Friday, April 10, 2009

உடல் நலத்தையும் பாதிக்கும் சர்வதேச நெருக்கடி!

அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியில் துவங்கி சர்வதேச பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ள சிக்கலால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. அசோசம் என்ற முதலாளிகளின் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. வேலைப்பளுவால் ஏற்படும் அனைத்து நோய்களாலும் இவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நெருக்கடியால் ஆட்குறைப்பு ஒரு புறம், மறுபுறத்தில் ஊழியர்களின் வேலைப்பளு கடுமையாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கணினித்துறை, ஊடகம், நிதித்துறை சேவை மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கணினித்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மன அழுத்தம், கடுமையான தலைவலி, உடல் பருமன், நீண்டகாலத்தலைவலி, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மையாலும் இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

ஊடகத்துறையில் பணிபுரிபவர்களில் 51 சதவீதம் பேர் பணிச்சுமையால் நோய்வாய்ப்பட்டதாகக் கூறுகின்றனர். அவர்களில் 36 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. ஆய்வுக்காக சந்தித்தவர்களில் 90 சதவீத ஊழியர்கள் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் கணினித்துறைதான் அதிகம் பாதிக்கப்பட்டது என்றாலும், நிதித்துறை சேவைப்பணிகளும் பின்தங்கவில்லை. இதில் 47 சதவீத ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.தொலைத்தொடர்ப்புத்துறையில் 18 சதவீதம் பேர் உடல் பருமன் தொல்லையாலும், 13 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி, ஜவுளித்துறை போன்ற துறைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அத்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப்பாதிப்புகளுக்கு பணியிடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே உள்ளன. கடந்த சில மாதங்களில் பணியிட நெருக்கடியால் உருவான நோய்களுடன் எங்களை அணுகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார் பிரபல மருத்துவர் சங்கீதா ஜெயின்.

வேலை நேரம் நிர்ணயிக்கப்படாமல் பணியாற்றுவது பலரைப் பாதித்துள்ளது. இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்கிறார் சங்கீதா.இந்தத்துறைகளில் நேரமெல்லாம் பார்க்கக்கூடாது என்று ஊழியர்களின் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்கள் காலத்தோடு ஒட்டிப்போகாதவர்கள் என்றெல்லாம் பட்டப்பெயருடன் அலைந்தனர்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கணினித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு என்று பிரத்யேக ஏற்பாடுகள் உள்ளன. தொடர்ந்து கணினித்திரையைப் பார்ப்பவர்களுக்கு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்படுவதை கணினித்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் வேலை நேரம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொள்வதன் மூலமே ஊழியர்களைப் பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.இத்தகைய கருத்துகளை பொதுவாக தொழிற்சங்கமே முன்வைக்கும். கணினித்துறையில் தொழிற்சங்கத்தின் அவசியத்தை இத்தகைய சம்பவங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றன.

No comments:

Post a Comment