Showing posts with label இடதுசாரிகள். Show all posts
Showing posts with label இடதுசாரிகள். Show all posts

Monday, May 2, 2011

"இலவசம்" அல்ல, நியாயமான பங்கீடுதான்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கருத்துப் பிரச்சாரத்தைத் தவிடு பொடியாக்கி விடுகிறோம் என்று கிளம்பியிருக்கும் எழுத்தாளர் சோலை மற்றும் திமுக வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் ஆகிய இருவருமே ஒரு புதிய சாதனையைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட "இலவச" மாநிலங்களவை உறுப்பினர் பதவி. இதில் திருச்சி செல்வேந்திரன் ஒருபடி மேலே போய் "கலைஞரின் எத்தனையோ அறிவிக்கப்படாத இலவசங்களில் ஒன்று" என்று புளகாங்கிதமாகக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினரானபிறகு, தற்போது தோழர்.டி.கே.ரங்கராஜன் கட்சி சார்பில் சென்றிருக்கிறார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவ்வொரு முறை மாநிலங்களவைத் தேர்தல் வரும்போதும், இந்த 15 உறுப்பினர்கள் திமுக சார்பில் நிற்பவர்களுக்கு தங்கள் வாக்குகளை(இலவசமாகத்தான்!) அளிப்பார்கள். அந்த சட்டமன்றத்தின் காலகட்டத்தில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஒரு இடத்தைக் கோரிப் பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒன்பது உறுப்பினர்கள் என்ற நிலையில்தான் மீண்டும் தங்கள் நியாயமான கோரிக்கையான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்பதை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினரானதன் பின்னணி.

தங்களைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதால்தான் இலவசங்கள் என்று நியாயமான பகிர்வைப் பற்றியும் திமுகவினர் நினைத்துக் கொள்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைந்தபோது, இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் உருவானது. அது நாங்கள் போட்ட இலவசம் என்று திமுகவைப் பார்த்து இடதுசாரிகள் ஒருபோதும் ஏகடியம் செய்யவில்லை. சொல்லப்போனால், திமுகவின் பங்கோடு, இலவசமாக மதிமுகவினருக்கான அமைச்சர்கள் பதவியையும் கேட்டு வாங்கிச் சென்றதுதான் திமுக. ஐக்கிய முன்னணி ஆட்சி தொடர திமுக வெளியேறினால் போதும் என்று காங்கிரஸ் சொன்னபோது, திமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள் நின்றார்கள். அதை இலவசம் என்று இடதுசாரிக்கட்சிகள் குத்திக் காட்டவில்லை.

1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் அரசு அமைந்தது. அதில் தி.மு.க.வும் இடம் பிடித்தது. இத்தனைக்கும் ஒரு மக்களவைத் தொகுதிகளில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அந்த அரசும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவால்தான் உருவானது. இதையும் எந்தக்காலகட்டத்திலும் இலவசம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும். முரசொலி(ஏப்.29 வெளியூர் பதிப்பு) நாளிதழில் திருச்சி செல்வேந்திரன் எழுதுகிறார். "இனிமேல் தொழிற்சங்கப் பொன்மொழிகளான தர்ணா, கேரோ போன்ற வார்த்தைகள் மேற்கு வங்கத்துக்குள்ளே கேட்கக்கூடாது. ஒழுங்காய் இருங்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சொன்னதாகக் கதைவிடுகிறார். இன்றைக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். இங்கு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்கிறோம் என்றாலே முதுகுத்தண்டைக் கீறிவிடும் அளவுக்கு காவல்துறையை ஏவிவிடும் திமுக அரசைத்தான் பார்க்க முடிந்தது.

"குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டவன் எல்லாம் குற்றவாளி அல்ல..." என்று கனிமொழிக்கு ஆதரவாக முழங்கியுள்ளார் செல்வேந்திரன். "கரும்பாலையில் வேலை செய்த ரங்கராஜனுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் அது புத்திசாலித்தனமாக இருக்காது" என்கிறார். மக்கள் பணம் 1,76,000 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல்வரின் மகளும், கட்சியின் எம்.பி.யுமான கனிமொழி சேர்ந்து சதி செய்தார் என்று மத்தியப்புலனாய்வுக்குழு சொல்கிறது. இவரோ கரும்பாலையில் தரும் மெமோ பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் கொல்கத்தா பதிப்பு வெளியிட்ட பொய்ப்பிரச்சாரக் கட்டுரை ஒன்றை எடுத்து, தலித் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் ஒரு ஆண்டு கழித்து பிரசுரித்துள்ளன. இதைத்தான் கரைத்துக் குடித்துவிட்டு செல்வேந்திரன் சொல்கிறார், பதினேழாயிரம் தலித்துகள் குழந்தை, குட்டிகளோடு சுட்டுக்கொன்று கடலிலே மூழ்கடித்த கொடுமை என்று. இதற்கு ஏற்கெனவே தீக்கதிரில் பதில் சொல்லப்பட்டுள்ளதை செல்வேந்திரன் படிக்காதது நமது குற்றமல்ல. அப்படியொரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கமான கம்யூனிச எதிர்ப்புப் பிதற்றல் அது. இதற்கு மாய்ந்து, மாய்ந்து எதை எழுதச் சொல்கிறார்?

திமுக பற்றிய எகனாமிக் டைம்ஸ் கருத்து போட்டியாளரின் கருத்து என்கிறார். உண்மைதான். அனைத்து வர்த்தகத்துறைகளிலும் முதல்வரின் குடும்பம் நுழைந்துள்ளதால், யார் குறை கூறினாலும் அது போட்டியாளரின் கருத்து என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏகபோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஒரு இடத்தில் "ரெங்கராஜன் நம்முடைய வர்க்க விரோதி" என்கிறார் செல்வேந்திரன். தெரிந்தோ, தெரியாமலோ, பெரியாரின் வாக்கியம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

"நம்முடைய எதிரி உன்னை யோக்கியன் என்று சொன்னால், நீ அயோக்கியன் என்று அர்த்தம். அவர்கள் கெட்டவன் என்று சொன்னால்தான் நீ நல்லவன் என்று அர்த்தம்" என்பதுதான் அந்த வாக்கியம். எதிரி முகாமில் இருக்கும் செல்வேந்திரன், தோழர். டி.கே.ரங்கராஜனைப் பார்த்து வர்க்க விரோதி என்கிறார். பெரியாரின் வார்த்தைகளையே செல்வேந்திரனுக்கு சமர்ப்பிப்போம்.

Sunday, January 2, 2011

தள்ளு மாடல் வண்டி இது.. தள்ளி விடுங்க...!!



கடந்த வாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கட்கான் என்ற ரயில் நிலையத்திற்குள் நுழைந்த சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்திலிருந்து இறங்கி ஓடத்துவங்கியது. நடைபாதையைத் தாண்டிய ரயில் சில இரு சக்கர வாகனங்களைச் சுக்குநூறாக்கியது. பாதை சரியாகத் தெரியாத அளவிற்கு பனி மூடியிருந்ததுதான் இதற்குக் காரணமாகும். நல்லவேளையாக, அதற்கு மேல் ஓடாமல் ரயில் நின்று விட்டது. ஆனால் இத்தகைய விபத்துகள் ஒவ்வொரு ஆண்டிலும் நடப்பது சாதாரண நிகழ்வாக ஆகி விட்டது என்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள். பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதுதான் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தண்டவாளங்களை பனி மூடிக்கிடக்கும் நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையிலான கருவிகளை ரயில்களில் பொருத்த வேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரிக்கை இருந்து வருகிறது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கோ கோப்புகளைப் பார்ப்பதற்கு நேரமில்லை. உயர் அதிகாரிகளோ பாதுகாப்புக் கருவிகள் வாங்குவது வீண் செலவு என்கிறார்கள். இத்தகைய பாதுகாப்புக் கருவிகளை அனைத்து ரயில்களிலும் பொருத்துவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள் அவர்கள். ரயில்வே நிர்வாகம் தற்போதுள்ள நிலையில் இத்தகைய கருவிகளை வாங்க முடியாது. இந்தக் கருவிகள் ஆண்டில் ஒரே ஒரு மாதம்தான் பயன்படும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.

