தங்கள் பொருளாதார அணுகுமுறையில் புதுமைகளைக் கடைப்பிடிப்பதில் இந்தியா 56வது இடத்திற்கு இறங்கிவிட்டது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. கடந்த ஆண்டு 41வது இடத்தில் இந்தியா இருந்திருக்கிறது.
சுமார் 130 நாடுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்குத்தள்ளிவிட்டது. முதல் பத்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரும் உள்ளன. முதல் ஐந்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் இடம் பிடித்துள்ளது.
இந்த ஆய்வு உலக வங்கி, உலகப் பொருளாதார மாமன்றம், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் ஆகியவற்றில் உள்ள விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதலிடத்தில் ஐஸ்லாந்து இடம் பெற்றிருப்பது ஒட்டுமொத்த ஆய்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமெரிக்காவில் துவங்கி, சர்வதேச அளவில் நெருக்கடியாக மாறிய பொருளாதார சிக்கலால் ஐஸ்லாந்து நாடே திவாலானது. ஒட்டுமொத்த நாடே திவாலாகும் அணுகுமுறைதான் உலகிலேயே சிறந்த அணுகுமுறை என்று ஆய்வு கருதினால் தரவரிசையை மேலிருந்து பார்க்க வேண்டுமா அல்லது கீழிருந்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
வங்கிகள் திவாலில் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா 11வது இடத்தில் இருக்கிறது. அரசுக்கட்டுப்பாட்டில் நிதித்துறையை வைத்திருந்ததால் நெருக்கடியில் சிக்காமல் தப்பிப்பிழைத்த சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புதுமையைக் கடைப்பிடிக்கவில்லையாம்.
அபாயப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் புதுமை என்று இவர்கள் கருதினால், நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு புதுமையே அவசியமில்லை. இவர்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில்தான் ஈடுபட வேண்டும்.
No comments:
Post a Comment