Monday, December 20, 2010

"பொறுக்கத்" துவங்கிய புரட்சிக்காரர்கள்!




என்.டி.சி(தேசிய பஞ்சாலை கழகம்) மில் தொழிற்சங்க அங்கீகாரத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் மூவாயிரம் வாக்காளர்கள்தான் என்றாலும் பரபரப்பாகவே இது நடந்தது. ஓட்டுப்பொறுக்கிகள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்துச் சொல்லி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாக்குகள் கேட்டது(பொறுக்கியது!!) பலரின் கண்களை விரிய வைத்தது. இதையும் அவர்கள் பெருமையாகவே சொல்லிக் கொண்டார்கள். "பார்த்தீர்களா... எங்களை மக்கள் கவனிக்கிறார்கள்" என்று.

முடிவுகளின்படி நான்கு தொழிற்சங்கங்கள் பத்து விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் வாங்கியுள்ளன. தொமுச(திமுக) 650 வாக்குகளும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சங்கம் 477 வாக்குகளும், சிஐடியு 381 வாக்குகளும், ஐ.என்.டி.யு.சி 200 வாக்குகளும் பெற்றன. இந்த சங்கங்கள்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும். 12 சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தல் முடிவு பற்றி புளகாங்கிதத்துடன் எழுதியுள்ள வினவு, ஒரே ஒரு மில்லில்தான் சங்கமே இருந்தது. தேர்தல் நடைபெற்றதால் மற்ற மில்களில் உள்ள தொழிலாளர்களும் எங்களுக்கு வாக்களித்தார்கள் என்று குறிப்பிடுகிறது. எவ்வளவு பெரிய உண்மை. தேர்தலில் நின்றதால் மற்ற மில்களில் உள்ளவர்களையும் இவர்களால் திரட்ட முடிந்திருக்கிறது. தொழிற்சங்கப் பேச்சுவார்த்தையில் ஒரு பிரதிநிதிக்கான உரிமையைப் பெற்றிருப்பதால் அதை தொழிலாளர்களின் பணி நிரந்தரத்திற்கான கால்கோள் என்று வர்ணித்திருக்கிறார்கள்.

477 வாக்குகள் வாங்கினாலே இவ்வளவு நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமானால், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நின்று லட்சக்கணக்கான வாக்குகளை வாங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கே கால்கோள் விழா நடத்தலாமே...? அதைவிட்டுவிட்டு அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களைத் திரட்டிக் கொண்டிருப்பவர்களை ஓட்டுப் பொறுக்கி என்று விமர்சித்துவிட்டு, "நாங்க 477 ஓட்டு வாங்கிட்டோம்ல" என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதுதான் "புதிய" ஜனநாயகமா?

5 comments:

  1. தொழிற்சங்க தேர்தலில் பங்கேற்பதற்கும் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதற்குமான விளக்கங்கள் வினவு தளத்தில் வந்துள்ளதே. அதையும் சேர்த்து வெளியிட்டால் வாசகர்களுக்கு பயன்படுமே. ஏன் இந்த பாரபட்சம்? உங்களின் இந்தப் பதிவு உங்களின் வயிற்றெரிச்சலைத்தான் காட்டுகிறது.

    ஊரான்
    www.hooraan.blogspot.com

    ReplyDelete
  2. தொழிலாளர்கள் வேறு, மக்கள் வேறா? தொழிற்சங்கத் தேர்தலில் தொழிலாளர்களைத் திரட்டுங்கள்... நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மக்களைத் திரட்டுங்கள்... உத்திதானே?? நீங்கள் எல்லாம் மற்றவர்களுடைய பதிவுகளைப் போட்டுதான் எழுதிக்கொண்டு இருக்கிறீர்களா..?

    ReplyDelete
  3. இப்பதான பொறுக்கத்துவங்கி இருக்காக இருங்க வருவாங்க .. அப்புறம்தான் தெரியும் இவர்களுக்கு ஓட்டு பொறுக்கிகள் என்று திட்டியது எவ்வுளவு தவறு என்று

    ReplyDelete
  4. ////// நட்புடன் ரமேஷ் said...
    இப்பதான பொறுக்கத்துவங்கி இருக்காக இருங்க வருவாங்க .. அப்புறம்தான் தெரியும் இவர்களுக்கு ஓட்டு பொறுக்கிகள் என்று திட்டியது எவ்வுளவு தவறு என்று ///////

    என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு பொறுக்க முடியுமா! அது கட்சிக்குள் இருக்கின்ற தோழர்களை ஏமாற்றிப் பொறுக்குவதாக இருக்கட்டும், பொதுமக்களை கட்சியின் கொடியைக்காட்டி ஏய்த்துப் பொறுக்குவதாகட்டும் உங்களை யாராலும் நெருங்க முடியாதுங்க!

    //////// Ganesh said...
    தொழிலாளர்கள் வேறு, மக்கள் வேறா? தொழிற்சங்கத் தேர்தலில் தொழிலாளர்களைத் திரட்டுங்கள்... நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மக்களைத் திரட்டுங்கள்... உத்திதானே?? நீங்கள் எல்லாம் மற்றவர்களுடைய பதிவுகளைப் போட்டுதான் எழுதிக்கொண்டு இருக்கிறீர்களா..?