இவர்களின் கருத்துகளைத் தாண்டி மக்களின் பாதுகாப்புக்காக இந்தக் கருவிகள் அவசியம் என்று சொல்வதற்கு மக்களின் பிரதிநிதியான அமைச்சர் வேலைக்குச் செல்வதே அபூர்வமானதாக இருப்பதே காரணமாகும். ஆனால் மேடைகளில் ரயில்வே பாதுகாப்பு பற்றி மம்தா பானர்ஜி பொரிந்து தள்ளி வருகிறார். விபத்தே இல்லாத ரயில்வே என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். கொல்கத்தாவில் மெட்ரோ சேவை ஒன்றைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், விபத்துகளைத் தடுக்கும் வகையிலான கருவிகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பொருத்தி விடுவோம். எந்தவிதமான விபத்தும் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதோடு, வருங்காலத்தில் விபத்தே இல்லாத நிலைமை உருவாகும் என்று பேசினார். ஆனால் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு தலைநகரில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

3 ஆயிரம் பயணிகள் ரயில்கள் மற்றும் ஆயிரம் சரக்கு ரயில்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இவற்றோடு சிக்னல்களின் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் பாகத்தில் ரயில்வேதுறை பெரிய அளவில் முன்னேறியிருப்பதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டனர். ஆனால் பாதுகாப்பு தொடர்பான ஊழியர்கள் பணியிடங்களில் சுமார் 90 ஆயிரம் இடங்களை நிரப்பவேயில்லை. தற்போது அமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று ஓராண்டாகியும் அந்தப் பணியிடங்கள் பற்றி வாய் திறக்கவேயில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பனி மூடிக்கிடந்ததால் தில்லி-லக்னோ ரயில் பாதையில் இரண்டு விபத்துகள் நடந்தன. அதில் பத்து பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கடுமையான குளிர் இருக்கும்போது வட மாநிலங்களில் பயணம் செய்யும் மக்களில் பெரும்பாலானர்கள் தங்கள் பயணத்தை நேரத்தில் முடிக்கவில்லை. பலரும் பயணத்தையே ரத்து செய்து வருகிறார்கள். கடந்த வாரத்தில் தில்லிக்கு வந்து சேர வேண்டிய 45 ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. ஒரே நாளில் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தடுக்கக்கூடிய பாதுகாப்புப் கருவிகளைப் பொருத்துவது தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துவிட்டன. அதிகாரிகளின் கருத்துதான் மேலோங்கி நிற்கிறது. மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை, அமைச்சரின் நாற்காலியில் வந்து அமர்வதே பத்திரிகைகளில் செய்தியாகும் அளவுக்கு அவருடைய வருகை இருக்கிறது.

இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களின் நிர்ப்பந்தத்தால் பாதுகாப்பு கருவிகளை வாங்க முயற்சிக்கிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழிக்கும் வேறு ஏதாவது முட்டுக்கட்டை வராமல் இருந்தால், அடுத்த ஆண்டு குளிர்காலத்திலாவது பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுவிடும். முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அடுத்த ஆண்டும் இதேகதைதான் இருக்கும் என்று ரயில் அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

Wednesday, June 3, 2009

தேர்தலோடு எதுவும் முடியப் போவதில்லை......

'இடதுசாரிகளின் முட்டுக்கட்டைகள் இல்லை, இனி பொதுத்துறை பங்குகள் விற்பனை' என்று அலறுகிறது தினமலர். 15வது மக்களவைக்காக நடந்த தேர்தலின் முடிவுகள் வரத் துவங்கிய மே 16ம் தேதி, யார் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட யார் அதிக எண்ணிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதில் நாட்டின் தொழிலதிபர்களுக்குப் பெரிய வேகம் இருந்தது. 61 என்ற ஓர் எண் வெறும் 20 என்று சுருங்கியவுடன் தான் அவர்களிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. நிலையான ஆட்சி, அதுவும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, அதுவும் முட்டுக்கட்டைகள் போடும் இடதுசாரிகளின் தயவு தேவைப்படாத ஆட்சி என்று அவர்களது ஷாம்பெய்ன் கிண்ணங்கள் அன்று இரவு பொங்கி வழிந்திருக்கக் கூடும்.


