
தங்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாக சக ராணுவத்தினர் மீது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் 3 ஆயிரத்து 230 புகார்களை அளித்துள்ளனர்.
|
தங்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாக சக ராணுவத்தினர் மீது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் 3 ஆயிரத்து 230 புகார்களை அளித்துள்ளனர்.
|
சென்னையில் நல்ல வேலையில் இருப்பவர் ஜெயன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பல திருமணப்பதிவு மையங்களிலும் பதிவு செய்து இருந்தார்.
அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.
மதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.
சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.
பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.
நகரம் விரிவடைகையில் தலித்துகளை சிறைப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களின் சுவர்கள், சாதி வெறியர்களின் முன்பாக தலித்துகள் செல்போனில் பேசவியலாமை போன்ற நவீன தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலில் திருமணப் பதிவில் சாதி தடையில்லை என்று கூறிவிட்டு தலித்-பழங்குடி வேண்டாம் என்று சொல்லும் கொடுமையும் சேர்கிறது.
தமிழகத்தில் உள்ள அட்டவணை சாதியினரில் மூன்று பிரிவுகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவையாகும். பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய பிரிவுகளே அவை. நீண்ட நெடுங்காலமாக சாதி ரீதியான ஏற்றத் தாழ்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகப் பெற்ற உரிமைகளில் அட்டவணை சாதியினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றாகும். மனிதகுலம் சந்திக்கும் எந்த நெருக்கடியைப் பட்டியலிட்டாலும் இந்தியாவைப் பொறுத்த வரை, இந்த அட்டவணை சாதியினர்தான் அதில் அதிக நெருக்கடியைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்.
|
தான் செய்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைக்குச் சென்று திரும்பி வந்த ஒருவர் தன்னைவிட்டு அனைவரும் ஒதுங்கிப் போவதால் கோபமாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு அந்த விபரம் கிடைத்தது, பக்கத்துத் தெருவில் ஒரு முன்னாள் கைதி இருக்கிறார் என்று.
உற்சாகத்துடன் அவரைப் பார்க்கக் கிளம்பினார்.
"வணக்கம்... என் பெயர் கேசவன்.."
"சொல்லு... கேசவா.. என்ன விஷயமா என்னப் பாக்க வந்த.."
"நானும் உங்கள மாதிரிதான்..."
"அப்படின்னா..."
"உங்கள மாதிரியே ஜெயில்ல இருந்துட்டு வந்தேன்..."
"எத்தனை வருஷம் இருந்த..."
"ஒரு வருஷம் இருந்துட்டு வந்தேன்..." இப்படி சொல்லி முடிப்பதற்குள் ராமசாமிக்கு வந்த கோபத்தைப் பார்த்து கேசவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"நாயே... ஓடிப்போயிடு... ஒரே ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்து உங்கள மாதிரின்னு எனக்கு சமமா இருக்குற மாதிரி பேச எவ்வளவு தைரியம் இருக்கணும்..."
கேசவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏழு ஆண்டு சிறையில் இருந்த அனுபவசாலி என்ற உயர்வு(!) மனப்பான்மைதான் கோபத்துக்குக் காரணம் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேசவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கோபம் வந்துள்ளது போலும். தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்போடு ராகுல் காந்தி ஒப்பிட்டவுடன் மூக்குக்கு மேல் கோபம் வந்து பொங்கி எழுந்துவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இரண்டு அமைப்புக்கும் உள்ள வேறுபாட்டை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ்.
என்ன வேறுபாடு மாதவ் அவர்களே... காந்தி கொலை செய்யப்பட்டவுடன் தடை செய்யப்பட்ட உங்களோடு, போயும், போயும் இப்போது தடை செய்யப்பட்டுள்ள சிமியோடு ஒப்பிட்டதால் உங்களுக்கு இழுக்கு நேர்ந்துவிட்டதா?
மதக்கலவரங்கள் நடந்த ஒவ்வொன்றிலும் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களில் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்.சை நோக்கிதான் விரல்கள் நீண்டுள்ளன என்பதால்தான் ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது என்கிறீர்களா..?
