Showing posts with label தீண்டாமை. Show all posts
Showing posts with label தீண்டாமை. Show all posts

Sunday, December 4, 2011

தகர்ந்தது சங்ககிரி தீண்டாமைச்சுவர்!



சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்திற்கு வெற்றி


சேலம் மாவட்டம் சங்ககிரி சன்னியாசிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தீண்டாமைச்சுவர், அப் பகுதி அருந்ததிய மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களால் இடிக்கப்பட்டது.

சங்ககிரியிலிருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் இந்த சன்னியா சிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. சுமார் 450 அருந்ததிய மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஊராட்சி தலைவராக இருந்து வந்துள்ளனர். இம் முறை பொது ஊராட்சியாக மாற்றப்பட்டதால், மற்ற சமூகத்தினரின் ஆதரவுடன் மகேஸ்வரி என் பவர் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்குப் பிறகு அருந்ததிய மக்களுக்கு பல் வேறு தொல்லைகள் துவங்கின. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படுவதில்லை. இந்நிலையில் தான் இந்த மக்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து தங்கள் பகுதியை அடைவதற்காகப் பயன்படுத்தி வந்த தார்ச் சாலையின் குறுக்கே திடீ ரென்று சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. நவம்பர்29 ஆம் தேதி கட்டப்பட்ட இந்த சுவரின் கட்டுமானப்பணி யை ஊராட்சித்தலைவர் மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட பலர் மேற்பார்வை செய்ததாக அருந்ததிய மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் செய்தனர்.

இந்தத் தீண்டாமைச்சுவர் அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டங்களைத் துவக்கின. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் அ. சவுந்தரராசன், மாவட்டச் செயலாளர் ஆர். வெங்கடபதி உள்ளிட்ட தலைவர்கள் தீண்டாமைச் சுவரைப் பார் வையிட்டதோடு, மக்கள் நடத்திய போராட்டத்திலும் இணைந்து கொண்டனர். அதிகாரிகளைச் சந்தித்த அ.சவுந்தரராசன், தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுவர் இடிப்பு

உறுதியான போராட்டத்தால் டிசம்பர் 4 ஆம் தேதியன்று காலை சங்ககிரி தாசில்தார் தலைமையில் வந்த அரசு ஊழியர்கள் பொதுச் சாலையை ஆக்கிர மித்துக் கட்டப் பட்டிருந்த தீண்டாமைச் சுவரை இடித்து தரை மட்டமாக்கினர். மீண் டும் மக்கள் பயன்படுத்தும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டது.

போராடிய மக்களை நேரில் சந்தித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.நர சிம்மன், செயலாளர் ஆர். குழந்தைவேல், உதவி செய லாளர் என்.பிரவீண்குமார் , மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Sunday, July 24, 2011

"தனியறை"யில் எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு!

ஒரிசாவில் தொடருகின்றன தீண்டாமைக் கொடுமைகள்

நலத்திட்டங்களை பரிசீலனை செய்யச் சென்ற இடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மட்டும் தனியறையில் அமரச் செய்து உணவளித்த கொடுமை ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் காஷிநாத் மல்லிக். தஸ்பல்லா என்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவராவார். நயாகர் என்ற இடத்தில் மாவட்டத்தின் நலத்திட்டங்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றிருக்கிறது. இவரைத் தவிர மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் ருத்ர மாதவ் ரே, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அக்கூட்டத்திற்காக வந்திருந்தனர். காலையில் கூட்டம் நடந்தது. மதிய உணவுக்காகக் கலைந்தபோது, காஷிநாத் மல்லிக் மட்டும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏன் என்று அவர் கேட்டபோது அந்த அறையில் இடம் இல்லை என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

மற்றவர்கள் தட்டில் சாப்பிட்ட நிலையில், இவருக்கு இலையில் சாப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி.யும், சட்டமன்ற உறுப்பினர்களும் கவுரமாக நடத்தப்பட்ட நிலையில் தான் மட்டும் மோசமாக நடத்தப்பட்டதற்கு மல்லிக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இத்தகைய சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னைக் கீழ்த்தரமாக நடத்தியது பற்றி அவர் ஒரிசா சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். நான் தலித் என்பதால்தான் தனியறையில் வைத்து சாப்பாடு போட்டனர் என்று காஷிநாத் மல்லிக் அதில் குறிப்பிடுகிறார்.

