Sunday, March 7, 2010

எதிரலையில் சிக்கிய மக்கள் டிவி!


அடித்து நொறுக்கப்பட்ட தீக்கதிர் வாகனம்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைக்காட்சியான மக்கள் டிவி தோழர் உ.ரா.வரதராசன் மரணம் தொடர்பாக அவதூறான செய்தியை வெளியிட்டது. ஜனநாயக முறையில் அந்த அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையெல்லாம் கூறாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி மீது தாக்குதல் என்று மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. எந்த பத்திரிகை தர்மத்தை மதிக்காமல் அவதூறு செய்தியை மக்கள் தொலைக்காட்சி வெளியிட்டதோ, அந்த அணுகுமுறை அடுத்த நாள் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தியிலும் இருந்தது.


மக்களிடம் ஒரு தங்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்கும் முயற்சியாக தொலைபேசியில் மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் நேரலை என்று ஒளிபரப்பினார்கள். வன்முறை பற்றி ஒரு நேயர் பேச ஆரம்பித்தார். எந்த அரசியல் கட்சியும் இப்படி செய்யக்கூடாது.. வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அதை அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் இப்படியே பேசினால் நேயர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நினைவு வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்தவர், இப்படி மார்க்சிஸ்ட் கட்சி செய்திருக்கக்கூடாது என்கிறீர்களா... என்று தலையை நுழைக்கிறார்.


மற்றொரு நேயரோ, "ஆயுதம் ஏந்துனா மாவோயிஸ்டு, கீழே போட்டா மார்க்சிஸ்டு" என்று பஞ்ச் டயலாக் விட்டார். அதன்பிறகு, மாவோயிஸ்டுகளைப் பற்றியே கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். மாவோயிஸ்டுகளை வளரவிடவே கூடாது என்று அவர் கூறியபோது சலித்துப் போன தொகுப்பாளர் அடுத்த நேயரின் அழைப்பை எதிர்நோக்கத் துவங்கினார்.


காங்கிரசைச் சேர்ந்த இதயத்துல்லா பேசுகையில், இதை மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவரது வாயில் வார்த்தைகளைத் திணிக்க தொகுப்பாளர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. சில நேயர்கள் ஏதோ சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல எந்திரமாகப் பேசினார்கள். சிலர் பிருந்தா காரத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சம்பந்தா, சம்பந்தமில்லாமல் பேசினார்கள். இதற்கிடையில், ஜனநாயகத்தை அணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சும் இந்து முன்னணி போன்ற அமைப்பினர் வன்முறை பற்றி வியாக்கியானம் செய்தார்கள்.


சுவாரஸ்மான நிகழ்ச்சி இருக்க வேண்டுமே? ஒரு பெண்ணின் பேட்டி இடையில் ஒளிபரப்பாகியது. மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றுகிறார். "திடீரென்று சிலர் உள்ளே நுழைந்தார்கள். நான் பதற்றமாயிட்டேன். இன்னும் எனக்கு பட, படன்னு இருக்கு" என்று அவர் குறிப்பிட்டார். அடுத்து திரையில் தோன்றும் தொகுப்பாளர், "படுகாயமடைந்துள்ள பெண் ஊழியரின் பேட்டி அது" என்கிறார். அவர் படுகாயமடைந்ததாக இவர்கள் தொலைக்காட்சியே கூட காட்டவில்லை.
அடுத்து துவங்கியது சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்பு கருத்துகள். நேரலை என்றுதான் போட்டார்கள். புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் மற்றும் வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் ஆகிய இருவரையும் தொகுப்பாளர் வரவேற்கிறார். மாலன் கருத்து தெரிவிக்கிறார். கருத்து மாறுபடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு என்கிறார். கொலை செய்யப்பட்டார் என்ற பொய்யான தகவலை செய்தியாக்கியதோடு, கட்சியின் ஒருபகுதியினர்தான் அந்தக் கொலைக்கு காரணம் என்று ஒளிபரப்பியதா கருத்து மாறுபாடு?


அவர் அதோடு நிற்கவில்லை. ஊடகவியலாளர்களும் மனிதர்கள்தான். அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று கூறத் துவங்கினார். மக்கள் தொலைக்காட்சி செய்தியே தவறு என்று கூறிவிடுவாரோ என்று பயந்த தொகுப்பாளர், வெப்துனியா அய்யநாதனிடம் பேசத்துவங்குகிறார். துவங்கும்போதே, நான் முன்பே கூறியபடி.. என்கிறார் அய்யநாதன். நேரலையாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் அவர் வந்து அமர்ந்ததாகக் காட்டினார்கள். அப்புறம் எப்படி "நான் முன்பே கூறியபடி" என்று கூறுகிறார்? அப்படியால் அவர் முன்பே பேசியது வெட்டப்பட்டு விட்டதா? அந்த வெட்டப்பட்ட பகுதியில் அவர் என்ன பேசினார்? நேரலையில் எதிரலை அடித்துவிட்டதா?இந்த இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தொகுப்பாளர் தங்கள் தொலைக்காட்சி சார்பாக அந்தர் பல்டி ஒன்றை அடித்தார். மக்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களை செய்தியாக்கினோம் என்றார். செய்தி வாசிக்கும்போது இப்படிச் சொல்லவில்லையே? உடற்கூறு அறிக்கை என்றல்லவா கூறினீர்கள்? காவல்துறை அதை மறுத்துள்ளதே? அந்த மறுப்பு செய்தியையாவது நீங்கள் ஒளிபரப்பியிருக்க வேண்டுமே...