அவர் சொன்னது தவறுதான். அண்மைக்காலங்களில் உங்களோடு தொடர்புடையவர்கள் எவ்வளவு, எவ்வளவு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்கள். தென்காசியில் சொந்த அலுவலகத்திலேயே குண்டுவைத்து சாதனை நிகழ்த்திய இந்து முன்னணியைப் பெற்ற தாயல்லவா ஆர்.எஸ்.எஸ்.?!
உங்க "சீனியாரிட்டி" தெரியாமல் பேசிவிட்டார் ராகுல்காந்தி. பாவம், அவரை விட்டுவிடுங்கள்.
- ஹரி.
நன்றி : தீக்கதிர்
என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றால் விவசாயம் என்று சொல்லலாமே ஒழிய, அவருக்கென்று நிரந்தரத் தொழில் எதுவும் கிடையாது. ஆனால் பலரும் கையில் எடுக்க அச்சப்படும் ஒரு விஷயத்தில் போராடி நின்று வெற்றி பெற்றுள்ளார் 55 வயதாகும் சந்திரபதி என்ற பெண்மணி. ஜூன் 15, 2007 அன்று மனோஜ் மற்றும் அவரது மனைவி பப்லி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்கள் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டவிரோதமாக ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள்.
இவர்கள்தான் ஊர்ப்பெரியவர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்பவர்கள். அவ்வாறு திருமணம் செய்த மனோஜ் மற்றும் பப்லி ஆகிய இருவரும் படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட மனோஜின் தாய்தான் சந்திரபதி. இந்தக் கொடுரத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஊர்க்கட்டுப்பாடு என்று பயந்து நடுங்கி இருந்து கொள்ளாமல் பஞ்சாயத்து தலைவர்களிலிருந்து கொலைகாரர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களில் பப்லியின் உறவினர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டணையும், பஞ்சாயத்துத் தலைவர் கங்கா ராமுக்கு ஆயுள் தண்டனையும் மார்ச் 30 அன்று வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மூன்றாண்டுக்காலத்தில் ஏராளமான தடைக்கற்களை சந்திரபதி சமாளிக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக ஊரே அவரை சமூகப்புறக்கணிப்பு செய்தது. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கோத்திரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள குழந்தைகளுக்கு உரிமையுள்ளது என்றார் அவர். காலம் இப்போது பெரும் அளவில் மாறியிருக்கிறது. தங்கள் வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்வு செய்யும்போது பெண்கள் ஆதரவு தர வேண்டும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று கூறுபவர்கள்தான் உண்மையில் கொலை செய்கிறார்கள் என்று பொரிந்து தள்ளுகிறார் சந்திரபதி.
இந்தப் போராட்டத்தில் அவருக்கு முதலில் கைகொடுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்போது வழங்கப்பட்டுள்ள கர்நால் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியானா மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான், ஒவ்வொரு நபரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை காக்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு நம்புகிறது என்றார். வழக்கம்போலவே, பாஜகவின் கருத்து மழுப்பலாகவே இருந்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான கேப்டன்.அபிமன்யு கூறுகையில், காலத்தின்போக்கில் மாற்றமும் வரும் என்று கூறிக்கொண்டார். இவர் ஜாட் சாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இரூப்பதாலேயே இந்த மழுப்பல் பதில் வருகிறது.
சந்திரபதிக்கு ஆதரவான கருத்து சொல்பவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஜாட் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எம்.எ°.மாலிக் போன்றவர்கள் மறைமுகமாக இந்தக் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது 1946 ஆம் ஆண்டுவரை தடைசெய்யப்பட்டதாகவே இருந்தது என்று மழுப்புகிறார்கள். சாதி அமைப்புகள் கிராமப்புறங்களில் இன்னும் வலுவாக ஊடுருவியிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் எனது குழந்தைகளின் தியாகம் வீணாகிப்போய்விடாது. சமூகத்தில் மாற்றத்தை இவர்களின் தியாகம் கொண்டு வந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறார் சந்திரபதி.
உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்களே... அவர்களின் திருமணம் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், நான் அவர்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுடைய கோத்திரத்தில் உள்ளவர்களையோ அல்லது வெளியில் உள்ளவர்களையோ தங்கள் இஷ்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையேதும் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார் சந்திரபதி. இதுவரை கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளுக்கு ஆதரவாக இருந்த நிலை மாறி, சமூகநீதிக்காற்றின் திசை மாறியுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் அரியானாவைச் சேர்ந்த பலர்.
மீத்தேன் வாயு மெதுவாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் குட்டை போலக் காட்சியளிக்கும் இடங்களில் முட்டை விடுவது போல குமிழியை உருவாக்கி பிறகு உடைந்து அதன் மூலம் மீத்தேன் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அருகில் சென்றாலே குடலைப் பிடுங்கும் அளவுக்கு நாறிப் போய்க்கிடக்கிறது. புனித நதி என்றும், இந்துக்களால் கடவுள் என்றும் அழைக்கப்படும் யமுனை நதிதான் இவ்வாறு சீரழிந்துபோய்க்கிடக்கிறது. ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த யமுனை நதி, ஜீவனின்றிக் கிடப்பதுபோல தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தை உலகமே அனுசரிக்கப்போகிறது. ஆனாலும் இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான யமுனை தனது உண்மைத்தன்மையை இழந்து நிற்கிறது. புதுதில்லியின் உயிர்நாடியான யமுனை நதி பெரும் அளவுக்கு மாசுபட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் போய்ச் சேராததற்கு காரணம், நதி தெரியாத அளவிற்கு பெரிய, பெரிய சுவர்களும், மேம்பாலங்களும், சாலைகளும், ஆலைகளும் கட்டப்பட்டுள்ளதாகும். ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆற்றிற்கு மக்கள் செல்லும் வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த மக்களில்கூட 60 விழுக்காட்டினர்தான் யமுனை நதி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது °வேச்சா என்ற தொண்டு நிறுவனம். புதுதில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சமாகும்.
யாருமே யமுனையைப் பார்க்கவில்லை என்றால் அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்வேச்சா அமைப்பின் செயல் இயக்குநரான விமலேந்து கே. ஜா. தில்லியை வந்தடையும்வரை யமுனை மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. தலைநகருக்கு வெளியே நீர் மிகவும் தெளிவாக உள்ளது. பறவைகள் நீருக்கு மேல் பறந்து கொண்டிருப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. வலையைப் போட்டு மீன்களை அள்ளும் மீனவர்கள் மகிழ்ச்சியோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் ஆலைக்கழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த தில்லியின் சாக்கடைகள் யமுனையில் கலக்கத் துவங்குகின்றன. இந்தக் கலக்கலுக்கு முன்பே விவசாய நோக்கத்திற்காக அரியானா கட்டியுள்ள அணை மூலம் தங்களுக்குத் தேவையான நீரை அந்த மாநிலம் திருப்பிக் கொள்கிறது.
இமயமலையில் உருவாகி கங்கையில் சங்கமமாகும் யமுனையின் மொத்த நீளம் 1,370 கிலோ மீட்டராகும். இதில் வெறும் 22 கி.மீ. தூரம்தான் புதுதில்லியில் உள்ளது. ஆனால் யமுனை நதியை மாசுபடுத்துதலில் 80 விழுக்காடு பணிகள் இந்த 22 கி.மீ. தூரத்தில்தான் நடைபெறுகின்றன. தலைநகரின் பல பகுதிகளிலுமிருந்து 18 பெரிய சாக்கடைக் கால்வாய்கள் யமுனை நதியில் வந்து சேருகின்றன. யமுனையில் உள்ள ஆக்சிஜனில் பெரும்பகுதியை இந்தக் கழிவுகள் காலி செய்து விடுகின்றன. இந்த தண்ணீரால் விலங்குகளைக் கூட கழுவிவிடக்கூடாது என்று தில்லி நிர்வாகம் சொல்லும் அளவுக்கு நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது.