அப்பகுதி மக்களவை உறுப்பினரான ருத்ர மாதவ் ரே, ஆதிக்க சாதி மனப்பான்மையோடு இருக்கிறார் என்று நீண்டநாட்களாகவே மல்லிக் குற்றம்சாட்டி வருகிறார். சாதி பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினார் என்று அவர் மீது ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையம் வரை புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை திரும்பப் பெ வேண்டும் என்று மாநில முதல்வரான நவீன் பட்நாயக் கூறியும், இல்லை... சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று மல்லிக் உறுதியாக இருந்துவிட்டார். தனது மனைவியையும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார் என்பதும் மல்லிக், ருத்ர மாதவ் ரே மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

சட்டமன்ற உறுப்பினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண தலித் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றிய புகார்களை அப்பாவி மக்கள் கொண்டு வரும்போது இவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்பது இந்த அமைப்புகளின் கேள்வியாகும்.

கடவுளை நெருங்காதே..!



ஒரிசா
மாநிலத்தின் பல பகுதிகளில் தலித்துகள் கோவில்களில் நுழைய முடிவதில்லை. "அரிசனங்கள் இங்கிருந்து வழிபடலாம்" என்ற அறிவிப்புப் பலகை சில கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, உள்ளே நுழையக்கூடிய சில கோவில்களில்கூட எங்கிருந்து கும்பிட வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். புரி மாவட்டம் நுவாபடா என்ற கிராமத்தில் உள்ள காளி கோவிலுக்குள் மூன்று இளம் தலித் பெண்கள் நுழைந்து வழிபட்ட பிறகுதான் இத்தகைய அறிவிப்புப் பலகைகளை வைத்தனர். நவீன மயமாகியுள்ளதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில், அதுவும் கடந்த ஆண்டில்தான் இந்தப்பலகை வைக்கப்பட்டது. கடவுளை இவர்கள் நெருங்கினால் அது ஊருக்கு நல்லதில்லை என்று சரடு விடுகிறார்கள் ஆதிக்க சாதியினர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை அமல்படுத்துவதிலும் சாதி ரீதியான பாகுபாடு உள்ளது. மற்றவர்களுக்கு தரப்படும் ஊதியம் தலித்து மக்களுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக தலித் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் வேலையைத்தான் நாங்களும் செய்கிறோம். எதற்காக இந்த பாகுபாடு என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சந்தனா போய். ரனபாடா என்ற இடத்தில் கோவிலுக்குள் தலித்துகள் நுழைந்ததைக் காரணம் காட்டி, 80 தலித் குடும்பங்களின் விளைநிலங்களில் ஆதிக்க சாதியினர் அறுவடை செய்து அள்ளிச்சென்ற கொடுரமும் நடந்துள்ளது.

Thursday, December 30, 2010

தலித்தா... நாற்காலி கிடையாது, போ...!!

தலித் என்ற ஒரே காரணத்தால் அரசுப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நாற்காலி மறுக்கப்பட்ட அவலம் நேர்ந்துள்ளது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில்தான் இந்தக் கொடுமை.

2005 ஆம் ஆண்டில் பணியில் அமர்ந்த அவர், முதல்நாள் முதல் இன்று வரை தரையில் அமர்ந்துதான் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நாற்காலியில் அவர் அமர்வதை மற்ற ஆசிரியர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் அவர் கடந்த மாதத்தில் புகார் கொடுத்தார்.

அவர் புகாரை ஏற்றுக்கொண்டு தலைமையாசிரியர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். போனவர், திரும்பியும் வந்துவிட்டார். இருப்பினும் ஆதிக்க சாதி மனப்பான்மை கொடிகட்டிப் பறக்கிறது. நாற்காலி தர இன்னும் மறுத்தே வருகிறார்கள். ஆசிரியையின் உரிமைப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, December 28, 2010

மதம் மாறியும் ஒழியாத சாதிப்பீடை..!



சென்னையில் நல்ல வேலையில் இருப்பவர் ஜெயன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பல திருமணப்பதிவு மையங்களிலும் பதிவு செய்து இருந்தார்.

அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.

மதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.

சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.

பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.

நகரம் விரிவடைகையில் தலித்துகளை சிறைப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களின் சுவர்கள், சாதி வெறியர்களின் முன்பாக தலித்துகள் செல்போனில் பேசவியலாமை போன்ற நவீன தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலில் திருமணப் பதிவில் சாதி தடையில்லை என்று கூறிவிட்டு தலித்-பழங்குடி வேண்டாம் என்று சொல்லும் கொடுமையும் சேர்கிறது.