இடதுசாரிகளுக்கு ஏன் இப்படி அடி விழுந்தது என்பது பற்றி அந்தக் கட்சிகள் ஒருபக்கம் பரிசீலனையைத் துவக்கியிருக்க, பத்திரிகையில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் எழுதும் பத்தியாளர்கள் அலசல்களை வைத்தவண்ணம் உள்ளனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஜூலை 2008ல் திரும்பப் பெற்றது தவறா, அதற்குத் தேர்வு செய்த காரணம் தவறா என்றும் 2004ல் ஆதரவு அளிப்பது என்று எடுத்த முடிவே தவறா என்றும் கேள்விகள் எழுப்புவோர் எல்லோரும் இடதுசாரிகளின் ஆதரவாளர்களுமில்லை, எதிர்ப்பாளர்களுமில்லை. இடதுசாரிகள் மீது விமர்சனம் வைப்பவர்களில் சிலர் சீர்திருத்தக் கொண்டாடிகளாகவே இருந்தபோதிலும் இன்றைய உலக பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்திய நிதித்துறை அவ்வளவு தீவிரமான பாதிப்புகளை அடையாமல் காபந்து செய்திருப்பது யார் என்று அறிந்தவர்கள். அந்த உணர்வின் நிழல் படிந்திருக்கிறது அவர்களது விமர்சனங்களில்.


ஆனாலும், மன்மோகன் தலைமையில் சீர்திருத்தங்களின் படைவரிசையை வெகுவேகமாக முன்னேற்றிச் சென்றுவிட வேண்டும் என்று நிதியிதழ்கள் (FINANCIAL DAILIES) எழுதுகின்றன. "நிதித்துறைக்குப் பொருத்தமாகக் குறைந்தபட்சம் இரண்டு நிர்வாகப் புலிகளாவது மன்மோகன் வசம் இருக்கையில் போயும் போயும் பிரணாப் முகர்ஜியைத் தானா நிதியமைச்சராகக் கொண்டுவர வேண்டும் ? வரும் காலங்கள் சந்தைக்கும் அரசின் பாத்திரத்திற்கும் முரண்பாடுகளைக் கூர்மையாக்கும்போது சந்தையின் சுதந்திரத்தை அனுமதிப்பதா, அரசின் தலையீட்டை நிறுவுவதா என்ற கேள்வி முன்னுக்கு வரும், துரதிருஷ்டவசமாக பிரணாப் போன்ற ஒரு மனிதர் பின்னதற்குத் தான் வாதிடுவார்" என்று பிசினஸ் லைன் நாளேடு தலையங்கம் எழுதிப் புலம்பியது. ஆனால், முகர்ஜி இந்த விமர்சனங்களை எல்லாம் புரிந்து கொண்டு, பெருமுதலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசத் துவங்கிவிட்டார். பிரதமரும் பொருளாதார சீர்திருத்தங்கள் வேகமாகத் தொடரும் என்று தமது முதல் பத்திரிகை செய்தியிலேயே அறிவித்தார்.


ஜூலை 2008ல் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த விவாதங்களுக்கு எழுத்துபூர்வமாக அளித்த தமது பதிலுரையில் டாக்டர் மன்மோகன் சிங் இடதுசாரிகள் தம்மை அவர்களது கொத்தடிமையாக நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பொருள் என்ன? 'இந்திய அரசியல் சாசன சட்டத்தின்முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கிற விதத்தில் நாங்கள் செயல்படுகிறோம், இடதுசாரிகள் விடமாட்டேன்' என்கிறார்கள் என்று அவர் சொல்லமுடியாததன் மொழிபெயர்ப்பு வாக்கியம் அது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற அபாரமான நூலை எழுதிய ஜான் பெர்க்கின்ஸ், நாட்டின் அதிபர்களை உலக வங்கியின் கொடிய கரங்கள் எப்படி வளைத்துப்போட்டன, மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் எப்படி சூறையாடப்பட்டன என்று அப்பட்டமான உண்மைகளைப் பதிவு செய்துவிட்டு, தமது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகரமான இந்த நூலாக்கத்தில் தான் ஏன் இறங்க நேர்ந்தது என்பதை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். தமது பாவங்களைக் கழுவிக் கொள்ளும் இந்த முயற்சிக்குத் தம்மைத் தூண்டியது தமது அன்புமகள் என்றும், இதனால் தான் மரணத்தைத் தழுவ நேர்ந்தாலும் மகிழ்ச்சியே என்றும் எழுதும் பெர்க்கின்ஸ் இப்படி முடித்திருந்தார்: "நியூ ஹாம்ப்ஷயரில் கள்ளம் கபடமற்ற பாலகனாக வளர்ந்த நானா அப்படியொரு அடியாளாக மாறினேன் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது".