மேலும் ஒன்பது விழுக்காடு மாசு என்பது தில்லியைத் தாண்டியவுடன் ஆக்ராவில் நடக்கிறது. இந்த யமுனைக்கரையில்தான் உலகக் புகழ்பெற்ற தாஜ்மகால் அமைக்கப்பட்டுள்ளது. யமுனையின் தாக்கம் அதோடு நின்று விடுவதில்லை. மற்றொரு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கையில் கலந்து அதை மேலும் மாசுபடுத்தி விடுகிறது. தில்லியின் குடிநீர்த் தேவையை யமுனைதான் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தேவைப்படும் நீரை தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பே எடுத்துக் கொள்கிறார்கள். தலைநகருக்குள் இருக்கும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இது மாசுபடுதலை அதிகரித்துவிடும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாகும்.
தலைநகரில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குளிர் தாங்காமல் வீடில்லாத ஏழை மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதால்தான் அந்த உத்தரவு இடப்பட்டது. அவர்களின் பெரும்பாலானவர்கள் இந்த யமுனை நதிக்கரையில்தான் தங்குகிறார்கள். மாசுபடிந்து கிடக்கும் யமுனைதான் அவர்களுக்கு குளியலறை மற்றும் குடிநீர்த்தொட்டி. அவர்களைப் பொறுத்தவரை தண்ணீரே இல்லாமல் இருப்பதைவிட நாறிப்போயிருக்கும் தண்ணீரே பரவாயில்லை என்பதுதான் நிலை. தில்லியைத் தாண்டிய பிறகு யமுனை பாய்ந்து ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நதியைச் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. நம்முன் அதிகமாக மாசுபட்டு நிற்கும் யமுனையே அதற்கு சாட்சி என்கிறார் விமலேந்து ஜா.
அமிதாப் பச்சனுக்கு மல்லிகா சாராபாய்
திறந்த மடல்
எனதருமை பச்சன்ஜி,
குஜராத்தி என்ற முறையில் வாழ்த்துகிறேன். நீங்கள் உண்மையிலேயே ஒரு அற்புதமான நடிகர். நீங்கள் அறிவுகூர்ந்தவர். புத்திசாலித்தனமான வர்த்தகர். ஆனால் எந்தப் பொருளை வாங்க வேண்டுமென்று நீங்கள் விளம்பரங்களில் சொல்கிறீர்ளோ, அதை நான் நம்ப வேண்டுமா? உங்களுக்கு எதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?(பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்வாறு சொல்வதாக இருந்தாலும்..!). பிபிஎல், ஐசிஐசிஐ, பார்க்கர் மற்றும் லக்சர் பேனாக்கள், மாருதி வெர்சா, காட்பரி சாக்கலேட்டுகள், நெரோலக் பெயிண்ட்ஸ், டாபர், இமாமி, எவரெடி, சஹாரா சிட்டி ஹோம்ஸ், டிஙடமாஸ், பினானி சிமெண்ட் மற்றும் ரிலையன்ஸ். இதுதான் அந்தப் பட்டியல். தற்போது குஜராத்.
உங்கள் வீடு பினானி சிமெண்டால் கட்டப்பட்டதா? காட்பரி சாக்கலேட்டோ அல்லது டாபர் நிறுவனத்தின் ஹாஜ்மோலாவையோ உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா? எந்தப் பேனாவை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? விளம்பரத்துக்கான படப்பிடிப்பு நேரத்தைத் தவிர, வேறு சமயத்தில் மாருதி வெர்சா காரை ஓட்டியதுண்டா? வீட்டிற்காக வாங்கச் சொல்லும் நெரோலக் பெயிண்டில் ஈயம் இருக்கிறது. அது உங்களையும், மற்ற பலரையும் கொஞ்சமாக, கொஞ்சமாக விஷமேற்றி விடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?(உங்கள் வீட்டில் அந்த பெயிண்டைதானே பயன்படுத்துகிறீர்கள்..?). இல்லையென்றால், வெறும் பணத்துக்காகத்தான் இந்த விளம்பரங்களில் தோன்றுகிறீர்களா?
ஆனால் எந்தவித நேரடியான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளாமல் குஜராத்தை முன்னிறுத்த ஒப்புக்கொண்டீர்கள்? பிராண்ட் குஜராத்தை முன்னிறுத்தும் முடிவுக்கு எப்படி சரி என்று சொன்னீர்கள்? மாநிலத்தின் நிலை என்ன என்பதை கேட்டீர்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த முடிவும், அறிவிப்பும் ஒரே ஒரு சந்திப்பிற்குப் பிறகு வெளிவந்தது. அதனால்தான் குஜராத்தில் உள்ள நிலைமை பற்றி நீங்கள் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்.