    December 20, 2010 9:33 AM /////////

    பொதுவா தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக அறியப்படுகிறது. தேர்தல் என்கிற விசயத்தின் அடிப்படையான அம்சமே ஜனநாயகம்தான். நமது நாட்டில் உங்களால் உயர்த்திப்பிடிக்கப்படும் பொதுத்தேர்தல்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்படுகிறது என்று சொன்னால் மக்களெல்லாம் வாயால் சிரிக்கமாட்டார்கள்.

    இப்படிப்பட்ட அநீதியான, போலிஜனநாயகத்திற்கு வால்பிடித்துக் கொண்டு, அநீதிகளை நியாயப்படுத்தி உங்களைப் போன்ற காம்ரேடுகள் பேசுகின்றார்கள் என்றால் அது ஆளும் வர்க்கத்தை நத்திப் பிழைப்பதற்கான ஒரு உத்திதானேயொழிய வேறில்லை.

    பிழைப்பது, வாழ்வது என்று இரண்டு பண்பாடுகள் இங்கு உண்டு. ஓட்டுப்பொறுக்கிகள் பொதுத்தேர்தல்களின் மூலம் ஆளும்வர்க்கத்தையும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களையும் நத்திப் பிழைக்கிறார்கள். ஆனால், தொழிலாளர்கள் தலைமையேற்று அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துத்தர அவர்களது வாழுகின்ற உரிமையையாவது குறைந்தபட்சம் நிலைநாட்டவே இந்த தொழிற்சங்கத் தேர்தலில் நாங்கள் பங்கேற்றோம்.

    ஜெயலலலிதாவின் ஊழல்களை மறைத்து ஆ.ராசாவின் ஊழல்களை காம்ரேடுகள் சங்கூதிக்கொண்டிருக்கும் காட்சியைப் பாருங்கள்; அதே வேளையில் திமுக வுடன் கூட்டுணி கட்டிக் கொண்டு ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றிக் கூச்சலிட்ட முந்தைய காலத்தையும் சற்று பின்நோக்கிப் பாருங்கள்; உங்களின் தேர்தல் பொறுக்கித் தேர்தல்தான் என்பது உங்களுக்கே தெளிவாகப் புரியும்.

    (நீளம் கருதி அடுத்த பின்னூட்டமாக தொடர்ச்சி வருகிறது.....

    ReplyDelete
  5. 1957-ல் நம்ம சங்கரன் நம்பூதிரி (இ.எம்.எஸ்-தான்)அமைத்த ஆட்சிக்காலத்திலிருந்து, அமெரிக்காவின் அடிவருடி புத்ததேவு காலம் வரை மக்கள் உங்களுக்கு அளித்த ஓட்டுக்களும் அதன் பயன்பாடுகளையும் சற்று நடுநிலையோடு பின்னோக்கிப் பாருங்கள், ஓட்டுப்பொறுக்கி அரசியலின் இழிநிலை என்னவென்று புரியும்.

    கோவை பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான தேர்தலைப் பொறுத்தவரை, அந்த தேர்தலை நடத்துவதற்கே காரணம் எமது அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-தான். சி.ஐ.டி.யூ. உள்ளீட்ட ஏனைய அனைத்து பிழைப்புவாத சங்கங்களும் இத்தேர்தலை நடத்தவிடாமல் த்டுக்கின்ற வேலைகளைத்தான் செய்தன. இந்த மொச்டிக் காட்சிகளையெல்லாம் அந்த தொழிலாளர்கள் நேரடியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

    முடியாமல் தோற்ற பிறகு, சிறிதும் கூச்சமின்றி தேர்தலில் வாக்கு பிச்சை எடுக்கக வந்ததையும் அத்தொழிலாளர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதனால்தான் எண்ணிக்கையில் குறைந்த உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் இல்லாத சங்கம் என்ற அடையாளத்தையும் கொண்ட பு.ஜ.தொ.முன்னணியை; தீவிரவாத சங்கம் என்ற வெட்கங்கெட்ட போலி மார்க்சிஸ்டுகளின் பீதியூட்டப்பட்ட எமது சங்கத்தை அத்தொழிலாளர்கள் துணிவாக ஆதரித்தார்கள்.

    இந்தியா முழுக்க பரந்து விரிந்த சங்கமான உங்கள் சி.ஐ.டி.யூ. சங்கம் அங்கு மூன்றாம் இடத்தைப் பிடித்தது என்பதை விட முற்றாக மண்ணைக் கவ்வியது என்பதுதான் நிகழ்ந்துள்ளது.

    உங்களது பிழைப்புவாத அரசியலுக்கு அத்தொழிலாளர்கள் ஆப்பறைந்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

    உங்கள் கைகளில் இருப்பது சிவப்புக் கொடியல்ல, முதலாளிகள் கழற்றி எறிந்த கோவனத் துணி என்று அத்தொழிலாளர்கள் தங்களது வாக்குகளின் மூலம் அறிவித்து சி.ஐ.டி.யூ.வை இகழ்ந்து ஒதுக்கியுள்ளார்கள்.

    இனி, தொழிலாளர்களின் வழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்ட வெற்றிச் செய்திகளும், முதலாளிவர்க்க சேவகர்களும் தொழிலாளிவர்க்கத் துரோகியுமான சி.ஐ.டி.யூ.வின் மூடுவிழாச் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவரும். வரவைப்போம். நன்றி!

    ReplyDelete