சாதாரண மக்கள் லஞ்சத்தையும் ஊழலையும் புரிந்து கொள்கிற பாணியே வேறானது. அவர்களுக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீதும், தாசில்தார் மீதும் ஏற்படுகிற கோபம் நாட்டையே விலைபேசுகிற ஆட்கள் ஏற்படுவதில்லை. அவர்கள் பாவம் தமது அன்றாடத் தேவைகளுக்கு எதிரான வில்லன்களை மீறி பெரிய தாதாக்களை அறிய முடிவதில்லை. இல்லையென்றால், தங்களது வாக்குரிமையை கேவலம் பணத்தை வைத்து யாரையும் விலைபேசி விட அனுமதிப்பார்களா? ஒரே ஒரு புதுச்சேரி சரவணன் கோபப்பட்டு காங்கிரஸ் எம்.பி., (இப்போது அமைச்சர்!) நாராயணசாமி பெயருக்கு லஞ்சப் பணத்தை டிமாண்ட் டிராப்டு எடுத்து முகத்தில் வீசியிருகிறார். அவர் என்ன ஆகப்போகிறாரோ, அவரது தார்மீகத் துணிச்சலைப் பாராட்டி அந்த உணர்வைப் பாதுகாக்கும் பொறுப்பு நாகரிக சமூகத்திற்கு இருக்க வேண்டும்.


வெள்ளைத்துரையை எதிர்த்து கட்டபொம்மன் பேசியதாக எழுதப்பட்ட சிவாஜி கணேசன் வசனத்தை திருமண வீடுகளில் ஒலிச்சித்திரம் போட்டுக் கேட்டுக் கொள்ளவும், பள்ளிக்கூடங்களில் மாறுவேடப் போட்டிக்கு ரசித்துக் கொள்ளவும் மட்டும் பழக்கிக் கொண்டிருக்கிற சமூகமாக மாறிவிட்டோம். ஏகாதிபத்தியம் என்று சொன்னால், ஆரம்பிச்சிட்டாங்கய்யா என்று அலுத்துக் கொள்கிற மத்திய தர வர்க்கம், உலக நிதி நெருக்கடியின் சூத்திரக் கயிறு எங்கே இருக்கிறது என்று விவாதிக்கத் தயாராயில்லை. ஐ டி துறை வேலைகளின் திடீர் மகிழ்ச்சி போலவே அதன் திடீர் அதிர்ச்சியையும் தனித்தனி நபர்களின் அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே விளங்கிக் கொள்ள விரும்புகின்றனர்.
அதனால்தான், தினமலர் போன்ற ஒரு நாளேடு மக்களுக்கு எதிரான விஷயங்களையே சாதுரியமாகத் தலைப்பிட்டு அவர்களிடமே விற்றுப் பிழைக்க முடிகிறது. இடதுசாரிகள் தாம் சந்தித்த தேர்தல் தோல்வியைக் குறித்த படிப்பினைகளோடு மீண்டும் இயக்கத்தைத் தொடரவே செய்வார்கள். அவர்களது போராட்டங்கள் நாடாளுமன்றத்தோடு மட்டும் எப்போதும் சுருங்கியிருக்கவில்லை. அங்கே அவர்களது பாத்திரம் இப்போது மட்டுப்பட்டுப் போயிருப்பதில் சாதாரண மக்கள் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை.
ஏற்கெனவே காசுள்ளவர்களுக்கே கல்வி என்று தனியார் கல்வி வள்ளல்களின் கருணையின் கீழ் வாழத் தள்ளப்பட்டிருக்கிற தேசத்தில், அந்நிய பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்து விடுவோம் என்றும், கல்வியில் அந்நிய நிதி முதலீட்டை வரவேற்போம் என்றும் புதிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆரம்பித்து வைக்கிறார். எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களைப் பங்கு விற்பனை செய்யப்போகிறோம் (அதாவது தனியார்மயப்படுத்தப் போகிறோம்) என்ற அறிவிப்பையும் புதிய, நிலையான மற்றும் இடதுசாரிகளின் தயவு தாட்சண்யம் தேவைப்படாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்திருக்கிறது.