அதனால் குஜராத்தி என்ற முறையில், எனது மாநிலத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த அனுமதி கொடுங்கள். துடிப்பான குஜராத் என்ற பெயரில் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் விழாக்களின் மூலம் லட்சக்கணக்கான கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை வெறும் 23 விழுக்காடு ஒப்பந்தங்கள்தான் அடைகின்றன என்பதை குஜராத் அரசே ஒப்புக்கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? பெரும் பணம் படைத்த வணிக நிறுவனங்களுக்கு எக்கச்சக்கமான மானியங்கள் அள்ளி வழங்கப்படுகின்ற வேளையில், 75 ஆயிரம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதனால் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்பது தெரியுமா?
குஜராத்தை வளப்படுத்த பெரும் முதலாளிகள் வரிசையாக நிற்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரை வளப்படுத்த? நமது ஏழைகள் பரம ஏழைகளாக மாறி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 1993 முதல் 2005 வரையில் வறுமைக்குறைப்பில் அகில இந்திய சராசரி 8.5 விழுக்காடாகும். ஆனால் குஜராத்தில் அது வெறும் 2.8 விழுக்காடு மட்டும்தான். குடும்பத்தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயக்குடும்பமே குஜராத்தில் தற்கொலை செய்து கொள்கிறது.
நர்மதா திட்டத்தில் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்கள். இதுவரை 29 விழுக்காடு பணிதான் நடந்துள்ளது. அதிலும் கட்டுமானப் பணியின் தரம் மிக மோசம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 308 இடங்களில் உடைப்பு(எந்த சிமெண்டில் கட்டினார்கள் என்பது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்..!!) ஏற்பட்டது. லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். உப்பளங்களில் இருந்து உப்பு அடித்துச் செல்லப்பட்டது. 1999ல் 4 ஆயிரத்து 743 குஜராத் கிராமங்கள் குடிநீர் கிடைக்காமல் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் அது 11 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது.
குஜராத்தின் தலைமை நிர்வாகியாக சித்தரிக்கப்படும் எங்கள் முதல்வரின் தலைமையில் கடனாளிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். 2001 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மீதான கடன் 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாகிவிட்டது. இந்தக்கடனைத் தீர்க்க ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இது எங்கள் மாநில பட்ஜெட்டில் 25 விழுக்காடாகும்.
இதற்கிடையில், கல்வித்துறையில் சரிவு. ஏழைகளுக்காக புதிதாக எந்த அரசு மருத்துவமனையும் கட்டப்படவில்லை. மீனவர்கள் பிச்சைக்காரர்களாக மாறி வருகிறார்கள். பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பாலியல் பலாத்காரம், பெண்கள் மீது ஒரு நாளைக்கு சராசரியாக 17 தாக்குதல்கள், கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரத்து 802 தற்கொலைகள் மற்றும் "விபத்தால்" 18 ஆயிரத்து 152 பெண்கள் மரணம் என்ற புள்ளிவிபரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அரசால் தரப்பட்டுள்ளதாகும். உண்மையான விபரம் எவ்வளவு என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
சோமநாத் கோவிலும், காந்தியும் தன்னை ஊக்குவித்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். சோம்நாத் கோவில் மக்களுக்காகக் கட்டப்பட்டது. காந்தியும் மக்களோடு மக்களாக இருந்தவர். உங்களுக்கு உண்மையிலேயே இந்த மாநில மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? இருந்தால் உங்கள் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். இக்கடிதத்தை படித்து முடிவெடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
- மல்லிகா சாராபாய்
தங்கள் பொருளாதார அணுகுமுறையில் புதுமைகளைக் கடைப்பிடிப்பதில் இந்தியா 56வது இடத்திற்கு இறங்கிவிட்டது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. கடந்த ஆண்டு 41வது இடத்தில் இந்தியா இருந்திருக்கிறது.
