Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, January 7, 2011

எந்திரன் வெற்றியா.. தோல்வியா..? ரஜினி குழப்பம்


முன்பெல்லாம் படம் வெளியாகி 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என்று தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்படும். வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். வெற்றிப்படமாக இருந்தால் கிட்டத்தட்ட அந்த 175 நாட்களையும் விழாக்காலமாக ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் என்று பலரும் சொல்லிக் கொள்ளும் எந்திரன் பல திரையரங்குகளில் இருந்து வெளியேறிவிட்டது. ரசிகர்கள் மூலம் இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், திரைப்படத்துறையின் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் தொலைபேசி எண்களைத் தட்டியிருக்கிறார்.

திரையிடப்பட்ட அரங்குகளில் இன்னும் எத்தனை அரங்குகளில் எந்திரன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற விபரங்களை அவரிடம் கேட்டிருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தனின் பதிலை வைத்து ரஜினியின் ஆய்வு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், திரைப்பட வட்டாரங்களில் எந்திரன் தயாரிப்புக்கும், விளம்பரத்திற்கும் செய்த செலவோடு ஒப்பிட்டால் படம் தோல்விதான் என்று பேசிக் கொள்கிறார்கள். அதுவும் யதார்த்தமான கதையைக் கொண்ட மைனாவின் வெற்றியைப் பார்த்தால், எந்திரன் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்கிறார்கள்.

Thursday, September 17, 2009

அக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..?

பணத்தை அதிகமாகக் கொட்டி எடுக்கிறார்களோ அல்லது சிக்கனமாக எடுக்கிறார்களோ, தாங்கள் பார்க்கும் படங்களில் மருந்துக்காவது கதை இருக்கிறதா என்று ரசிகர்கள் பார்க்கும் காலமிது. இதனால் கதையைத் தேடி அலையும் திரைப்படத் துறையினர், புதிதாக எதுவும் கிடைக்காவிட்டால் பழைய கதையை மாற்றிப் போட்டாவது ஏதாவது பண்ணி விடலாமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பெரும் ஆரவாரத்துடன் வெளிவந்துள்ள கந்தசாமி திரைப்படத்தின் தோல்வியும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் யோசிப்பதற்காக ரூம் போடச் செய்துள்ளது. புதிதாகக் கதையைத் தேடுவானேன் என்று நினைத்த இயக்குநர் பி.வாசு ஏதாவது ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து விடலாமே என்று ரூம் வாடகையை மிச்சம் பிடிக்கத் திட்டமிட்டார்.

அவருக்கு உடனே தோன்றியது சந்திரமுகி படம்தான். ரஜினிகாந்தையே அதில் நடிக்க வைத்து விடலாம் திட்டமிட்டார். அவரோ எனக்காகக் காத்திராமல் வேறு கதையை எடுக்கலாமே என்று கூறிவிட்டாராம். மீண்டும் கதையைத் தேடத் தொடங்கி விட்டார் பி.வாசு. இவரைப்போல பலரும் கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் நாலு சண்டை, நாலு பாட்டு போதும் என்றிருந்த காலம்போய் இப்படியொரு காலம் வரும் என்பதை பலர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் விரும்புவதால்தான் மசாலாப்படங்களை எடுக்கிறோம் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்த பல இயக்குநர்களுக்கு புதிய சூழல் சவாலாக உருவாகியுள்ளது. கதைக்கா பஞ்சம்... ஹாலிவுட்காரர்கள் பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து படத்தை எடுத்து, முதலாளித்துவம் - ஒரு காதல் கதை என்று கிண்டலாகவும் பெயர் வைத்துவிட்டார்கள்.

கதைகளை வீடுகளுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் புகுந்து திருடிக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு சமூக நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளைப் படமாக்கலாமே... அக்கா மாலாவையும், கப்சியையும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் மக்கள் ரசித்துப் பார்த்தார்களே...?