Thursday, March 25, 2010

மருமகளை மாமியார் எட்டி உதைக்கலாமா..?


மாமியார் தனது மருமகளை எட்டி உதைத்தாலோ அல்லது தனது மகன் விவாகரத்து செய்து விடுவான் என்று மிரட்டினாலோ இந்தியக் குற்றவியல் பிரிவு 498ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 27, 2009 அன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதுமுள்ள மாதர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத்தான் முதலில் இப்பிரச்சனையில் குரல் எழுப்பினார். இத்தகைய பிற்போக்கான தீர்ப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து வலியுறுத்தினார்.


பெண்களுக்கு எதிரான பெரும்பாலான கொடுமைகள் பதிவு செய்யப்படாதவையாகும். தேசிய குற்றப்பதிவுப் பிரிவு இறுதியாக திரட்டிவைத்துள்ள புள்ளிவிபரங்கள் 2007 ஆம் ஆண்டுக்குரியவையாகும். கணவன் மற்றும் கணவனின் உறவினர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து 2007 ஆம் ஆண்டில் 75 ஆயிரத்து 930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு தண்டனை வழங்குவது வெறும் 20 விழுக்காடு வழக்குகளில்தான் இருந்துள்ளது. வரதட்சணை காரணமாக கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கையோ 8 ஆயிரத்து 93 ஆகும். இந்த வரதட்சணைக் கொலை வழக்குகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று கணக்கில் எடுத்தால் 2007 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்தைத் தொடுகிறது.


1961 ஆம் ஆண்டிலிருந்து வரதட்சணை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா எழுகிறது என்று கூறினார்கள். இந்தியா எழுந்ததோ இல்லையோ வரதட்சணை எழுந்தது. வரதட்சணையின் பரிணாம வளர்ச்சி அதிர்ச்சியூட்டும் வகையில்தான் இருந்தது. அண்மையில் ஆந்திராவில் நடந்த ஆய்வில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். மணமகனாக இருந்தால் உச்சபட்ச விலை அவர்களுக்கு விதிக்கப்படுகிறது என்ற தகவல்கள் அம்பலமாகின. விலை உயர, உயர வரதட்சணை தராத அல்லது கொண்டு வராத பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கின்றன. அவ்வாறு தாக்கப்பட்ட மோனிகா என்ற பெண் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தனது கணவர் விகாஸ் சர்மா, விகாசின் பெற்றோர்கள் பாஸ்கர் லால் சர்மா மற்றும் விமலா ஆகியோர் மீது கொடுமை செய்யததற்காகவும், நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் அவர் வழக்கு தொடுத்திருந்தார்.


எட்டி உதைத்து கொடுமை பண்ணினார் என்றும், விவாகரத்து செய்ய வைத்து விடுவேன் என்றும் தனது மாமியார் குறித்து மோனிகா புகார் கூறியிருந்தார். ஆனால் மாமியார் எட்டி உதைப்பதோ, விவாகரத்து செய்ய வைத்து விடுவோம் என்று கூறுவதோ 498ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களல்ல என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இந்த தீர்ப்பின் கருத்தை விளக்கிக் கூறுமாறும், அதை மறுபரிசீலனை செய்யக் கோரியும் தேசிய மகளிர் ஆணையம் மனு போட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா, அல்டமஸ் கபீர் மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புள்ள இரு தரப்புக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்தத்தீர்ப்பு வந்தவுடன், பெண்களின் துயரங்களை இது அதிகப்படுத்தவே செய்யும். பெண்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்களின் பலன்களை நிராகரித்துவிடும் என்று பிருந்தா காரத் குறிப்பிட்டார். சட்ட அமைச்சகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், கொடுமைகள் குறித்து நீதித்துறைக்கு இத்தகைய கருத்து இருப்பது குடும்ப வன்முறைகளுக்கு உரிமம் வழங்குவது போலாகிவிடும். மனைவிகளை அடிப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஊக்குவிக்கும். பெண்களின் உயிரையும், கவுரவத்தையும் காக்க அரசும், நாடாளுமன்றமும் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் வீணாகிப் போய்விடும் என்று குறிப்பிட்டிருந்தார்.


பிருந்தா காரத்தின் கருத்துகளையே தேசிய மகளிர் ஆணையத்தில் மனு பிரதிபலிக்கிறது. 498ஏ பிரிவு என்பது வெறும் வரதட்சணைக் கொடுமை குறித்தது மட்டும்தான் என்று பார்த்து விடக்கூடாது. அது வரதட்ணைக் கொடுமை மற்றும் அந்தக் கோரிக்கையால் ஏற்படும கொடுமை ஆகியவற்றோடு வரதட்சணை கோராமல் புகுந்த வீட்டாரால் நடத்தப்படும் கொடுமைகளையும்கூட சேர்த்தே பார்க்க வேண்டும் என்று அந்த மனு கூறுகிறது. அதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மனு முன்வைக்கிறது. இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக் கொண்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தின் கருத்து மாறலாம் என்ற எதிர்பார்ப்பு மாதர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2 comments:

  1. Now you can post your news on http://www.thalaivan.com also

    Thanks

    ReplyDelete
  2. Good timely article..From the date of judgment no body strongly condemned the judgment except Brinda karat .That is true.Even the "THEEKKATHIR''failed to do that vehemently..Many like this important matters must come in this blog..congratulations.Vimala vidya

    ReplyDelete