Friday, October 30, 2009

நம்மோடு இல்லை தோழர் மோகன்


என்ன தோழர்... ஆபீசுக்கு எப்ப வந்தாலும் பனியனோடதான் உக்காந்துருக்கீங்க... சட்டை சேர்ல தொங்கிட்டு இருக்கு...
அழுக்காகலீன்னா நாளக்கி போட்டுக்கலாமே...

பத்தாண்டுகள் எம்.பி.யாக இருந்துவிட்டு நேற்று மாலை நம்மை விட்டுப் பிரிந்த மகத்தான தோழர் மோகனுக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

* * * * *

எம்.பியான புதிதில் அவரை தில்லியில் ஒருமுறை சந்தித்தேன். என்னுடன் வந்த நண்பர் முதன்முறையாக ஒரு எம்.பி.க்கு எதிரில் அமர்கிறார். காலில் இருந்த ஆணியை அகற்றிவிட்டு ஓய்வில் இருந்த தோழர்.மோகன், வெல்லக்கட்டியையும், நிலக்கடலைப் பருப்பையும் வைத்து எங்களை உபசரித்தார்.

வெல்லத்தை வாங்க அவர் பட்ட சிரமத்தையும் சொன்னார். அப்போதுதான் அவர் எம்.பி.யாகியிருந்தார். வெல்லம் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறார். இந்தியில் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. கடைகளுக்குள் புகுந்து தேடியுள்ளார். அதைக்காட்டியாவது வாங்கிவிடலாம் என்று பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. கடைசியில் தமிழிலேயே கேட்பது என்ற முடிவுக்கு வந்த அவர், வெல்லம் குடு என்றிருக்கிறார்.
உடனே வெல்லம் வந்துவிட்டது. அரைக்கிலோவை வாங்கிவிட்டுத் திரும்பியவருக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் கேட்டால் எப்படி அவர்களால் கொடுக்க முடிந்தது என்ற கேள்வி அவரைப் பல நாட்கள் வலம் வந்து கொண்டிருந்தது. கூ(g)ட்(d) என்றே வட இந்தியாவில் வெல்லத்தை அழைக்கிறார்கள் என்று பிறகுதான் அவருக்கு தெரிய வந்தது. சொல்லி சொல்லி சிரித்தார். அந்த சிரிப்பு, மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும்போது அவரது கண்களில் இயல்பாகவே எழும் அனுதாபம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. வந்து கொண்டேதான் இருக்கும்.

* * * * * *

ஒரு முறை குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருக்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நேரமது. அழகிரி வெற்றி பெற்று விட்டார். எனது மனைவியின் தங்கை அப்போது குறிப்பிட்டார். பிரச்சாரத்துக்கு வராம உங்க மோகன் வேணும்னேதான் ஆஸ்பத்திரில போய்ப் படுத்துட்டாருன்னு பேசிக்குறாங்களே... என்றார். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அவருடைய கணவரும் தலையை ஆட்டி ஆமோதித்தது போல் தெரிந்தது. அப்படில்லாம் இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றேன். பெரும்பாலான அரசியல்வாதிகள் கொள்ளைக்காரர்களாகவே திரிவதால் அரசியல்வாதியைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே மக்கள் நம்பி விடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் தான் நிரபராதி என்று காட்டுவதற்கு இவ்வளவு வலுவான சாட்சியத்தை நம்முன் கொண்டு வந்து தோழர்.மோகன் நிறுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. போயே விட்டார். எந்த நோய்க்காக தேர்தல் பிரச்சாரத்திற்காக வரமுடியாமல் மருத்துவமனையில் படுத்தாரோ, அதே நோயின் கொடுரத்தைத் தாங்க முடியாமல் சென்றுவிட்டார். எந்த வாய்கள் எல்லாம் அவரைத் தூற்றினவோ, யாரெல்லாம் அந்தத் தூற்றுதலை நம்பினார்களோ அவர்களெல்லாம் தோழர்.மோகனிடம் போய் சொல்லவா முடியும்... உங்களை நாங்கள் நம்புகிறோம் என்று.
* * * * * *

2 comments:

  1. I came to know about the noble qualities of Sri. Mohan through you. I felt sad when I read about his demise in newspaper. Geneally, good things never stay with us for too long - maybe that is the way of God to show us what we are worthy of. May his soul rest in peace.

    ReplyDelete
  2. Gowri,

    That friend is Bala i.e. Bala Vinayagam...

    ReplyDelete