நிதித்துறை சீர்திருத்தமும், பென்ஷன் சீர்திருத்தமும் உடனடி நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்றும், இதற்கெல்லாம் அடிப்படையாக முதலில் தொழிலாளர் சட்டங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்கும் முன்னுரிமை வேண்டும் என்றும் உறுதியாகப் பேசத் தொடங்கிவிட்டனர். பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட், துணைவங்கிகளை ஸ்டேட் வங்கியோடு இணைக்க வேண்டுமென்ற தனது வீர சபதத்தை முதற்கண் நிறைவேற்றிக் கொள்ளத் தயாராக நிற்கிறார். அமெரிக்காவில், கடந்த ஆண்டு முழுக்க கவிழ்ந்த வங்கிகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு ஜூன் துவங்குமுன் கவிழ்ந்த வங்கிகள் எண்ணிக்கை மிஞ்சிவிட்டது. ஆனாலும், இந்தியாவிலோ நிதித்துறையை ஒழித்துக் கட்டத் துடியாய்த் துடித்தவர்களே ஆட்சிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


உலகின் அசுர மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. மணிக்கணக்கில் ஊதியம் பெறும் 61,000 பேருக்கும், நிரந்தர தொழிலாளர் சில ஆயிரம் பேருக்கும் கணக்குகளை 'செட்டில்' பண்ணிக் கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. கம்பெனியின் அதிகப்படி பங்குகளை அரசுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்ல வேண்டிய நிலையில் முதலாளித்துவக் கோட்டையின் அதிபர் பாரக் ஒபாமா இருக்கிறார். அமெரிக்காவில் தங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த மக்களின் மருத்துவச் செலவுகள் முதற்கொண்டு எல்லாத் தேவைகளுக்கும் முழு நாமம் போட்டுவிட்டு ஏய்த்த நிறுவனங்களை இங்கும் வரச் சொல்கிறது இந்திய அரசு. நிதித்துறை, எண்ணெய், தகவல் தொலை தொடர்பு, விமானத் துறை எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் படுவேகத்தில் பறக்கும் என்று பிசினஸ் லைன் நாளேடும் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறது.


தொலைதூர இலத்தீன் அமெரிக்காவில் ஈக்குவடார் என்ற மிகச் சிறிய நாடு ஒன்று இருக்கிறது. இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் ராஃபேல் கொரியா, கொள்ளை லாப அந்நிய கம்பெனிகள் தேச சொத்துக்களாக மாற்றப்படும் என்று அரசியல் சாசன சட்டத்திலேயே வழிவகை செய்யும் திருத்தம் செய்துதான் தேர்தலையே சந்தித்து அதிரடி வெற்றி பெற்றிருகிறார். வெற்றி பெற்றதும் நாட்டின் பட்ஜெட்டில் சரிபாதி செலவினங்கள் கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத்திட்டங்களுக்கே என்று முதல் அறிவிப்பும் விடுத்திருக்கிறார். கிழக்கே வலுமிக்க பொருளாதாரமாகப் பேசப்பட்ட ஜப்பானிலிருந்தும் ஒரு செய்தி வந்திருக்கிறது. பத்தாண்டுகளாகத் தங்கள் நாட்டில் வேலை பார்த்துவரும் சுமார் 3 லட்சம் அந்நிய தேசத்தவரை (பெரும்பாலும் பிரேசிலைச் சேர்ந்தவர்கள்) அவர்களது தாயகத்திற்கு நடையைக் கட்டுமாறு பயணச்செலவும் நஷ்ட ஈடும் கொடுத்துத் துரத்திக் கொண்டிருக்கிறது நெருக்கடியில் சிக்கித் திண்டாடும் ஜப்பான்.


இப்படி இரண்டு வழிகள் இருக்கின்றன - இந்தியா எதைத் தேர்வு செய்யப் போகிறது? நாம் கேட்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசை அல்ல, அவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டு உட்கார்ந்திருக்கும் அதன் சாதாரண - நாளொன்றுக்கு இருபது ரூபாய் கூட ஈட்ட இயலாதிருக்கிற 83.6 கோடி பேரையும் உள்ளடக்கிய - தங்கள் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிற பாமர மக்களைத்தான்.
தேர்தலோடு எதுவும் முடிந்துவிடுவதில்லை, ஆட்சியாளர்களுக்கும் சரி, அவர்களைப் பதவியில் அமர்த்தியவர்களுக்கும் சரி.


(திரு.எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் Bank workers unity பத்திரிகைகாக எழுதிய கட்டுரை இது.)