக்கவில்லை. பலரும் பயணத்தையே ரத்து செய்து வருகிறார்கள். கடந்த வாரத்தில் தில்லிக்கு வந்து சேர வேண்டிய 45 ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. ஒரே நாளில் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தடுக்கக்கூடிய பாதுகாப்புப் கருவிகளைப் பொருத்துவது தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துவிட்டன. அதிகாரிகளின் கருத்துதான் மேலோங்கி நிற்கிறது. மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை, அமைச்சரின் நாற்காலியில் வந்து அமர்வதே பத்திரிகைகளில் செய்தியாகும் அளவுக்கு அவருடைய வருகை இருக்கிறது.

இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களின் நிர்ப்பந்தத்தால் பாதுகாப்பு கருவிகளை வாங்க முயற்சிக்கிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழிக்கும் வேறு ஏதாவது முட்டுக்கட்டை வராமல் இருந்தால், அடுத்த ஆண்டு குளிர்காலத்திலாவது பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுவிடும். முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அடுத்த ஆண்டும் இதேகதைதான் இருக்கும் என்று ரயில் அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

Saturday, January 1, 2011

குடியிருப்புகளாகும் இன்டர்நெட் மையங்கள்!



“அது ஏப்ரல் மாதமிருக்கும். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கான குத்தகையை நீட்டிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான 500 டாலர்கள் எங்களிடம் இல்லை. உடைந்து போய் உட்கார்ந்திருந்தோம். உலகிலேயே விலைவாசி அதிகமாகயிருக்கும் டோக்கியோ நகரத்தில் வறுமையில் உழலத் துவங்கியிருந்தோம்...”

டோக்கியோ நகரத்திற்கு சற்று வெளியே இருக்கும் இன்டர்நெட் மையத்திலிருந்து வலைப்பூ மூலமாக உலகிற்கு தனது நிலைமை பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஜப்பானிய இளைஞர் ஒருவர். தான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே கண்கள் சுழன்று உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். பிறகு அந்த மையத்திலேயே உறங்கிவிடுகிறார். காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு அங்கிருக்கும் எந்திரத்தில் தேநீரை அருந்திவிட்டு வேலை தேடச் செல்கிறார். 24 மணிநேரமும் இயங்கும் அந்த மையத்தையே தனது வீடாக அவர் மாற்றிக் கொண்டுவிட்டார்.

இவ்வாறு இவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான ஜப்பானிய இளைஞர்கள் தங்குவதற்கு வீடில்லாமல் இன்டர்நெட் மையங்களில் தங்கி விடுகிறார்கள். எவ்வளவு மணி நேரம் தங்குகிறார்களோ, அதற்கு பிரவுசிங் பார்ப்பதற்கு எவ்வளவு பணம் தர வேண்டுமோ அவ்வளவு தந்துவிட்டு நடையைக் கட்டி விடுகிறார்கள். சிறிய, சிறிய அறைகளாகக் கட்டி வைத்திருக்கும் இன்டர்நெட் மையங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளது. முண்டியடித்துக் கொண்டு போய் இடம் பிடிக்கிறார்கள். ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு தனி கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம், தாமதமாகி விட்டாலோ அல்லது காலையில் விரைவாக வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தவர்கள்தான் இப்படி இன்டர்நெட் மையங்கள் போன்ற இடங்களில் தங்கினார்கள். இரவு நேரங்களில் அலுவலகத்திற்குச் செல்லாமல் பணியாற்ற விரும்பியவர்களும் இத்தகைய மையங்களில் இரவு நேரங்களில் அமர்ந்து வந்தனர். இரவு நேர விருந்துகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல விரும்பாதவர்கள், காதலிகளிடம் இணையதளம் மூலமாகப் பேச விரும்புபவர்கள், தூக்கம் வராமல் கணினி விளையாட்டில் இறங்க விரும்புபவர்கள் என்று பெரிய பட்டியலே இந்த மையங்களுக்கு வருபவர்கள் பற்றி உள்ளது. ஆனால் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைப்பது தற்போது அரிதாகிவிட்டது.

இவ்வாறு குடியிருக்க இடம் இல்லாதவர்கள் பற்றிய சிறப்பு ஆய்வு ஒன்றினை பிக் இஷ்யூ ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தங்களின் 20கள் மற்றும் 30களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களின் சராசரி வயது 32.3 ஆக இருந்தது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தது ஆறு மாதங்களாவது வீடு இல்லாமல் சாலையோரங்களில் தங்கினார்கள் என்பது தெரிய வந்தது. வீடில்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் தற்காலிக வேலைகள் உள்ளிட்ட பாதுகாப்பற்ற வேலைகளில்தான் அமர்கின்றனர். இதனால் பணிக்காலத்தில் உயர் தொழில்நுட்பம் எதையும் அவர்கள் கற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் இருக்கிறது.

ஒரே நேரத்தில் படித்துக் கொண்டே வேலை பார்க்கலாம் என்று கிளம்பிய ஒருவர், இப்படி நினைத்து 31 வயதை எட்டிவிட்டேன். படிக்கவும் இல்லை, நிரந்தர வேலையும் கிடைக்கவில்லை என்கிறார். மாலை எட்டு மணிவரையிலும் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. 20 வயதில் ஒசாகாவுக்கு வேலைக்காக சென்றேன். சில மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் பணியாற்றினேன். மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் வேலையில் இருந்தேன். சில சமயங்களில் பாதுகாப்பு ஊழியராகவும் இருந்தேன். ஆனால் ஒருபோதும் நிரந்தர ஊழியராக என்னை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் புலம்புகிறார்.

வேலையில் சேரும்போது நிறுவனங்கள் சொல்லும் ஊதியம் ஒன்றாகவும், கையில் வாங்கும்போது அது வேறாகவும் பல சமயங்களில் இருக்கிறது என்று தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சில சமயங்களில் ஊதியமே இல்லாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்டவர்கள்தான் குடியிருக்க இடமில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களும் இவர்களோடு இணைந்துள்ளார்கள். மாத வாடகை தரும் அளவுக்குக்கூட பணமில்லாத நிலையில், ஏழு மணிநேரம் இன்டர்நெட் மையங்களில் நாற்காலிகளிலேயே அமர்ந்தும், தரையில் விரிப்பை விரித்தும் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

“குட்டி ஜப்பான்" என்ற பெயர் சூட்டப்பட்ட மற்ற நாட்டு நகரங்கள் வெட்கப்படும் அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி வருகிறது.