தாக்குதலுக்கு கடுமையான கண்டன அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதில் செய்தி ஆசிரியரிடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் பேசியதாகவும்(அவ்வாறு அவர் பேசவில்லை என்பது ஒருபுறம்), மறுப்பு அறிக்கை வெளியிட செய்தி ஆசிரியர் ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். வெறுப்புணர்வைக் கிளப்பிக் கொண்டிருந்த தொகுப்பாளரிடம் இதைச் சொல்லியிருக்கலாமே...??


மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து தாக்கி அட்டுழியம் செய்துள்ளார்களே... பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர்.பி.ராமமூர்த்தியின் படத்தையும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கியவர்கள் விட்டுவைக்கவில்லை. எதையும் தயங்காமல் செய்தி வெளியிடும் மக்கள் தொலைக்காட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள், அதை செய்தியாக்கி வெளியிட்டீர்களா... அவர்கள்தான் உங்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் என்பதால் பத்திரிகை தர்மத்தை காவு கொடுத்து விட்டீர்களா..??


நேரலையில் எதிரலைகள்தான் கிடைக்கும் என்பதால்தான் கடையை சீக்கிரமே இழுத்து மூடிவிட்டு கிளம்பி விட்டீர்களா? மக்கள் சந்தேகங்களை வைத்து செய்தியாக்கினீர்களே... இதோ, இந்த சந்தேகங்களை வைத்து செய்தியாக்குங்கள் பார்க்கலாம்..

* சந்தேகங்களை செய்தியாக்கிய நீங்கள், ஏதோ துப்பறிவு நிறுவனம் போலல்லவா செய்தியை வெளியிட்டீர்கள்... ஏன்?


* ஒருமுறையல்ல, இருமுறை செய்தி ஒளிபரப்பினீர்கள். இதில் பொதுவான நிகழ்ச்சிகளுக்கிடையில் விளம்பரம் வேறு. சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பத்திரிகை தர்மம் இல்லையே... ஏன்..?


* உங்கள் செய்தியை மறுநாள் காலையில் கூட வேறு எந்த ஊடகமும் வெளியிடவில்லையே... அது ஏன்?


* காவல்துறையின் மறுப்பு வந்தபிறகும் எதுவும் நடக்காததுபோல் இருந்தது ஏன்?


* பிரச்சனை ஆனவுடன் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தைதான் செய்தியாக வெளியிட்டோம் என்று தொகுப்பாளர் மூலம் பல்டியடித்தது ஏன்?

* இதெல்லாம் இருக்கட்டும், கட்சி அலுவலகத்தின் முன் நின்ற தீக்கதிர் வாகனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்களே? அது பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிரானதா... இல்லையா??


கேள்விகளை தொடுத்துக் கொண்டே போகலாம். சிறப்புச் செய்தியாக்குவீர்களா?


- சந்தேகம் சாமிக்கண்ணு

3 comments:

 1. Makkal TV seydadhu perum thavarudhaan. Adharkaaga avargal aluvalagam munnal sendru vanmurayil eedupaduvathu thavaru mattumalla, our mosamaana yukthi. Neengal ennadhaan sila aayirame virkum ungal paththirkkaiyi ezhuthinaalum, Makkal TV latchakkanakkana makkalai sendradaiyum oodagam enbathai ninaivilkondirukka vendum. Melum indha tholaikkatchi thamizhil veru endha chalnnelum nadaththa munivaraaadh nalla vivadhangalai nadththi nalla peyar eduthulladhu. (Varadarajan vishayathhtil adhu nadandhukonda vidham adharkku perum izhukku endrapodhilum)

  Varadarajan maranam endra poiseythi veliyittaa irandu natkalukkul, junior vikatan appatamanat poy seythiyai cover storyaaa veliyittathe. En ungal katchi avargalaik kandikkavillai.
  Indha seyal moolam makkalidaye ungal katchiyin meethu oru thavaraana karuththai uruvaakkivitteergal. Erkaneve, varadarajan vizhayaththil sarindhu kidakkum katchiyin bimbathai idhu melum paadhiththu vittadhu.
  Thavrugalai thiruthik kollungal. Engeyaavadhu oru idaththilaavadhu niruththik kollungal.

  ReplyDelete
 2. When Media is being run by Political moghuls - and when Political leaders are - as we all know who they are and what their background is - such things are not surprising !!

  ReplyDelete
 3. One need not to be a political moghul to go like this. Even the Times of India does it many times.

  ReplyDelete