சுமார் 130 நாடுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்குத்தள்ளிவிட்டது. முதல் பத்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரும் உள்ளன. முதல் ஐந்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் இடம் பிடித்துள்ளது.
இந்த ஆய்வு உலக வங்கி, உலகப் பொருளாதார மாமன்றம், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் ஆகியவற்றில் உள்ள விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதலிடத்தில் ஐஸ்லாந்து இடம் பெற்றிருப்பது ஒட்டுமொத்த ஆய்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமெரிக்காவில் துவங்கி, சர்வதேச அளவில் நெருக்கடியாக மாறிய பொருளாதார சிக்கலால் ஐஸ்லாந்து நாடே திவாலானது. ஒட்டுமொத்த நாடே திவாலாகும் அணுகுமுறைதான் உலகிலேயே சிறந்த அணுகுமுறை என்று ஆய்வு கருதினால் தரவரிசையை மேலிருந்து பார்க்க வேண்டுமா அல்லது கீழிருந்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
வங்கிகள் திவாலில் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா 11வது இடத்தில் இருக்கிறது. அரசுக்கட்டுப்பாட்டில் நிதித்துறையை வைத்திருந்ததால் நெருக்கடியில் சிக்காமல் தப்பிப்பிழைத்த சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புதுமையைக் கடைப்பிடிக்கவில்லையாம்.
அபாயப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் புதுமை என்று இவர்கள் கருதினால், நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு புதுமையே அவசியமில்லை. இவர்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில்தான் ஈடுபட வேண்டும்.
உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசோ இதைக் குறைப்பதற்காக வழிகளைக் கண்டறியாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வெந்த புண்ணில் பம்பரம் விடப்பார்க்கிறது. கடந்த ஆண்டிலிருந்து விலையை விட உருளைக்கிழங்கின் விலை 57.67 விழுக்காடு அதிகரித்துள்ளது. உரித்தால் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயத்தின் விலையைப் பார்த்தாலே கண்ணீர் விட வேண்டியுள்ளது. அரிசியும், கோதுமையும் எங்கே என்னைப் பிடியுங்கள் பார்க்கலாம் என்று மேலே, மேலே போய்க் கொண்டிருக்கின்றன.
இத்தனைக்கும் தற்போது மத்திய அரசின் உணவுப் பொருட்கள் கிடங்குப் பணியாளர்கள் ஒன்றும் ஈயோட்டிக் கொண்டிருக்கவில்லை. அபரிமிதமான அளவில் உணவு தானியங்கள் கிடங்குகளில் பத்திரமாக இருக்கின்றன. தேவையொட்டிகூட மக்களுக்கு விநியோகிக்காத அளவுக்கு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். விலைவாசியை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது பற்றி ஆலோசிக்க அண்மையில் முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதற்குப்பிறகும் கூட கிடங்குகளில் உள்ள தானியங்கள் வெளியுலகைப் பார்க்க முடியவில்லை.
அங்கு எலிகள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றன. கிடங்குகளில் கிடக்கும் உணவு தானியங்களைக் குறைக்க என்ன வழி என்று யோசித்துப் பார்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பாண்டில் கோதுமைக் கொள்முதலைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டு விட்டார்கள். கோதுமை அறுவடைக்காலம் என்பது இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாத வரையிலானதாகும். கொள்முதல் குறித்து இப்போதே ஆலோசனை செய்து விட்டார்கள். கடந்த ஆண்டின் அறுவடைக்காலத்தில் 2.53 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. வரும் காலத்தில் 2.40 கோடி டன்னை மட்டுமே கொள்முதல் செய்யப்போகிறது மத்திய அரசு.
அதோடு, மத்திய அரசின் கொள்முதல் விலையை விட சந்தையில் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மத்திய உணவுக்கழகத்திடம் கொடுக்காமலே போகும் ஆபத்தும் உள்ளது. இதனால் மத்திய அரசின் கொள்முதல் மேலும் சரியும் என்று கருதப்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கையில் மத்திய விவசாயத்துறை அமைச்சரோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எந்த இடையூறும் செய்யாதீர்கள் என்று பால்தாக்கரேயிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.