Monday, May 2, 2011

"இலவசம்" அல்ல, நியாயமான பங்கீடுதான்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கருத்துப் பிரச்சாரத்தைத் தவிடு பொடியாக்கி விடுகிறோம் என்று கிளம்பியிருக்கும் எழுத்தாளர் சோலை மற்றும் திமுக வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் ஆகிய இருவருமே ஒரு புதிய சாதனையைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட "இலவச" மாநிலங்களவை உறுப்பினர் பதவி. இதில் திருச்சி செல்வேந்திரன் ஒருபடி மேலே போய் "கலைஞரின் எத்தனையோ அறிவிக்கப்படாத இலவசங்களில் ஒன்று" என்று புளகாங்கிதமாகக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினரானபிறகு, தற்போது தோழர்.டி.கே.ரங்கராஜன் கட்சி சார்பில் சென்றிருக்கிறார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவ்வொரு முறை மாநிலங்களவைத் தேர்தல் வரும்போதும், இந்த 15 உறுப்பினர்கள் திமுக சார்பில் நிற்பவர்களுக்கு தங்கள் வாக்குகளை(இலவசமாகத்தான்!) அளிப்பார்கள். அந்த சட்டமன்றத்தின் காலகட்டத்தில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஒரு இடத்தைக் கோரிப் பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒன்பது உறுப்பினர்கள் என்ற நிலையில்தான் மீண்டும் தங்கள் நியாயமான கோரிக்கையான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்பதை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினரானதன் பின்னணி.

தங்களைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதால்தான் இலவசங்கள் என்று நியாயமான பகிர்வைப் பற்றியும் திமுகவினர் நினைத்துக் கொள்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைந்தபோது, இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் உருவானது. அது நாங்கள் போட்ட இலவசம் என்று திமுகவைப் பார்த்து இடதுசாரிகள் ஒருபோதும் ஏகடியம் செய்யவில்லை. சொல்லப்போனால், திமுகவின் பங்கோடு, இலவசமாக மதிமுகவினருக்கான அமைச்சர்கள் பதவியையும் கேட்டு வாங்கிச் சென்றதுதான் திமுக. ஐக்கிய முன்னணி ஆட்சி தொடர திமுக வெளியேறினால் போதும் என்று காங்கிரஸ் சொன்னபோது, திமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள் நின்றார்கள். அதை இலவசம் என்று இடதுசாரிக்கட்சிகள் குத்திக் காட்டவில்லை.

1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் அரசு அமைந்தது. அதில் தி.மு.க.வும் இடம் பிடித்தது. இத்தனைக்கும் ஒரு மக்களவைத் தொகுதிகளில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அந்த அரசும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவால்தான் உருவானது. இதையும் எந்தக்காலகட்டத்திலும் இலவசம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும். முரசொலி(ஏப்.29 வெளியூர் பதிப்பு) நாளிதழில் திருச்சி செல்வேந்திரன் எழுதுகிறார். "இனிமேல் தொழிற்சங்கப் பொன்மொழிகளான தர்ணா, கேரோ போன்ற வார்த்தைகள் மேற்கு வங்கத்துக்குள்ளே கேட்கக்கூடாது. ஒழுங்காய் இருங்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சொன்னதாகக் கதைவிடுகிறார். இன்றைக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். இங்கு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்கிறோம் என்றாலே முதுகுத்தண்டைக் கீறிவிடும் அளவுக்கு காவல்துறையை ஏவிவிடும் திமுக அரசைத்தான் பார்க்க முடிந்தது.

"குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டவன் எல்லாம் குற்றவாளி அல்ல..." என்று கனிமொழிக்கு ஆதரவாக முழங்கியுள்ளார் செல்வேந்திரன். "கரும்பாலையில் வேலை செய்த ரங்கராஜனுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் அது புத்திசாலித்தனமாக இருக்காது" என்கிறார். மக்கள் பணம் 1,76,000 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல்வரின் மகளும், கட்சியின் எம்.பி.யுமான கனிமொழி சேர்ந்து சதி செய்தார் என்று மத்தியப்புலனாய்வுக்குழு சொல்கிறது. இவரோ கரும்பாலையில் தரும் மெமோ பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் கொல்கத்தா பதிப்பு வெளியிட்ட பொய்ப்பிரச்சாரக் கட்டுரை ஒன்றை எடுத்து, தலித் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் ஒரு ஆண்டு கழித்து பிரசுரித்துள்ளன. இதைத்தான் கரைத்துக் குடித்துவிட்டு செல்வேந்திரன் சொல்கிறார், பதினேழாயிரம் தலித்துகள் குழந்தை, குட்டிகளோடு சுட்டுக்கொன்று கடலிலே மூழ்கடித்த கொடுமை என்று. இதற்கு ஏற்கெனவே தீக்கதிரில் பதில் சொல்லப்பட்டுள்ளதை செல்வேந்திரன் படிக்காதது நமது குற்றமல்ல. அப்படியொரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கமான கம்யூனிச எதிர்ப்புப் பிதற்றல் அது. இதற்கு மாய்ந்து, மாய்ந்து எதை எழுதச் சொல்கிறார்?

திமுக பற்றிய எகனாமிக் டைம்ஸ் கருத்து போட்டியாளரின் கருத்து என்கிறார். உண்மைதான். அனைத்து வர்த்தகத்துறைகளிலும் முதல்வரின் குடும்பம் நுழைந்துள்ளதால், யார் குறை கூறினாலும் அது போட்டியாளரின் கருத்து என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏகபோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஒரு இடத்தில் "ரெங்கராஜன் நம்முடைய வர்க்க விரோதி" என்கிறார் செல்வேந்திரன். தெரிந்தோ, தெரியாமலோ, பெரியாரின் வாக்கியம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

"நம்முடைய எதிரி உன்னை யோக்கியன் என்று சொன்னால், நீ அயோக்கியன் என்று அர்த்தம். அவர்கள் கெட்டவன் என்று சொன்னால்தான் நீ நல்லவன் என்று அர்த்தம்" என்பதுதான் அந்த வாக்கியம். எதிரி முகாமில் இருக்கும் செல்வேந்திரன், தோழர். டி.கே.ரங்கராஜனைப் பார்த்து வர்க்க விரோதி என்கிறார். பெரியாரின் வார்த்தைகளையே செல்வேந்திரனுக்கு சமர்ப்பிப்போம்.

1 comment:

  1. முரசொலிக்கு நல்ல பதில், எப்போதெல்லாம் தங்களால் பதில் கூறமுடியவில்லையோ அப்போது பார்ப்பனீயத்தை ஆயுதமாக கையில் எடுப்பார்கள். பிராமண சாதியில் பிறந்திருந்தாலும் சாதியை மறுத்து சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டதை மறைக்கிறார்கள், மட்டுமல்ல, பார்ப்பனீய கொள்கையை இன்றளவும் செயல்படுத்துகிற பாஜகவுடன் மந்திரிபதவிகளுக்காக குலாவினார்கள்.

    ReplyDelete