பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையை கல்வி வல்லுநர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசோ அனைத்தையும் தனியார் கையில் கொடுத்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறுகிறது. தற்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சரான கபில் சிபல், புரட்சிகரமான(!) பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே போகிறார். அரசுப்பள்ளிகளை தரமாக்க அதிரடி ஆலோசனை ஒன்றையும் கூறினார். அப்பள்ளிக்கட்டிடங்களில் முதல் மாடியில் தனியார்கள் பள்ளி நடத்த அனுமதி அளிக்கப்போவதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
சமூக நல நடவடிக்கைகள் வெட்டுங்கள் என்று இவர்களுக்கு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்த உலக வங்கியே கொந்தளிக்கும் அளவிற்கு மத்திய அரசின் அலட்சியம் உள்ளது. இந்தியாவின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்கல்வி குறித்து உலக வங்கி ஆய்வொன்றைச் செய்துள்ளது. சாம் கார்ல்சன் என்ற ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அதில் திறன்படைத்த உழைப்பாளிகளை உருவாக்கக்கூடிய இடைநிலைக்கல்விக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அவர் கண்டுள்ளார். தற்போது கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஆரம்பக்கல்விக்கு 52 சதவிகிதமும், இடைநிலைக்கல்விக்கு 30 சதவிகிதமும், உயர்கல்விக்கு 18 சதவிகிதமும் செலவழிக்கப்படுகிறது.
கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோதே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்குவோம் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் எழுதியே வைத்தனர். இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதற்கு இடதுசாரிக்கட்சிகள் அளித்த நிர்ப்பந்தமே காரணம். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த மத்திய அரசு, தற்போது இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் அது பற்றிப் பேசுவதேயில்லை.
நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் சுமார் 25 சதவிகித ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களில் முதுநிலைப்பட்டம் அல்லது ஆய்வுப்படிப்பு முடிக்காமல் இருப்பவர்கள் 57 சதவிகிதம் பேராகும். இடைநிலைக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக ஏழு சதவிகித இடங்கள் மட்டுமே உள்ளன. ஆரம்பக் கல்வி நிறைவு செய்பவர்களிலேயே 52 சதவிகிதம் பேர்தான் இடைநிலைக்கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. சீனாவில் இது 91 சதவிகிதமாகவும், இலங்கையில் 83 சதவிகிதமாகவும், வியட்நாமில் 72 சதவிகிதமாகவும் உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மோசவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் ஆரம்பக்கல்வி பயில சுமார் ஆறு கோடி மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று உலகவங்கி ஆய்வு கணிக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான நிலைமை இருக்கிறது. ஆரம்பக்கல்வி முடித்து இடைநிலைக்கல்விக்கு அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பீகாரில் 22 சதவிகிதமாக உள்ளது. ஜார்க்கண்டு மிக மோசமான நிலையில் வெறும் நான்கு சதவிகிதமாக இருக்கிறது. தமிழகத்திலும் வெறும் 44 சதவிகித மாணவர்கள்தான் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக்கல்விக்கு செல்கிறார்கள் என்று உலகவங்கி கூறுகிறது. பொதுவாகவே கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் 92 சதவித மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். படிப்பை நடுவிலேயே கைவிடும் பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகளை தனது ஆய்வறிக்கையில் உலகவங்கி முன்வைத்துள்ளது.
தரமான கல்வி, போதிய வாய்ப்புகள், நலிந்த பிரிவினருக்கு சிறப்பு உதவிகள் என்றெல்லாம் உலகவங்கியால் தரப்படும் பரிந்துரைகள் இந்திய கல்வி வல்லுநர்களால் முன்வைக்கப்பட்டவையே ஆகும். உலக வங்கியின் ஆய்வில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் ஒன்றுதான். அதாவது, மிகவும் அபாரமான கல்வித்திறனை வெளிப்படுத்தக்கூடிய முதல் ஐந்து சதவிகித இந்திய மாணவர்கள் சர்வதேச அளவிலும் முன்னணியில் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வித்திறன் பற்றிய ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட 51 நாடுகளில் இந்தியாவுக்கு 43வது இடம்தான் கிடைத்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் மத்திய அரசுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் பிரச்சனை மத்திய அரசுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. தெரிந்தே மத்திய அரசு செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment